நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய திரைப்படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட அதே பெயரை மீண்டும் தனது படத்துக்குச் சூட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நவம்பர் 7-ந் தேதி தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 237-வது திரைப்படத்தின் பெயரையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ராஜ்கமல் நிறுவனம் நேற்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ளது.
‘KH237’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனும் அருண்குமாரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது.
ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நரைத்த தலைமுடி, தாடியுடன் கமல்ஹாசன் கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார். ரத்தக்கறை படிந்த காரின் அருகே அவர் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் படம் அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2003-ல் ‘சண்டியர்’ பெயருக்கு என்ன நடந்தது?
கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம் 2004-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. ஆனால் அந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘சண்டியர்’. 2003-ஆம் ஆண்டு இந்தப் பெயரில் படத்தை உருவாக்குவதாக கமல்ஹாசன் அறிவித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி ‘சண்டியர்’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தென் தமிழகத்தில் சாதி சார்ந்த வன்முறைகளும் மோதல்களும் நிலவிய சூழலில், ‘சண்டியர்’ என்ற பெயர் சாதிய ஆதிக்கத்தையும் வன்முறையையும் பெருமைப்படுத்துவதாக அமையும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், ‘சண்டியர்’ என்பது பொதுவாகச் சண்டையிடுபவர், முரட்டுத்தனமானவர் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதால் அதற்கு சாதிய அடையாளம் கொடுக்க வேண்டியதில்லை என்ற எதிர் கருத்தும் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அத்துடன் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்களும் நடைபெற்றன. படப்பிடிப்பிலும் பிரச்சினைகள் எழுந்தன. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ‘சண்டியர்’ என்ற பெயரை மாற்ற கமல்ஹாசன் ஒப்புக்கொண்டார்.
‘சண்டியர்’ எப்படி ‘விருமாண்டி’ ஆனது?
இப்படி பெயர் சர்ச்சையைத் தொடர்ந்து ‘சண்டியர்’ என்ற தலைப்பைக் கைவிட்ட கமல்ஹாசன், படத்துக்கு ‘விருமாண்டி’ எனப் பெயர் மாற்றினார். 2004-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிராமப்புற சாதிய மோதல்கள், பழிவாங்கும் உணர்வு, கொலை, சிறை வாழ்க்கை, மரண தண்டனை ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு ‘விருமாண்டி’ உருவாக்கப்பட்டிருந்தது. ஒரே சம்பவத்தை வெவ்வேறு நபர்களின் பார்வையில் சொல்லும் திரைக்கதை அமைப்பு அந்தப் படத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது.
குறிப்பாக, மரண தண்டனைக்கு எதிரான கருத்தையும் வன்முறையின் விளைவுகளையும் அந்தப் படம் பேசியிருந்தது. இன்றுவரை கமல்ஹாசனின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘விருமாண்டி’ கருதப்படுகிறது. ந்நிலையில், அந்தப் படத்துக்காக 2003-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட ‘சண்டியர்’ என்ற பெயரை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசன் பயன்படுத்தியுள்ளார்.

புதிய ‘சண்டியர்’ படத்தில் யார் யார்?
புதிய ‘சண்டியர்’ திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசன், ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிப்பாளர்களாகவும், எஸ். டிஸ்னி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே கமல்ஹாசனின் ‘விக்ரம்’, ‘இந்தியன் 2’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சண்டைப் பயிற்சியை அன்பறிவ் சகோதரர்கள் மேற்கொள்கின்றனர். சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்கிறார். சி.எஸ். பாலச்சந்தர் தயாரிப்பு வடிவமைப்பையும், அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர்.
‘ரத்தத்தால் மட்டுமே பழிவாங்க முடியும்’
இந்தப் படத்தின் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்பட்ட விளம்பர வாசகமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “REVENGE can only be settled in BLOOD” என்ற ஆங்கில வாசகம் பயன்படுத்தப்பட்டது. அதாவது, பழிவாங்குதலுக்குத் தீர்வு ரத்தத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது. இதுவும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

மீண்டும் சர்ச்சை எழுமா?
2003-ஆம் ஆண்டு ‘சண்டியர்’ என்ற பெயருக்கு எழுந்த எதிர்ப்பால் படத்தின் பெயரையே மாற்ற வேண்டிய நிலை கமல்ஹாசனுக்கு ஏற்பட்டது. தற்போது அதே பெயரில் புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளதால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமோ என்கிற பரபரப்பில் இருக்கிறது திரை உலகம்.










