ஆபாச மெசேஜ் விவகாரம்: தொட்டதற்கெல்லாம் கைதா? – கார்த்தி சிதம்பரம் எம்பி கேள்வி

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Nov 2026, 4:26 PM

எல்லா விவகாரங்களிலும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்பி தெரவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “என்னைப் பொறுத்தவரை இப்போது ஆட்சியர் முறையாகப் புகார் அளித்துள்ளார். அவர் ஒரு படித்த அதிகாரி. அவரது புகாரைச் சட்டப்படி விசாரித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைக் காவல்துறையும் அரசாங்கமும் எடுக்க வேண்டும்,” என்றார்.

ADVERTISEMENT

ஆட்சியர் புகார் அளித்து மூன்று மாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஏன் ஆட்சியர் காலதாமதமாகப் புகார் அளித்தார் என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். இந்தச் செய்தி கசியும்போதே, அரசாங்கமும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கட்சியும் இதைக் கையில் எடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். சில நேரங்களில் இந்தக் கட்சிக்கு பெரிய அளவில் அனுபவம் கிடையாது. இப்போதுதான் அவர்கள் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர். அதனால் இதை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது; இதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இதுபோன்று ஏதாவது பிரச்சினைகள் வந்தால், அவர்கள் கட்சிக்குள்ளேயே அதைக் கண்டறிந்து சரி செய்திருக்க வேண்டும். இரண்டாவதாக, தலைமைச் செயலாளரும் உள்ளார்ந்த நிர்வாக நடைமுறை வழியாக இதைக் கையாண்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால், இப்போதுதான் முறையான புகார் வந்துள்ளது; அதனால் சட்டப்படி நடவடிக்கைகள் இப்போதுதான் எடுக்க முடியும்,” என்றார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தாண்டி, கட்சித் தலைவராக முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அவர்களுடைய கட்சிக்கு நான் ஆலோசனை வழங்கும் ஆலோசகர் இல்லை. இந்தச் செய்தி கசிந்த போதே இதை அவர்களின் கட்சி முறையாக கையாண்டிருக்க வேண்டும். இப்போது விவகாரம் சட்டரீதியாகச் சென்றுவிட்டதால், கட்சியைத் தாண்டி சட்டரீதியான நடவடிக்கைகளே தொடர வேண்டும்,” என்றார்.

ADVERTISEMENT

எம்.எல்.ஏ.-வைக் கைது செய்வது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “எல்லா விவகாரங்களிலும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது ஊரில் தொட்டதற்கெல்லாம் கைது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நமது நீதி அமைப்பில் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகள் நடக்கின்றன. ஒருவர் இன்னொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்றோ அல்லது சாட்சிகளைக் கலைப்பார் என்றோ நினைத்தால் மட்டுமே கைது செய்ய வேண்டுமே தவிர, அவர் வெளியில் இருப்பதால் அடுத்தவரின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து இல்லை என்று காவல்துறை நினைத்தால் அவரைக் கைது செய்ய வேண்டாம். எல்லா வழக்குகளிலும் எல்லாரையும் கைது செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை தேவையில்லாத ஒரு விஷயம். பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யாமலேயே விசாரணை நடத்தி, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரலாம்,” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel