அன்பில் மகேஷுக்கு 2 நாள் போலீஸ் காவல்.. முத்துக்குமார், சரவணனுடன் ஒன்றாக விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

By Mathi

|

Published on 25 Nov 2026, 12:28 PM

Anbil Mahesh Police Custody

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மீண்டும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி வகித்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக ரூ.400 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் மீது இன்று (நவம்பர் 25) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில், தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வசூலித்தது யார்? வசூலிக்கப்பட்ட பணம் யாரைச் சென்றடைந்தது? என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய வேண்டியுள்ளது.

இதற்காக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 3 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

2 நாள் போலீஸ் காவல்

காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று காலை 11 மணி முதல் நாளை (நவம்பர் 26) மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

மேலும் முத்துக்குமார், சரவணன் ஆகியோரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிபதி விதித்த நிபந்தனைகள்

போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் உடலளவிலோ, மனதளவிலோ துன்புறுத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் போலீஸ் விசாரணைக்கு முன்னரும், விசாரணை முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னரும் 3 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கில் அன்பில் மகேஷ், முத்துக்குமார், சரவணன் ஆகிய 3 பேரையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel