திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்ததாகவும், ஆனால் தீபம் ஏற்றுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதேநேரத்தில், நவம்பர் 24-ந் தேதி மட்டும் சர்ச்சைக்குரிய தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் இன்று (நவம்பர் 25) நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
24.11.2026 அன்று மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு யாருக்கேனும் அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக எந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியருக்கு தேவஸ்தானம் தெரிவிக்கவில்லை.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20.11.2026 மாலை முதல் 24.11.2026 மாலை வரை, மாண்புமிகு இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளின் வரம்புக்கு உட்பட்டு, அந்த உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் தொடர்ச்சியாகவும் நல்லெண்ணத்துடனும் செயல்பட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் 14(i), 14(ii), 14(iv) மற்றும் 18 ஆகிய பத்திகளின் கீழ் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நான் நிறைவேற்றியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த உத்தரவின் அடிப்படையில் 3 கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 3-வது கூட்டத்தில் உத்தரவின் ஒவ்வொரு அறிவுறுத்தலும் அதன் துணைப் பிரிவுகள் வாரியாக விவாதிக்கப்பட்டது.
மேலும் தீபம் ஏற்றும் குழுவில் இடம்பெறுவோர் மற்றும் அவர்களின் எண்ணிக்கை, நேரம், செல்லும் பாதை, கால அளவு, அனுமதிச் சீட்டு முறை, கண்காணிப்பாளர்கள் மற்றும் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டன.
அந்த முடிவுகள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு, அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டன.
இந்த முடிவுகள் களத்தில் செயல்படுத்தப்படுவதையும் நான் தொடர்ந்து கண்காணித்தேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
23.11.2026 அன்று இரவு முன்னேற்பாடுகள் தொடர்பான போட்டோக்களும் வீடியோ ஒன்றும் கோவில் செயல் அலுவலரிடம் இருந்து பெறப்பட்டன.
24.11.2026 அன்று காவல் ஆணையருடன் சட்டம்–ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசித்ததுடன், சம்பந்தப்பட்ட இடமும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
கண்காணிப்பாளர்கள், நிர்வாக மாஜிஸ்திரேட்டுகள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உரிய இடங்களில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் தொலைபேசி மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலமாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.









