கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கை தமிழக அரசு தாமாக முன்வந்து சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ், துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,”டிஜிபியைச் சந்தித்து திமுக சார்பில் புகார் அளிக்க வந்திருந்தோம். ஆனால், டிஜிபி ‘சிங்கப்பெண்’ படையின் பயிற்சி தொடர்புடைய நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். நாங்கள் கேட்பது என்னவென்றால், சிங்கப்பெண் படைக்கு என்ன பயிற்சி கொடுத்தீர்கள்? அவர்களின் வேலை என்ன? தமிழ்நாடு மக்களையும் பத்திரிகையாளர்களையும் பார்த்துக் கேட்கின்றோம், சிங்கப்பெண் படையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? முதலமைச்சர் இதை பெரிய சாதனையாக அறிவித்தார். ஆனால், இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் பார்க்கிறார்கள். இதை நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பேசிக்கொண்டு வருகிறேன். ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய முதல்வர் என்ன செய்தார் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் எத்தனை பாலியல் வன்முறைகள், கொலைகள் நடந்துள்ளன என்று தரவுகளோடு நான் பேசினேன், பல கேள்விகளைக் கேட்டேன். முதல்வர் அன்று எந்த பதிலும் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் சென்று சம்பந்தம் இல்லாமல் அன்று சட்டமன்றத்தில் பதில் சொன்னார். அதனுடைய விளைவு இன்று தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் 75 சதவீதத்திற்கு மேல் ஆளும் கட்சியின் நிர்வாகிகளே ஈடுபடுகின்றனர். ஆளும் கட்சி நிர்வாகிகள் என்றால் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் என்ற அளவில் இல்லை; மாவட்டச் செயலாளர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அந்த அளவில் இருப்பவர்களே பாலியல் வன்முறை உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரைப் பற்றித் தகவல் வெளியானபோது, அதற்கும் சரியான பதில் வரவில்லை. பல மாவட்டச் செயலாளர்கள் அவர்களது கட்சியைச் சேர்ந்த பெண்களையே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் கொடுமை இன்று நடந்துள்ளது.
இதில் உச்சபட்சமாக, ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டு வரலாற்றில் இது போல் இல்லை; ஏன் இந்தியாவின் வரலாற்றிலேயே இப்படி ஒரு கேவலமான விஷயம் எங்கும் நடந்ததில்லை. குடித்துவிட்டு மாவட்ட ஆட்சியரின் கேம்ப் ஆபீஸுக்கே சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் ஆட்சிக்கு வந்தது மே பத்தாம் தேதி. ஜூலை மாதமே இதெல்லாம் நடந்துள்ளது. புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஹனிமூன் பீரியட்’ என்று சொல்லுவோம். ஆறு மாதம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று சொன்னதை, இந்த சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் எல்லோரும் அதே அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டார்கள் போல. ஜூலை மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து இது குறித்துப் பத்திரிகையாளர்கள் எழுத ஆரம்பித்துவிட்டனர். எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி முதலில் இந்தச் செய்தியை வெளியிடுகிறார். ஆனால், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அமைச்சர் சம்பந்தம் இல்லாமல் பதில் சொன்னார்.
116 நாட்களுக்கு முன்பே இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம், “நீங்கள் வேறு மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லியுள்ளார். இதுபோன்று ஒவ்வொன்றாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டுகளை வைத்துத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இது குறித்துப் பேசி வருகிறோம். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று கூட நீதிமன்றத்திற்குச் சென்றதால்தான் சின்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யவே 116 நாட்கள் ஆகியிருக்கிறது. 116 நாட்களாக சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் டம்மி முதலமைச்சர் தூங்கிக்கொண்டிருந்தாரா என்பதை மக்களிடம் கேட்க விரும்புகிறேன்.
குற்றச்சாட்டு வெளியில் வந்த நிலையில், ஆன்லைன் அப்யூசர்ஸ் (Online abusers) பாதிக்கப்பட்ட நபரையே தாக்கித் தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். நான் டிஜிபி அவர்களிடம் கொடுத்திருக்கும் புகார் மனுவில், “குற்றத்தை மறைக்க தலைமைச் செயலாளர் முயற்சி செய்திருக்கிறார், பாதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியிடம் பேரம் பேசியிருக்கிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளேன். தலைமைச் செயலாளர் இந்த விஷயத்தை முதலமைச்சரிடம் சொன்னாரா இல்லையா? சொல்லவில்லை என்றாலும் அது மிகப்பெரிய தவறு. அப்படிச் சொல்லியிருந்தார் என்றால், முதலமைச்சர் ஏன் 116 நாட்களாக இன்றுவரை வாய் திறக்காமல் இருக்கிறார்? அவருக்குப் பயம் இருக்கலாம்; சட்டமன்ற உறுப்பினரைக் கேள்வி கேட்டால், “நீ என்ன ஒழுங்கா?” என்று முதலமைச்சரைப் பார்த்து கேட்டுவிடலாம் இல்லையா? ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று சில அமைச்சர்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அவர்களெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என்றார்.
ரவிசங்கர் விவகாரம்
அதேபோல், துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு மனு கொடுக்க வந்தவரை அடித்து, அந்த வீடியோ வைரலானது. உடனடியாக நடுராத்திரியில் அவரை அழைத்து வந்து அருகில் அமர வைத்து, இருவரும் நண்பர்கள் போல் பேசியது போன்ற வீடியோவும் வெளியே வந்தது. அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் மீண்டும், “என்னை மிரட்டி துணை சபாநாயகர் வீடியோ எடுத்தார்” என்று பேட்டி கொடுத்துள்ளார். அந்தச் சம்பவம் நடந்து 16 நாட்கள் ஆகின்றன. இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, துணை சபாநாயகர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவை அளித்துள்ளோம்.
சிபிஐ விசாரணை
இந்த வழக்கை உடனடியாகத் தமிழக அரசு தாமாக முன்வந்து சிபிஐ-யிடம் (CBI) ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் குற்றத்தை மறைக்க இவர்கள் அத்தனை பேரும் முயற்சித்து வருகின்றனர். எனவே, முதலமைச்சர் மீதும் இந்த அரசின் மீதும் எங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. உடனடியாக வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்; எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று எங்களது கோரிக்கையை மனுவாகக் கொடுத்துள்ளோம் என்றார்.
மாற்றமல்ல துர்நாற்றம்
“அரசு மாறினாலும் அரசு அதிகாரிகள் திமுகவின் ஆதரவாளராக இருக்கிறார்கள், அதனால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று சொல்லப்படுகிறதே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு:
“இந்த மாதிரியான ஒரு குற்றச்சாட்டு இதுவரை எந்த ஆட்சியிலாவது, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலாவது நடந்திருக்கிறதா? இப்போது நடந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் ‘பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ என்று சொன்னீர்கள். என்ன பெரிய மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள்? இதுதான் நீங்கள் கொண்டு வந்திருக்கும் மாற்றமா? ‘துர்நாற்றம்’ என்று தமிழக மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO) மிரட்டியதாகப் புகார் இருக்கிறது. அதேபோல், இளைஞர் அணி நிர்வாகி பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஒரு புகார் உள்ளது. இதேபோல் திமுகவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொகுதியில், காலை உணவு சமைக்கும் ஒடுக்கப்பட்ட பெண் பணியாளரை பிடிஓ (BDO) திட்டியுள்ளார். எனவே, அந்தப் பணியாளர் எம்எல்ஏ-வான வசந்தம் கார்த்திகேயன் வீட்டிற்குச் சென்று முறையிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் பிடிஓ-விற்கு ஃபோன் செய்து, ‘ஏன் இது போல் திட்டுகிறீர்கள்?’ என்று பேசியுள்ளார். ஆனால், எம்எல்ஏ என்றும் பாராமல் அந்த பிடிஓ சட்டமன்ற உறுப்பினரைத் தவறாகப் பேசியுள்ளார். எனவே, வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரி எல்லோரிடமும் அப்படித்தான் பேசுவதாகப் புகார் வந்துள்ளது. இதில் வசந்தம் கார்த்திகேயன் மட்டுமல்ல, விமலா, புவனேஸ்வரி, சுப்பிரமணியம் ஆகிய மூன்று பேர் அந்த அதிகாரி மேல் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதில் வசந்தம் கார்த்திகேயன் மீது பழியைப் போட்டுவிட இந்த அரசு நினைக்கிறது.
அதேபோல், இளைஞர் அணி நிர்வாகி ஆஷிக் மீதான புகார் குறித்து நாங்கள் விசாரித்தோம். ஆஷிக் அந்தப் பெண்மணி மேல் 3 மாதங்களுக்கு முன்பே, ‘இவர் என்னை ஏமாற்றியுள்ளார்’ என்று ஒரு புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தவே இல்லை. திமுக நிர்வாகி மீது ஒரு குற்றச்சாட்டு என்றவுடன், இதை பெரிதாக ஊதி அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். காவல்துறை அவர்களிடம்தானே இருக்கிறது? சரியான ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
“எம்எல்ஏ மீது கைது நடவடிக்கை இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். தமிழக மக்களும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதல்வர் தயவுசெய்து தூக்கத்திலிருந்து எழுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.









