திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் நவம்பர் 24-ந் தேதி மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து கடந்த நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் இன்று (நவம்பர் 25) விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது இந்து பக்தர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணா, உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பதற்குத் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அரவிந்த் குமார், இது தொடர்பாக உரிய நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனுவை விரைவில் தாக்கல் செய்வதாக இந்து பக்தர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.









