திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் ஏற்றப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் கார்த்திகை தீபத்தை, தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணுக்கு எடுத்துச் சென்று ஏற்ற உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இந்து பக்தர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, தர்கா அருகே உள்ள சர்வே கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதேநேரத்தில், நவம்பர் 24-ந் தேதி மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் சர்வேர் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் எனவும் அனுமதி அளித்தது. இந்த தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் நேற்று தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் இன்று (நவம்பர் 25) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ”சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. ஆகையால் இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.
இந்து பக்தர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணா ஆஜராகி, “இது மிகவும் துரதிருஷ்டவசமானது. சில தடை உத்தரவுகள் அமலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. பாரம்பரிய வழக்கங்கள் அனுமதிக்கவில்லை என்பதால் தீபம் ஏற்ற முடியாது எனக் கூறுவதற்கு அறங்காவலர் குழுவைப் பயன்படுத்தியது. ஆனால் மாலையில் கோவில் ஸ்தானிகர்கள், தாங்கள் அத்தகைய கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை எனக் கூறினர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பதற்குத் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. நான் மற்றொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் அந்தத் தீபம் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அந்தத் தீபத்தை எடுத்துச் சென்று தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் ஏற்ற உத்தரவிட வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அரவிந்த்குமார், ”இது தொடர்பாக தனியாக மனுத் தாக்கல் செய்யுங்கள். தேவையான உத்தரவுகளைப் பிறப்பிப்போம்” என்றார்.









