குரியன் ஜோசப் குழு கலைப்புக்கு ஸ்டாலின் கண்டனம்- விசிக எதிர்ப்பு!

By Mathi

|

Published on 7 Nov 2026, 10:36 AM

Kurian Joseph Committee DMK VCK

மத்திய–மாநில உறவுகள், மாநில சுயாட்சி உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்ததற்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதல்வர் விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளதை மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.அந்த பதிவில், “State Rights ❌ Theatre Rights ✅” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். அதாவது, “மாநில உரிமைகள் ❌ திரையரங்க உரிமைகள் ✅” என்று பதிவிட்டு, விஜய் அரசின் முன்னுரிமைகளை அவர் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி: மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான ‘ ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு’ கலைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. “அந்தக் குழுவுக்குச் சட்ட அதிகாரம் இல்லை, அதன் பணி சட்ட ஆணையத்தின் பணிகளையே அதுவும் செய்வதாக இருக்கிறது” என அதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.

ஒன்றிய அரசிலும் சட்ட ஆணையம் உள்ளது. ஆனாலும் மத்திய- மாநில உறவுகளை ஆராயும் பணி சட்ட ஆணையத்திடம் கொடுக்கப்பட்டதில்லை. சர்க்காரியா கமிஷன், பூஞ்ச்சி கமிஷன் ஆகியவற்றிடம்தான் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT

நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைக்கக்கூடாது என்று எமது தலைவர் திருமாவளவன் அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கருத்தைச் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்திலேயே வன்னி அரசு
தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தின் அறிக்கையின் முதல் பகுதியே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆவணமாகத் திகழ்கிறது. அதன் இறுதி அறிக்கை ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து மிக முக்கியமானப் பரிந்துரைகளை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை அது தந்துள்ளது. இறுதி அறிக்கை நிறைவுசெய்யப்படும் நிலையில் இருக்கும்போது இந்த அவசர முடிவு ஏன் எடுக்கப்பட்டதெனப் புரியவில்லை. சட்ட ஆணையம் அந்தப் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மாண்புமிகு முதலமைச்சர் விஜய், இந்த முடிவை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel