பெண் அதிகாரிக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த பாலியல் புகார் விவகாரத்தில், இதைவிடக் குறைந்த பதவியில் இருக்கும் பெண்களுக்கு என்ன நேரிடும் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுங்குவதாகவும், குடியரசுக்கு இது ஒரு துயரமான நாள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பெண் அதிகாரியின் புகார் மீது விரைவான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார் தொடர்பாக ஆர்.திரிசூலி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் நேற்று (நவம்பர் 24) பிறப்பித்த 9 பக்க உத்தரவு வெளியாகியுள்ளது.
அந்த உத்தரவில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளதாவது
7-வது எதிர்மனுதாரராக பெண் அதிகாரி
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை இந்த வழக்கில் 7-வது எதிர்மனுதாரராக இந்நீதிமன்றம் தாமாக முன்வந்து இணைக்கிறது (XXXX being the alleged victim, is Suo Motto impleaded as the seventh respondent to the writ petition).
பெண் அதிகாரியுடன் பேசியது என்ன?
நவம்பர் 23-ந் தேதி இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, மாநில அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யம், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், 7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரியையும் தொடர்புகொண்டுள்ளார் (Pursuant to the directions given by this Court on 23.11.2026, Mr.R.John Sathyam, State Public Prosecutor has got in touch with the Chief Secretary for the State of Tamil Nadu as well as with the seventh respondent). அவர்களது உரையாடலின் எழுத்துப்பூர்வப் பதிவு இந்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (The transcript of their conversation has been placed before this Court).
முறைப்படி புகார் கொடுத்த பெண் அதிகாரி
7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரி நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் தலைமை செயலாளரிடம் முறைப்படி புகார் அளித்ததாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் (The learned Public Prosecutor reports that the seventh respondent lodged a formal complaint with the respondents yesterday at about 03.00 p.m.). சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையமும் அந்தப் புகாரை XXXX என்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்துள்ளது.
மேலும், அந்த முதல் தகவல் அறிக்கை இணையத்தில் கிடைக்காத வகையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் (He further states that immediate steps have been taken to ensure that the FIR is not made available online).
அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு பாராட்டு
அரசு குற்றவியல் வழக்கறிஞர் விரைவாகவும் உடனடியாகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை (The prompt and immediate steps taken by the learned Public Prosecutor are appreciated). 7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரி அளித்த புகாரை மட்டுமல்லாமல், அவர் 2-வது எதிர்மனுதாரரிடம் (தமிழக அரசின் தலைமைச் செயலாளர்) முன்வைத்த கோரிக்கையையும் வழக்கறிஞர் டி.நாகசைலா இந்நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார் (Ms.D.Nagasaila brought to the notice of this Court not only the complaint lodged by the seventh respondent, but also the request that she has made to the second respondent).
தலைமைச் செயலாளருக்கு பெண் அதிகாரி கடிதம்
7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரி சிறப்புத் தூதர் மூலம் தலைமைச் செயலாளருக்குக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நேரத்திற்குள் அந்தக் கடிதம் அவரைச் சென்றடைந்திருக்கும் (She states that the seventh respondent had forwarded the letter to the Chief Secretary via a special messenger. It would have reached him by this time).
நவம்பர் 27-ல் நடவடிக்கை விவரம் தாக்கல்
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் நிர்வாக ரீதியாகவும், அதற்கும் உயர்ந்த மட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, அது குறித்து நவம்பர் 27-ந் தேதி இந்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.
பணியிட பாலியல் துன்புறுத்தல்கள்
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை செய்தல் மற்றும் குறைதீர்த்தல்) சட்டம், 2013-ன் (PoSH Act) கீழ் மாவட்ட ஆட்சியரே மாவட்ட அலுவலராகவும் செயல்படுகிறார். இச்சட்டத்தின் 9-வது பிரிவின்படி, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண், உள்ளகக் குழுவிடமோ அல்லது உள்ளூர்க் குழுவிடமோ எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்டக் குழுவிடம் பெண் அதிகாரியால் புகார் அளிக்க முடியாத தனித்துவமான நிர்வாகச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் மாநில அளவிலான குழு ஒன்று இருக்கிறதா என்பதைத் தெரிவிக்கும் நிலையில் மாநில அரசு குற்றவியல் வழக்கறிஞரும், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞரும் இல்லை. அவர்கள் தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்று இந்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
பெண் அதிகாரியின் புகாரை விசாரிக்க குழு
இதற்கிடையே, 6-வது எதிர்மனுதாரருக்கு (தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்) எதிராக 7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உள்ளகக் குழு ஒன்று அமைக்கப்படுவதை 2-வது எதிர்மனுதாரரான தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். தேவையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அது குறித்து நவம்பர் 27-ந் தேதிக்குள் இந்நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும். (In the meantime, the second respondent shall ensure that an Internal Committee is constituted for the purpose of looking into the grievance that the seventh respondent has against the sixth respondent).
பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்
ஒரு பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தி அவரை அவமானப்படுத்துவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு உத்தியாகும். இத்தகைய வெளிப்படுத்தல்கள், மேலும் நடைபெற்ற தவறுகள் வெளிச்சத்துக்கு வருவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.இந்தச் சூழ்நிலையை உணர்ந்துள்ள அரசியலமைப்புச் சட்டம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளது. (It has been an age-old technique of shaming a women by revealing her identity. It is believed that such kind of revelations “will prevent the disclosure of any further misdemeanors. The Constitution, being alive to this situation, has incorporated special provisions for women and children).
PoSH சட்டம் என்ன சொல்கிறது?
PoSH சட்டத்தைப் பொறுத்தவரை, விசாகா மற்றும் பிறர் எதிர் ராஜஸ்தான் மாநிலம் மற்றும் பிறர் (AIR 1997 SC 3011) என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் இச்சட்டம் உருவானது (Insofar as the PoSH Act is concerned, it came about through the intervention of the Supreme Court in the case of Vishaka and others V. State of Rajasthan and others, AIR 1997 SC 3011).
PoSH சட்டத்தின் 16-வது பிரிவின்படி, பாதிக்கப்பட்ட பெண், எதிர்மனுதாரர் மற்றும் சாட்சிகளின் அடையாளம், முகவரி ஆகியவற்றையும், சமரசம், விசாரணை நடவடிக்கைகள், உள்ளகக் குழு அல்லது உள்ளூர்க் குழுவின் பரிந்துரைகள் தொடர்பான எந்தத் தகவலையும் எந்த வகையிலும் பொதுமக்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது (Section 16 of the PoSH Act mandates that the identity and address of the aggrieved women, the respondent and witnesses as well as any information relating to conciliation, inquiry proceedings and recommendations of the Internal Committee or Local Committee be kept away from the public, press and media in any manner whatsoever).
7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரி நேற்று எழுத்துப்பூர்வமான கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளதால், PoSH சட்டத்தின் 16-வது பிரிவின் விதிகள் தானாகவே நடைமுறைக்கு வந்துள்ளன (As the seventh respondent submitted a written request yesterday, the provisions of Section 16 automatically became operational).
மேலும், 16-வது பிரிவின்படி தடை செய்யப்பட்ட தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக 17-வது பிரிவின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் (Furthermore, under Section 17, action would have to be initiated for disclosures prohibited by Section 16).
பெண் அதிகாரி புகார் தராததன் பின்னணி
புகாரைப் படித்துப் பார்க்கும்போது, இந்த விவகாரம் தேவையின்றி பொதுவெளியில் பேசப்படுவதை விரும்பாத காரணத்தால் 7-வது எதிர்மனுதாரரான பெண் அதிகாரி புகார் அளிக்காமல் இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது (A reading of the complaint shows that the seventh respondent had kept away from lodging a complaint as she did not want unnecessary publicity on the issue).
நினைத்துப் பார்க்கவே நான் நடுங்குகிறேன்
உயர்ந்த பதவியில் இருப்பவருக்கே இத்தகைய சூழ்நிலை இருக்கிறது என்றால், அதைவிடக் குறைந்த பதவியில் இருக்கும் ஒருவர் PoSH சட்டத்தை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நான் நடுங்குகிறேன். (I shudder to think what would happen in case invocation of PoSH Act arises for a person who is holding a lesser post).
மாநில அரசுப் பணியில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவிகளில் ஒன்று மாவட்ட ஆட்சியர் பதவியாகும் (One of the most powerful posts in the service of the State is that of a Collector).
குடியரசுக்கு ஒரு துயரமான நாள்
அத்தகைய உயர்ந்த பதவியில் இருப்பவர் PoSH சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது குடியரசுக்கு ஒரு துயரமான நாளாகும் (It is a sad day for the republic that an occupant of such a post has to lodge a complaint under the PoSH Act).
பாலியல் துன்புறுத்தல் என்பது நேரம், இடம், பொருளாதார நிலை, அந்தஸ்து அல்லது ஒரு பெண் வகிக்கும் பதவி ஆகியவற்றைப் பார்த்து நிகழ்வதில்லை என்பதையே இது காட்டுகிறது (This shows that harassment does not choose time, place, monetary considerations or status or office that a woman occupies).
ஊடகங்களுக்கு தடை
இதுபோன்ற ஒரு விவகாரத்தில் பத்திரிகைகள் சற்று உணர்வுப்பூர்வமாக நடந்துகொண்டிருக்கலாம். இந்த வழக்கில் அது இல்லாத காரணத்தால் இந்நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது (The press could have shown some sensitivity in a matter like this. That being lacking in this case, this Court has to interfere).
எனவே, PoSH சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் வரும் எந்த விவரத்தையும் வெளியிடுவதற்கோ, தகவல் பரிமாற்றம் செய்வதற்கோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கோ பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்படுகிறது (Therefore, there shall be an order injuncting the press and media from publishing, communicating or making known to the public any of the matters covered under Section 16 of the PoSH Act).
சோசியல் மீடியா பதிவுகளை நீக்குக
சமூக வலைதளப் பதிவுகளைப் பொறுத்தவரை, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் பதிவுகளும் உடனடியாக நீக்கப்படுவதை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உறுதி செய்ய வேண்டும் (Insofar as the social media posts are concerned, the Cyber Crime Department of Police shall ensure that whatever posts have been made so far regarding this issue are pulled down forthwith).
மேலும், உள்ளகப் புகார்கள் குழு (ICC) இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வு கண்டு, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரையில், அந்தந்த சமூக வலைதளங்களில் எந்தப் பதிவுகளும் வெளியிடப்படாமல் இருப்பதை சமூக வலைதள நிறுவனங்களும் இடைத்தரகர்களும் உறுதி செய்ய வேண்டும் (In addition, the social media platforms and intermediaries shall ensure that no publications are made on the respective platforms until the Internal Complaints Committee (ICC) finally disposes of the matter and justice is secured to the victim).
ஏதேனும் பதிவுகள் வெளியிடப்பட்டு அவை கவனத்துக்கு வராமல் போனால், காவல்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனத்தின் கவனத்துக்கு அதைக் கொண்டுசென்று, அந்தப் பதிவை நீக்கச் செய்ய வேண்டும் (In the event, any publications are made and escapes attention, the police shall immediately bring it to the notice of the appropriate social media platform and have it removed).
தடையை மீறுவோர் மீது வழக்கு
அது மட்டுமல்லாமல், PoSH சட்டத்தின் 16-வது பிரிவின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் (Apart from that, prosecution must be initiated against persons who violate the terms and conditions of Section 16 of the PoSH Act).
மேற்கொண்டு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மாநில அரசு தெரிவிப்பதற்காக, இந்த வழக்கை நவம்பர் 27-ந் தேதி விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் (For the State to report further progress, call on 27.11.2026).
இதற்கிடையே, இந்த விவகாரம் நவம்பர் 27-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்து, 6-வது எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்படுவதை 5-வது எதிர்மனுதாரரான சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் (In the meantime, the fifth respondent shall ensure that notice is served on the sixth respondent, intimating him that the matter will be taken up on 27.11.2026).
விரைவான, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
குற்றவியல் நடவடிக்கையைப் பொறுத்தவரை, ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் புகாரை விசாரித்து, அது தொடர்பாக விரைவான மற்றும் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயர்நிலை விசாரணையும் கண்காணிப்பும்
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உயர்ந்த பதவியிலும், அரசியலமைப்புச் சட்ட ரீதியான பதவியிலும் இருப்பதால், விசாரணையும் அதன் கண்காணிப்பும் மாவட்ட அளவைவிட உயர்ந்த மட்டத்தில் நடைபெற வேண்டும் என்று கருதுகிறேன் (Since the accused in this case holds a high position and a Constitutional office, I deem it fit that the investigation as well as monitoring of the same should be at a level higher than that of the district level).
யார் யார் விசாரணை அதிகாரிகள்?
எனவே, திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ் விசாரணை அதிகாரியாக இருப்பார். சென்னை காவல்துறை ஐஜி (நிர்வாகம்) என்.காமினி ஐபிஎஸ் இந்த விசாரணையைக் கண்காணிப்பார் (Therefore, Shristi Singh, IPS, Superintendent of Police, Tiruppur shall be the investigating officer and N.Kamini, IPS, Inspector General of Police (Administration), Chennai shall monitor the same).
நவம்பர் 27-ல் விசாரணை
இந்த வழக்கை நவம்பர் 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் (Call the matter on 27.11.2026). இவ்வாறு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் நகல் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை உயர்நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.









