சென்னையில் நடந்த வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
சென்னை கோவளத்தில் இன்று (நவம்பர் 25) தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாவது ‘வெற்றி’ முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர்ஜோசப் விஜய் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, ரூ.7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 15 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நிறைவடைந்த 6 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அத்துடன், 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இன்றைய இரண்டாவது ‘வெற்றி’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ஆட்சிப் பொறுப்பேற்ற 200 நாட்களில் மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 1,98,557 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









