உச்ச நீதிமன்றத்தை விட உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவரா நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை முன்வைத்து கலவரத் தீயை மூட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கும்பல் தொடர்ச்சியாகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இதுவரை கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் விழாவாகத்தான் கடைப்பிடிக்கப்பட்டது. வீட்டு வாசல்கள், திண்ணைகள், குப்பைக் குழிகளில் கூடச் சின்ன அகல் விளக்குகளை வைத்து கார்த்திகை தீபத்தை அவரவர் விருப்பத்திற்கு ஏற்பக் கொண்டாடும் மரபும் பழக்கவழக்கமும் தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல்தான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை ஒரு பிரச்சினையாக்கி, இதை நாடு தழுவிய பிரச்சினையாகவும், இந்துக்களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கும் கடுமையான முயற்சியிலும் மதவெறியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டைப் போலவே கடந்த ஆண்டும் ஒரு கடுமையான பிரச்சினையை நீதிமன்றத்தின் மூலம் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போதைய திமுக தலைமையிலான அரசு, நீதிமன்றம் தவறான முறையில் உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் வழக்கமாகத் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை மதித்து, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் மேல் உள்ள மண்டபத்தில் அந்தத் தீபத்தை ஏற்றியது.
அதைப் போலவே கடந்த ஆண்டு வழக்கின் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தவறான தீர்ப்பை அளித்தது. அங்கிருக்கும் அளவைக் கல்லுக்குத் ‘தீபத்தூண்’ என்று புதிய பெயரைச் சூட்டி, அதில் தீபத்தை இந்த ஒருமுறை மட்டும் ஏற்ற வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். தொல்லியல் துறையினரும் அது அளவைக் கல்தான், தீபத்தூண் அல்ல என்று தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றனர். ஆனால் எதற்காக உச்ச நீதிமன்றம் இப்படித் தவறான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
வழக்கமாக ஏற்றப்படும் இடம், அந்தக் கோயிலின் ஆகம விதிகள், கோயிலின் அறங்காவலர் குழு – இவர்கள்தான் தீபம் ஏற்றும் பணியைப் பல நூறு ஆண்டுகாலமாக அங்கு நிறைவேற்றி வருகின்றார்கள். ஆகவே முழுக்க முழுக்க அவர்களுக்குத்தான் உரிமை உள்ளது. யார் யாரோ இந்த அறங்காவலர் குழுவிற்கு சம்பந்தமில்லாமல் கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதற்காக நீதிமன்றம் தவறான உத்தரவைப் பிறப்பிப்பது என்பது மிக மிகத் தவறானது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி ஆகம விதிகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் தீபத்தைப் பொறுத்தவரை உச்சிப் பிள்ளையார் கோயில் மேலே உள்ள மண்டபத்தில் ஏற்றுவது என்பதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று. அதைத்தான் இப்போதும் தமிழ்நாடு அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்பளித்து நேற்று நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகள்.
நேற்றைய தினம் தானாக முன் வந்து யாரோ ஒருவர் வழக்கு தொடுத்து, ‘அதை நான்தான் விசாரிப்பேன்’ என்ற முறையில் மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் முன்பாக மீண்டும் தீபம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு ஒரே நீதிபதியிடம் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எப்படி வருகிறது? இதற்கான விளக்கத்தைத் தலைமை நீதிபதி தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர் மட்டும்தான் நீதிபதியா? மீண்டும் மீண்டும் இதுபோன்று கோயில் சம்பந்தமான விவகாரங்கள், தீபம் தொடர்பான வழக்கை அவரே விசாரிக்கிறார். அவர் ஏற்கனவே விசாரித்து வழக்கு இரு நீதிபதிகள் அமர்விடம் போய், அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், அதே நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பது என்பதையெல்லாம் மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்படி என்றால் தானடித்த மூப்பாக தனி அதிகாரம் படைத்த ஒருவர் என்பதைப் போல நீதிபதி சுவாமிநாதன் நடந்து கொள்வதை எப்படிப் புரிந்து கொள்வது?
மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது; கோயில் அறங்காவலர் குழு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறது; அதை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். நிறைவேற்றவில்லை என்றால் பதிலளிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்திற்குத்தானே தவிர, மீண்டும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது? அப்படியானால் உச்ச நீதிமன்றத்தை விட உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவரா நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் என்ற இயல்பான கேள்வி எழுகிறது. நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டும், ஆதார ஆவணங்களின் அடிப்படையிலும் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் சொந்தக் கருத்துகளையும் நம்பிக்கைகளையும் தீர்ப்பின் மீது திணிப்பது என்பது தவறான போக்குகளுக்கு வழிவகுக்கும்; தவறான தீர்ப்பாகத்தான் அது அமையும். ஆகவே, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் நேற்றைய அத்துமீறல் சம்பந்தமாகத் தலைமை நீதிபதி உரிய விசாரணை மேற்கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்துகிறோம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் கூடி மிக அமைதியான முறையில் தீபத் திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றைக்கும் தீபத் திருவிழா நடக்கவில்லை என்ற முறையில் சில அமைப்புகளும் சில நபர்களும் பொய்ப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வேறு எங்கும் பிரச்சினை இல்லை; திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு அயோத்தியை உருவாக்க நாங்கள் திட்டமிடுவோம் என்று ஏற்கனவே பாஜகவின் தலைவர் எச். ராஜா சொன்னது நம் அனைவருக்கும் நினைவில் உள்ளது. ஆகவே அவர்களது நோக்கம் தீபத் திருவிழாவோ, முருகன் மீதுள்ள பக்தியோ அல்ல; மாறாக எப்படியாவது ஒரு மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் ஒவ்வொரு இடங்களிலும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். மண்டைக்காடு தொடங்கி திருப்பரங்குன்றம் வரையில் பல முயற்சிகளில் தமிழ்நாட்டின் இந்த மதவெறி சக்திகள் – ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பல் தொடர்ந்து அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பின்மைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எப்போதும் ஆதரவாகவும் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அது நேற்றைய திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான பிரச்சனையிலும் தங்கள் ஒருமைப்பாட்டை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆகவே மதவெறி சக்திகளின் இத்தகைய செயல்களுக்கு எக்காரணம் கொண்டும் யாரும் இடம் தரக்கூடாது. அரசு இந்தப் பிரச்சனையில் மிக விழிப்பாக இருந்து தீபத் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறது. உச்ச நீதிமன்றமும் தீபம் ஏற்றும் ஒரு பிரச்சனையை அகில இந்தியப் பிரச்சனை போல, நாடு தழுவிய ஒரு பிரச்சனையைப் போல உச்ச நீதிமன்றம் வரை விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. கோயில் சம்பந்தப்பட்ட பிரச்சனை – அவர்கள் எங்கே தீபம் ஏற்றுகிறார்களோ அங்கே ஏற்றட்டும் என்ற முறையில், சாதாரணமான பிரச்சனையை இந்திய நாட்டின் பிரச்சினையாக மாற்றி இருக்கிறார்கள். இதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு உச்ச நீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பின் வாயிலாக நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்களுடைய உணர்வுகளுக்கும் மரபுகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பளித்துத் தெளிவான இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.









