திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 24-ந் தேதி மட்டும் சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (நவம்பர் 25) முதல்கட்ட நிலவர அறிக்கை தாக்கல் செய்தார்.



உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கை விவரம்:
நவம்பர் 22-ந் தேதி மாவட்ட ஆட்சியர் தரப்பில் 2 கடிதங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன. முதல் கடிதம் திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலருக்கும் அனுப்பப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின் 13 மற்றும் 14(i) ஆகிய பத்திகளின்படி, நவம்பர் 24-ந் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றும் பணியை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவஸ்தானம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இதர அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேவஸ்தானத்துக்கும் கோவில் செயல் அலுவலருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கடிதத்தின் நகல்கள் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக நவம்பர் 22-ந் தேதி இரவு 7.28 மணிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.
இரண்டாவது கடிதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டது. கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், இந்த விவகாரத்தில் ஆணையர் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நவம்பர் 24-ந் தேதி இரவு 7.32 மணிக்கு கோவில் நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு கிடைத்தது. உடனடியாக கோவில் செயல் அலுவலரைத் தொடர்புகொண்டேன். அறங்காவலர் குழுவின் தீர்மானம் காரணமாக தம்மால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை என்றும், எனது முகாம் அலுவலகத்துக்கு வந்து சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இரவு 8.30 மணியளவில் கோவில் செயல் அலுவலர் அறிக்கை ஒன்றை வழங்கினார். அதில் நவம்பர் 24-ந் தேதி அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, இந்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றவும், கோவிலின் பாரம்பரிய வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்மானத்தின்படி மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவு அனுமதிக்கிறது. அவர்களுக்குப் பதிலாக வேறு யாரையும் அங்கீகரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த நிலவரம் இரவு 8.21 மணிக்கு ஒருங்கிணைப்பு வழக்கறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது.
அறங்காவலர் குழுவின் தீர்மானம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலின் திருவிழாக்கள், பூஜைகள், சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவை தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் சமய மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன.
காலங்காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறையின்படி, மூலவரின் தலைக்கு நேர் மேலே மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தப் பழமையான நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் ஆகம விதிகள் கோவிலின் தனித்துவமான சமய அடையாளமாகும்.
இந்த மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அறங்காவலர் குழு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. வரலாற்றுத் தொடர்ச்சிக்கான ஆவணங்கள், ஆகம ஆதாரங்கள் மற்றும் கோவில் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றவும், கோவிலின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது.
தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெற தொடர் முயற்சி
தீபம் ஏற்றுவதற்கான நபர்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு தேவஸ்தானத்துக்கு வழங்கியிருந்தது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நவம்பர் 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களின் நடவடிக்கைக் குறிப்புகள், நவம்பர் 22-ந் தேதி அனுப்பப்பட்ட கடிதங்கள், நவம்பர் 23-ந் தேதி கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளைத் தெரிவித்தது, சம்பந்தப்பட்ட இடத்தில் கோவில் கண்காணிப்பாளர் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் எனத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நவம்பர் 24-ந் தேதியும் மின்னஞ்சல், நினைவூட்டல் மற்றும் அறிவுறுத்தல் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளர் தலையிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஆனால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்
உச்சநீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு இந்த நீதிமன்றத்தின் எந்த அறிவுறுத்தலையும் நான் வேண்டுமென்றோ, திட்டமிட்டோ மீறவில்லை.
மாண்புமிகு நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மிக உயர்ந்த மரியாதை அளிக்கிறேன். இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒவ்வொரு அறிவுறுத்தலையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறேன். தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்.
தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இருப்பினும், நவம்பர் 24-ந் தேதி அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. அனைத்து ஆதார ஆவணங்களுடன் கூடுதல் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முதல்கட்ட அறிக்கையை நீதிமன்றப் பதிவில் எடுத்துக்கொள்ளுமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.









