திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ந் தேதி அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் நேற்று (நவம்பர் 24) அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
4 அதிகாரிகளுக்கு எதிராக மனு
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக வழக்கறிஞர் வி.ராமசுப்பு இன்று (நவம்பர் 25) நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
- மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ்
- மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் ஐபிஎஸ்
- இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி.வினய்
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் ஜி.செல்வி
ஆகிய 4 அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 20-ந் தேதி உத்தரவையும், அந்த உத்தரவை நிறைவேற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியையும் அதிகாரிகள் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை கடிதம் அனுப்பியதாகவும், அந்தக் கடிதம் அவர்களிடம் சென்றடைந்துள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.வி.முத்துக்குமார் மூலமாக இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட மதுரை ஆட்சியர்
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோவில் அறங்காவலர் குழு அனுமதி வழங்கவில்லை என்றும், பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என அறங்காவலர் குழு வலியுறுத்தியதால்தான் சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே மீறவில்லை; சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் எனவும் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தமது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.









