ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் நிலவும் பல்வேறு சமூகப்பிரச்சினைகளை ஒழிக்க அவ்வப்போது இலக்குகள் மற்றும் செயல்திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த இலக்குகளை அடைய இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் உறுதியேற்றுச் செயல்படுகின்றன. அந்த வகையில் ஆயிரமாவது ஆண்டு நிறைவையொட்டி, 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, எட்டு அம்ச வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்தது. 2015ம் ஆண்டை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் இந்தியா சாதித்தவை பற்றியும், இன்னும் அடைய வேண்டிய இலக்குகளையும் பற்றிய ஆய்வறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முதல் இலக்கான வறுமை மற்றும் பசியை ஒழிப்பதில் இந்தியா திட்டமிட்டதை விட முன்னேறி சாதனை படைத்துள்ளது. 1990ம் ஆண்டில் இந்தியாவின் வறுமையின் விகிதம் 47.8 சதவிகிதமாக இருந்தது. இதை பாதியாகக் குறைப்பதற்காக 2015ம் ஆண்டில் 23.9 சதவிகிதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் தாண்டி தற்போது இந்தியாவின் வறுமை விகிதம் 21.9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிக்கும் இரண்டாவது இலக்கில் இந்தியா கிட்டத்தட்ட பூர்த்தி செய்துவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 100 சதவிகிதத்தில், இந்த கல்வியாண்டின் இறுதியில் 15 வயது முதல் 24 வரை உள்ள இளைஞர்களில் 93.38 சதவிகிதம் பேர் ஆரம்பக் கல்வி பெற்றவர்களாக இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வேறுபாட்டை ஒழித்து பெண்களின் முன்னேற்றத்திற்கான மூன்றாவது இலக்கைச் செயல்படுத்தியதில் இந்தியா பின்தங்கியுள்ளது. அடிப்படைக் கல்வியில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி பெற்றிருக்கும்போதும், விவசாயம் அல்லாத சம்பள வேலை வாய்ப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவிகிதத்திலிருந்து வெகு கீழே 22.28 சதவிகிதம் மட்டுமே பெண்களின் வேலைவாய்ப்பு நிலை நிலவுகிறது.
குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில் இந்தியா ஓரளவு வெற்றிகண்டுள்ளது. ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் தற்போது ஆயிரம் குழந்தைகளுக்கு 48 ஆகக் குறைந்துள்ளது. ஒரு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை, ஆயிரம் குழந்தைகளில் 39 பேர் இறக்கின்றனர். என்றபோதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கியிருக்கிறோமே தவிர, அடையவில்லை.
பிரசவ காலத்து இறப்பு விகிதம் இந்தியாவில் 1990ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 437 ஆக இருந்தது. இது 109 ஆகக் குறைக்கப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு ஆய்வின்படி இந்த விகிதம் 167 ஆக இருந்தது. 2015ம் ஆண்டு பிரசவ காலத்து இறப்பு விகிதம், ஒரு லட்சம் பேருக்கு 140 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் நான்கில் ஒரு பங்காக பிரசவ காலத்து இறப்பு விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பாதிப்பில் முதலிடத்தில் இந்தியா இருந்த காரணத்தால், இதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக கர்ப்ப காலத்திலேயே எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு பிறக்கும் குழந்தைகளை எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா பெரும் வெற்றி பெற்றுள்ளது. 2013ம் ஆண்டின் இறுதியில் 0.32 சதவிகிதமாக இது குறைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தொலை தொடர்புத்துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 2014ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் தொலை தொடர்பு வசதி பெறுவோரின் சதவிகிதம் 76 ஆகும். அதில் இண்டர்நெட் பயனாளிகளின் விகிதம் 20.83 ஆக உள்ளது.
இந்த ஆண்டு கூடிய ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான இலக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட எட்டு இலக்குகளைப் பிரித்து மொத்தம் 17 வகையான சமூகப்பிரச்சினைகளுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியா பல்வேறு துறைகளிலும் அசாத்திய வளர்ச்சி பெற்றுவருவதால் இந்த இலக்குகளை எளிதில் அடையும் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட வளர்ச்சித்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.









