திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் பகுதியில் நவம்பர் 24ம் தேதி ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள தீப மண்டபத்தில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, போராட்டக்காரர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் போலீஸ் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்துத் தமிழக அரசுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றக் கோரி நேற்று போராட்டம் நடத்திய பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் மீது அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கூடுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து, பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.









