பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் புத்தகங்களுக்கு உரிய முறையில் ISBN பதிவு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கோவையில் கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, முதலமைச்சர் விஜய் பெரியார் அறிவுலகம் நூலகத்தைத் திறந்து வைத்தார்.
இதற்கிடையில், பெரியார் அறிவுலகம் அமைக்க உத்தரவிட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், பெரியார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘அகல்விளக்கு பதிப்பக’ நூல்கள் போலியானவை மற்றும் பதிவு செய்யப்படாதவை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து ‘சிந்தை’ என்ற இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, புத்தகங்கள் போலியானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
இதையடுத்து, அகல்விளக்கு பதிப்பகத்திலிருந்து பெரியார் அறிவுலக நூலகத்திற்காக 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களின் தலைப்புகளும் எழுத்தாளர்களின் பெயர்களும் இதுவரை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்டத்தில் அறிமுகமில்லாத வகையில் இருந்ததால், இவை போலிப் புத்தகங்கள் என எழுத்தாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “பெரியார் நூலகம் என்ற பெயரில் ஊழல் நடந்துள்ளது; உரிய விசாரணை நடத்தப்படும். ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் அகல்விளக்கு பதிப்பகத்தில் வெளியான புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயர்களும் விவாதப் பொருளாகின. குறிப்பாக, ‘திரிஷா விஜய்’ எழுதிய ‘அதிகாரத்தின் நிழலில் – இந்தியாவில் துன்புறுத்தலின் அரசியல்’ என்ற புத்தகம் அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் ஈர்த்தது.
விஜய் பாலு, விஜய் ஆதித்யன், விஜய் செல்வம், சுமேகா விஜய், ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி, அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர் போன்ற இதுவரை எழுத்துலகில் பரிச்சயமில்லாத புதிய பெயர்கள் அகல்விளக்கு பதிப்பகத்தின் நூலாசிரியர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வரிசையில், செந்தட்டி, சந்தாலி, நரவேட்டை ஆகிய நூல்களை எழுதிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சக்தி சூர்யா பெயரில் ‘மக்கள் காவல் பாதுகாப்பு’ என்ற புத்தகம் இடம்பெற்றுள்ளது. ஆனால், தான் அந்த நூலை எழுதவே இல்லை என்று சக்தி சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “சக்தி சூர்யா என்ற பெயரில் அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக இதுவரை 5 புத்தகங்களை நண்பர்கள் படம் எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அகல் விளக்கு பதிப்பகம் இயங்கினால், அல்லது சக்தி சூர்யா என்றொரு எழுத்தாளர் பொறுப்பேற்றுக் கொண்டால் பிரச்சினையில்லை; இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினை சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பெரியார் அறிவுலகத்தில் உள்ள அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் போலி நூல்களில் ‘ஜூன்’ மாதம் என முத்திரையிடப்பட்டுள்ளது. அதில் உள்ள தேதி, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்திய அரசின் ISBN (பன்னாட்டுத் தரப்புத்தக எண்) அமைப்பில் அகல்விளக்கு பதிப்பகம் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அகல்விளக்கு பதிப்பகம் சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ISBN-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புத்தகங்களில் பிழைகள் உள்ளதாகவும், அவை போலிப் புத்தகங்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து சர்ச்சைகள் வெடித்து 24 மணி நேரம் கடந்தும், இதுவரை அந்தப் புத்தகங்களை எழுதியதாகக் கூறப்படும் எந்தவொரு எழுத்தாளரும் இதுகுறித்து வெளிப்படையாக அறிக்கைகளோ பேட்டிகளோ தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான புத்தகங்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது முகநூல் பதிவில், “அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். ‘நூல்களைப்’ பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!

கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
பிப்ரவரி, மார்ச் வரையிலும் கூட பரிந்துரை பணிகள் முடியவில்லை. ஏப்ரலில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். அப்படியானால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே பணத்தை எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.
பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் ‘பெயர்’களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது.”என தெரிவித்துள்ளார்.










