மத்திய–மாநில உறவுகளை ஆராய முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வது, ஆளுநர்களின் அதிகாரங்களைக் குறைப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, கட்சித் தாவலுக்குத் தடை விதிப்பது, ஜிஎஸ்டியில் மாநிலங்களின் அதிகாரங்களை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கியமான பரிந்துரைகளை வழங்கிய இந்தக் குழு கலைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் உரிமைகள், நிதி அதிகாரங்கள், ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் உயர்நிலைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
இதன்படி, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இந்தியாவில் மாநிலங்களின் அதிகாரங்கள் படிப்படியாக மத்திய அரசிடம் குவிந்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய–மாநில அதிகாரப் பகிர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப் பட்டியல்களுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. பள்ளியில் குழந்தைகள் கற்கும் மொழி, மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சை, மாநிலங்கள் விதிக்கும் வரிகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், தேர்தல்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது என்றும் குழு விளக்கியிருந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் கூட்டாட்சித் தத்துவமும் ஒன்று என்பதை உச்சநீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உறுதி செய்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
குரியன் ஜோசப் குழு வழங்கிய முக்கியமான பரிந்துரைகள் என்ன?
ஆளுநர்கள் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்காமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கும் நடைமுறையைத் தடுக்க வேண்டும் என்று குரியன் ஜோசப் குழு பரிந்துரைத்திருந்தது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஒரு மசோதாவைச் சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், அடுத்த 15 நாட்களுக்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் முடிவெடுக்காவிட்டால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் தொடர்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை, உயர்நீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கைத் தவிர, ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பக்கூடாது என்று குழு பரிந்துரைத்திருந்தது.
அதேபோல, மத்திய சட்டங்களுடன் முரண்பாடு ஏற்படும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே பொதுப்பட்டியல் தொடர்பான மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புவதற்கு முன்பு ஆளுநர் எழுத்துப்பூர்வமான சட்டக் கருத்தைப் பெற வேண்டும். மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கான காரணங்களையும் 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது.
ஆளுநர்களை நியமிக்கும் முறையை மாற்ற வேண்டும்
மாநில ஆளுநர்களை நியமிப்பதற்கான தற்போதைய நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று குழு தெரிவித்திருந்தது. மாநில சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அங்கீகரிக்கும் 3 பேரின் பெயர்களில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் ஆளுநராக நியமிக்க வேண்டும். ஆளுநர்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே 5 ஆண்டு பதவிக்காலம் வழங்க வேண்டும். அந்தப் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கூடாது.
ஆளுநரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கும் மாநில சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் நிறைவேற்றும் தீர்மானம் அவசியமாக இருக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுநராக நியமிக்கப்படுபவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது. பொதுவாழ்வில் மதிப்புமிக்கவராக இருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில் அரசியல் கட்சிப் பதவியிலோ, அரசின் நிர்வாகம், சட்டமன்றம் அல்லது நீதித்துறைப் பதவிகளிலோ இருந்திருக்கக்கூடாது. ஆளுநர்களின் விருப்ப அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக 13-வது அட்டவணையைச் சேர்க்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவுகளிலும் தெளிவான விதிமுறைகள் இருக்க வேண்டும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பொதுவாக 7 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
சட்டப்பேரவைக் கூட்டங்களைக் கூட்டுவதில் ஆளுநர்கள் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தக்கூடாது. பெரும்பான்மையை இழந்ததாக நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாத நிலையில் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும். ஆளுநரின் சிறப்புரையுடன் தொடர்புடைய அரசியலமைப்புச் சட்டத்தின் 176-வது பிரிவை நீக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது.
ஒரே நாடு ஒரே மொழி கொள்கைக்கு எதிர்ப்பு
இந்தியாவின் மொழிக் கொள்கையில் அடிப்படையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குரியன் ஜோசப் குழு பரிந்துரைத்திருந்தது. மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் நிரந்தரமாகத் தொடரும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 343-வது பிரிவைத் திருத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் நிரந்தர இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்தி மொழியை மட்டும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 351-வது பிரிவை மாற்றி, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் பாதுகாத்து வளர்ப்பதற்கான பிரிவாக மாற்ற வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் போஜ்புரி, ராஜஸ்தானி, சத்தீஸ்கரி, மகதி உள்ளிட்ட 53 தனித்துவமான மொழிகளை இந்தியின் வட்டார வழக்குகளாகக் கணக்கிடும் நடைமுறையை மாற்ற வேண்டும்.
10 லட்சத்துக்கும் அதிகமான தாய்மொழிப் பேச்சாளர்களைக் கொண்ட மொழிகளை 8-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மொழிகளுக்கு ஒரு லட்சம் பேச்சாளர்கள் என்ற குறைந்த வரம்பை நிர்ணயிக்கலாம். மும்மொழிக் கொள்கைக்குப் பதிலாக ஆங்கிலம் மற்றும் மாநில மொழி அல்லது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட இருமொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கூடுதல் மொழிகளைக் கற்பது மாணவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் உறுப்பினர்கள் எந்த இந்திய மொழியிலும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கான உடனடி மொழிபெயர்ப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது. உயர்நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்துவதற்குக் குடியரசுத் தலைவரின் முன்அனுமதி பெற வேண்டிய நடைமுறையை நீக்க வேண்டும். மாநிலத்தின் அலுவல் மொழியில் உயர்நீதிமன்ற விசாரணைகள், தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை வழங்க அனுமதிக்க வேண்டும். அவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 368-வது பிரிவை மாற்ற வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
பெரும்பாலான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாநிலங்களை மட்டும் பாதிக்கும் திருத்தங்களுக்கு அந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒப்புதலைப் பெற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் 3 மாதங்கள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் கொள்கைகளையும் சட்டத்திலேயே தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும்.
மாநிலங்களின் எல்லைகளை மாற்ற ஒப்புதல் அவசியம்
மாநிலங்களின் எல்லைகளை மாற்றுவது, மாநிலங்களைப் பிரிப்பது, புதிய மாநிலங்களை உருவாக்குவது போன்ற விவகாரங்களில் மத்திய அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 2, 3 மற்றும் 4-வது பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றுவதற்கு அந்த மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் அவசியமாக இருக்க வேண்டும்.புதிய மாநிலம் உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலம் ஒப்புதல் அளிக்காவிட்டால், பாதிக்கப்படும் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தலாம். அந்த வாக்கெடுப்பில் குறைந்தபட்சம் 75% வாக்காளர்கள் பங்கேற்று, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அந்தத் திட்டத்தைத் தொடர வேண்டும்.
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது அந்த மாநிலத்தின் எல்லைகளை மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கூடாது. புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள யூனியன் பிரதேசங்களில், டெல்லியைத் தவிர்த்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்தி மாநில அந்தஸ்து அல்லது அண்டை மாநிலத்துடன் இணைவது குறித்து மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
தொகுதி மறுவரையறையை 2126 வரை ஒத்தி வைக்க வேண்டும்
மக்களவைத் தொகுதிகளை மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்யும் தற்போதைய நடைமுறையை 2126-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது. அனைத்து மாநிலங்களின் மொத்தக் கருவுறுதல் விகிதமும் (Total Fertility Rate) தேசிய சராசரியிலிருந்து 10% அதிகம் அல்லது குறைவு என்ற வரம்புக்குள் வரும் நிலை 2126-ஆம் ஆண்டுக்கு முன்பே ஏற்பட்டால், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அதற்கு முன்பே எடுக்கலாம் என்றும் குழு தெரிவித்திருந்தது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், எதிர்காலத் தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என்பதற்காக இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது.
மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550 ஆகவே வைத்திருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர் எண்ணிக்கையையும் தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும். அதேநேரத்தில், ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் தொகுதி எல்லைகளை அவ்வப்போது மறுவரையறை செய்யலாம்.
மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு மத்திய அளவிலும், சட்டப்பேரவைத் தொகுதி மறுவரையறைக்கு மாநில அளவிலும் தனித்தனி ஆணையங்களை அமைக்க வேண்டும். மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 6 இடங்களை வழங்க வேண்டும். சட்டப்பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தமாக 6 இடங்கள் ஒதுக்க வேண்டும். நியமன உறுப்பினர் முறையை நீக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு
மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை குரியன் ஜோசப் குழு நிராகரித்திருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காகக் கொண்டுவரப்பட்ட 2024-ஆம் ஆண்டின் 129-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. மக்களவை, மாநிலங்களவை, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மத்திய அளவிலான தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.
மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைத் தனித்த மாநிலத் தேர்தல் ஆணையங்கள் நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலைத் தயாரித்துப் பராமரிக்கும் அதிகாரமும் மாநிலத் தேர்தல் ஆணையங்களிடம் இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது.
கட்சி தாவினால் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
கட்சித் தாவல் தடைச் சட்டத்திலும் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. கட்சித் தாவல் காரணமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அடுத்த 6 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மொத்தமாக மற்றொரு கட்சியுடன் இணைவதற்கு அனுமதிக்கும் விதிவிலக்கை நீக்க வேண்டும். ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகத் திட்டமிட்டு மொத்தமாகப் பதவிகளை ராஜினாமா செய்வதையும் கட்சித் தாவலாகவே கருத வேண்டும்.
கட்சித் தாவல் தொடர்பான வழக்குகளில் சபாநாயகர் முடிவெடுக்கும் அதிகாரத்தை நீக்கி, சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றத்திடம் அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும். இத்தகைய வழக்குகளை 60 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்குகளையும் உச்சநீதிமன்றம் 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். கட்சித் தாவல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட உறுப்பினரை இடைக்காலமாக இடைநீக்கம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் அவர் வாக்கெடுப்புகளில் பங்கேற்கவோ, அமைச்சர் பதவி உள்ளிட்ட ஊதியம் பெறும் பதவிகளை வகிக்கவோ அனுமதிக்கக்கூடாது. கட்சித் தாவலுக்காகப் பணம், பதவி, ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதைக் குற்றமாக அறிவிக்க வேண்டும்.
கட்சிக் கொறடாவின் உத்தரவு நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் பண மசோதாக்களுக்கு மட்டுமே கட்டாயமாக இருக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாகவும், வாக்களிப்பதை அடிப்படைக் கடமையாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வயதை 25 ஆக ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும். விசாரணைக் கைதிகள், போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவலில் இருப்பவர்கள், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளவர்கள் ஆகியோருக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாநில அரசுகளின் அதிகாரங்களை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் அதிகாரம் கல்வித் தரத்துக்கான அடிப்படை விதிமுறைகளை நிர்ணயிப்பதுடன் மட்டுமே இருக்க வேண்டும். மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது.
நாட்டின் முன்னணி 100 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை யுஜிசி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளின் நேரடி மேற்பார்வையிலிருந்து விடுவித்து, அவற்றுக்குக் கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும். இந்த நடைமுறையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஆய்வு செய்ய வேண்டும். மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை நீக்க வேண்டும். மாநில அரசுகள் தகுதியான, அரசியல் சார்பற்ற நபர்களை வேந்தர்களாக நியமிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், தேசியத் தேர்வு முகமையை (NTA) கலைத்து, நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை முன்பு செயல்பட்ட பல்வேறு அமைப்புகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்திருந்தது.
நீட் தேர்வை அனைத்து நிலைகளிலும் ரத்து செய்ய வேண்டும்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது குரியன் ஜோசப் குழுவின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றாகும். இதற்காக 2019-ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் 14-வது பிரிவை நீக்க வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET-UG, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET-PG, சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான NEET-SS ஆகிய அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளும் பல்கலைக்கழகங்களும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மருத்துவக் கல்வி முடிவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள NExT தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்புகளில் தற்போது நடைமுறையில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு முறைக்குப் பதிலாக, மாநிலங்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கும் ஒதுக்கீட்டு முறையை உருவாக்க வேண்டும். மாநிலங்கள் தங்களது பள்ளித் தேர்வு முறைகளைச் சீரமைத்து, வெவ்வேறு கல்வி வாரியங்களின் மதிப்பெண்களைப் புள்ளியியல் முறையில் ஒப்பீட்டுக்கு ஏற்றதாக மாற்றி, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம் என்றும் குழு தெரிவித்திருந்தது.
சுகாதாரத் திட்டங்களுக்கு மத்திய அரசு 80% நிதி வழங்க வேண்டும்
பொது சுகாதாரம் மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், அந்தத் துறையில் மத்திய அரசின் தலையீடுகளைக் குறைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான செலவில் குறைந்தபட்சம் 80% தொகையை மத்திய அரசே ஏற்க வேண்டும். மற்ற நிதியுதவிகளை மாநிலங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்க வேண்டும்.
மத்திய சுகாதாரத் திட்டங்களின் பெயர்களில் இந்தி, ஆங்கிலத்துடன் சம்பந்தப்பட்ட மாநில மொழிக்கும் இடமளிக்க வேண்டும். மருத்துவக் கல்வி, மருத்துவப் பணியாளர் நியமனம், மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றில் மாநிலங்களின் அதிகாரங்களைப் பாதுகாக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் நிரந்தரப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும்
ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசுக்கு உள்ள வாக்குரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் குரியன் ஜோசப் குழு பரிந்துரைத்திருந்தது. இதற்காக 4 மாற்று வழிமுறைகளை குழு முன்வைத்திருந்தது.
முதல் வழிமுறையின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர் வருகையை 50%-லிருந்து மூன்றில் இரண்டு பங்காக உயர்த்த வேண்டும். மத்திய அரசின் வாக்குப் பங்கு 33.33% ஆகவும் மாநிலங்களின் மொத்த வாக்குப் பங்கு 66.67% ஆகவும் தொடரலாம். ஆனால் முடிவெடுப்பதற்கான வாக்குக் கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும்.
இரண்டாவது வழிமுறையின்படி, மத்திய அரசின் வாக்குப் பங்கை 33.33%-லிருந்து 20% ஆகக் குறைத்து, மாநிலங்களின் மொத்த வாக்குப் பங்கை 80% ஆக உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கான வாக்குப் பங்கை அவற்றின் மக்கள்தொகை, முந்தைய 3 ஆண்டுகளின் குறைந்தபட்ச ஜிஎஸ்டி வருவாய்ப் பங்களிப்பு அல்லது இந்த இரண்டுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கலாம் என்றும் குழு தெரிவித்திருந்தது.
மூன்றாவது வழிமுறையின்படி, மத்திய அரசுக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு வாக்கு என்ற முறையை உருவாக்க வேண்டும்.
நான்காவது வழிமுறையின்படி, முடிவுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன், மத்திய ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இல்லாத மாநிலங்களில் வாக்கெடுப்பில் பங்கேற்கும் மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெற வேண்டும்.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைச் சட்டப்படி கட்டாயமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளாக இருக்கக்கூடாது. மாநில அரசுகள் தங்களது மாநில ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 சதவீதப் புள்ளிகள் வரை அதிகரிக்கவோ குறைக்கவோ அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் பதவியை மத்திய நிதியமைச்சரும் மாநில நிதியமைச்சர்களும் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் வகிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சிலுக்குத் தனித்த, சுதந்திரமான செயலகத்தை உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட தனி தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும். ஒரே பொருளுக்கு அதன் பேக்கிங், வடிவம் அல்லது பயன்பாட்டின் அடிப்படையில் வெவ்வேறு ஜிஎஸ்டி வரி விகிதங்களை நிர்ணயிக்கும் நடைமுறையைத் தவிர்க்க வேண்டும். வரி விகித மாற்றங்களை ஆண்டுக்கு ஒருமுறை அறிவித்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இந்தச் சீர்திருத்தங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் குழு பரிந்துரைத்திருந்தது.
குரியன் ஜோசப் குழுவை கலைத்த விஜய் அரசு
இவ்வாறு மத்திய–மாநில உறவுகள் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்திலும் நிர்வாக நடைமுறைகளிலும் விரிவான மாற்றங்களைப் பரிந்துரைத்த குரியன் ஜோசப் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது. தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமும் மத்திய–மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்யும் பொறுப்பைப் பெற்றிருப்பதால், இரு அமைப்புகளின் பணிகளிலும் கணிசமான ஒற்றுமை இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அரசாணை நவம்பர் 6-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. குரியன் ஜோசப் குழுவின் அனைத்து பதிவுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் மாநில சட்ட ஆணையத்திடம் உடனடியாக ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், குரியன் ஜோசப் குழு ஏற்கெனவே வழங்கிய முதல் ஆய்வறிக்கையின் பரிந்துரைகள் மீது விஜய் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்தும், அடுத்தகட்ட ஆய்வறிக்கைகளை மாநில சட்ட ஆணையம் தயாரிக்குமா என்பது குறித்தும் அரசாணையில் விளக்கப்படவில்லை.










