மத்திய–மாநில உறவுகள் குறித்து ஆராய முந்தைய திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்துள்ள விஜய் அரசு, அந்தக் குழுவின் அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் உரிமைகள், நிதி அதிகாரங்கள், ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் உயர்நிலைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
இதன்படி, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் மாநில சுயாட்சியை உறுதி செய்யவும் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்களைப் பரிந்துரைப்பது இந்தக் குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.
குறிப்பாக, மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாக அதிகாரம், நிதி உரிமைகள் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீடுகள் குறித்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இந்தக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த பிப்ரவரி 16-ந் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தொடர்ந்து மத்திய–மாநில உறவுகள் தொடர்பான பிற அம்சங்களை ஆய்வு செய்து அடுத்தகட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.
இந்தக் குழுவின் முதல் ஆய்வறிக்கை தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. சுமார் 408 பக்கங்களைக் கொண்ட முதல் அறிக்கையில் 10 அத்தியாயங்கள் இடம்பெற்றிருந்தன. ஆளுநர்களின் அதிகாரங்கள், தொகுதி மறுவரையறை, மொழிக் கொள்கை, கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, ஆளுநர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்; சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் வாக்குரிமையை அதிகரிக்க வேண்டும்; மக்களவைத் தொகுதிகளின் மாநிலவாரியான ஒதுக்கீட்டை 2126-ஆம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட முக்கியமான பரிந்துரைகள் முதல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
முதலில் 2 பகுதிகளாக அறிக்கை தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் தலா 10 அத்தியாயங்களைக் கொண்ட 3 பகுதிகளாக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. காலநிலை மாற்றம், டிஜிட்டல் நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் போன்ற புதிய அம்சங்களையும் அடுத்தடுத்த அறிக்கைகளில் சேர்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி தொடர்பாக 1969-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவுக்குப் பிறகு, மத்திய–மாநில உறவுகளை விரிவாக ஆராய அமைக்கப்பட்ட மற்றொரு முக்கியமான குழுவாக குரியன் ஜோசப் குழு கருதப்பட்டது.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து விஜய் அரசு நவம்பர் 6-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையில் கூறப்பட்டுள்ள காரணம் என்ன?
தமிழ்நாடு அரசின் நவம்பர் 6-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 704-ல் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 202 மூலம் மறுசீரமைக்கப்பட்டது. இந்த மாநில சட்ட ஆணையத்துக்கு மத்திய–மாநில உறவுகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை மறுஆய்வு செய்தல், தமிழ்நாட்டின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட மத்திய–மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவுகள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், அரசாணைகள் ஆகியவை மத்திய–மாநில உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்டது.
இந்த உயர்நிலைக் குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல (non-statutory body). மேலும், இந்தக் குழுவின் பணிகளுக்கும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் கணிசமான ஒற்றுமை இருப்பதுடன், அவற்றின் செயல்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக உள்ளன.

எனவே, இந்த விவரங்கள் அனைத்தையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, மத்திய–மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, உயர்நிலைக் குழுவின் செயலாளர் மற்றும் குழு அலுவலர், குழுவின் அனைத்து பதிவுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் உடனடியாகத் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவைத் தொடர்புடைய அனைவருக்கும் தெரிவித்து, உத்தரவு நிறைவேற்றப்பட்ட விவரத்தை அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.










