- சக்திவேல் வீராசாமி
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சினிமாக்களில் இடம்பெறும் அதீத வன்முறைக் காட்சிகள் மற்றும் சமீபத்திய பள்ளி வன்முறைச் சம்பவங்கள் குறித்த தீவிரமான விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன. மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கம்.
கடந்த சனிக்கிழமை இந்திய மக்களுக்கு நிம்மதியான வார இறுதியாக இல்லை.


முதலாவதாக, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரத்தின் அரசுப் பள்ளியில், 8 வயது சிறுவன் ஒருவன், 6 வயது சிறுமியை வகுப்பறையில் வைத்து அடித்து உதைக்கும் வீடியோ வெளியானது. செங்கல்லை தூக்கி அந்தச் சிறுமியின் முகத்தில் அவன் போட்ட காட்சி, கோடி மக்களை ஒரே நேரத்தில் நெஞ்சைப் பிடிக்க வைத்தது. இதற்கு அடுத்து அதே நாள், ஆந்திராவின் ரப்தாடு கிராமத்தின் அரசுப் பள்ளியில், வகுப்பறைக்குள் எலக்ட்ரிக் ரம்பத்துடன் நுழைந்து தன்னை காதலிக்க மறுத்த பெண்ணையும், அவள் தோழியையும் அறுத்தான் ஒரு கயவன்.
இந்த இரண்டு கொடூர சம்பவங்களின் பின்னணியில், ஒரு பெரும் விவாதம் இந்திய மக்களிடையே எழுந்தது. அது, சமீபகாலமாக இந்திய சினிமாக்களில், வரைமுறையின்றி, பொறுப்புணர்வு இன்றி, மிக நேர்த்தியான அழகியலோடு காட்சிப்படுத்தப்படும் அதீத வன்முறைக் காட்சிகள். இந்த முறை வெறும் அந்த நேர உணர்ச்சிவசத்திற்காக, இந்திய மக்கள் எதையும் சொல்லவில்லை. மாறாக, மிகவும் நிதானமான எண்ணவோட்டத்துடன், அளந்தெடுத்த வார்த்தைகளுடன், அவர்கள் இந்திய சினிமாக்களின் போக்கை கடுமையான கேள்விகளால் துளைத்தார்கள்.
ஆம்! சமீபகால இந்திய சினிமாக்களின் அதீத வன்முறைக் காட்சிகள், ரத்த வெறியாட்டத்தை மிகவும் சாதாரணப்படுத்திவிட்டன!

இந்தப் பிரச்சனை ஆரம்பிப்பது கே.ஜி.எஃப்-ல் இருந்து. இந்த கே.ஜி.எஃப் தான் இந்திய சினிமாவை ஒரு புதிய கட்டத்துக்கு நகர்த்தியது. கேங்ஸ்டர் ஹீரோ, அவனது அறிமுகமே ரத்தச் சகதியில், கத்தியை சாணைப் பிடித்தபடி அவனுக்கான பில்டப் பாடல், அடியாளின் கையை உடைத்து, அதைக் கொண்டு முடியைக் கோதுவது, ஹீரோயினின் உறவினர்களை அடித்து மாஸ் காட்டி அவளை இம்ப்ரஸ் செய்வது, இறுதியாக வில்லனின் தலையை வெட்டி அரியாசனத்தில் அமர்வது. இப்போது இந்தப் படத்தை திரும்பிப் பார்க்கையில், ‘அதில் என்ன அவ்வளவு வன்முறையா’ என்று தோன்றும். ஆனால், இங்கு தான் ஆரம்பித்தது அனைத்தும்.
இந்த கே.ஜி.எஃப்-க்கு பிறகு இந்தியாவின் பெரும்பான்மை இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் ஒரு பித்து பிடித்தது. அதாவது, டார்க் ஒளிப்பதிவு, கேங்ஸ்டர் அல்லது வேறு ஏதேனும் வயலன்ட் பின்னணி கொண்ட ஹீரோ, கண்டிப்பாக அவன் கொஞ்சம் அப்நார்மலாக, சைக்கோத்தனம் கொண்டவனாக இருப்பான், அவனுக்கு பெரிய பெரிய துப்பாக்கிகள், வித விதமான கத்திகளின் மீது பிரியமிருக்கும், ரத்தத்தில் முங்குவான், தேவைப்பட்டால் குடிப்பான், அவனுக்கான பில்டப் பாடல் பார்த்து பார்த்து இளைக்கப்படும், படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அவனை ஹைப் செய்வதற்காகவே இருக்கும். மொத்தத்தில் வன்முறை சூழ்ந்த ஆரா ஃபார்மிங் மட்டும் தான் இலக்கு.

அடுத்து வந்தது, கைதி. இதில் கார்த்தி பக்கத்தின் கதை சாதாரணமாகத் தெரிந்தாலும், அர்ஜூன் தாஸின் கதை கொடூரமாக காட்சிப்படுத்தப்பட்டது. அவன் மாத்திரை நசுக்கி பவுடர் இழுப்பான், அந்த இழுத்த போதையோடுச் சென்று குற்றம் செய்வான். அவனுக்கு என்று தனியாக ஒரு மாஸ், தீம் மியூசிக், ஆரா என அத்தனையும் அழகியலோடு அதில் இணைக்கப்பட்டது. மேலும், இந்தப் படத்தில் பவுடர் இழுத்து போதையேற்றிக் கொண்ட நாலு பேரால், ஒரு போலீஸ் ஸ்டேஷனையே சூறையாட முடியும் என்றும் காட்டியிருந்தார் லோகேஷ். இறுதியில் இந்தப் படத்தில் எந்த வில்லனும் கொல்லப்பட மாட்டார்கள். இதோடு, இன்னொரு பெரிய வில்லனை மாஸாக அறிமுகப்படுத்தி இந்தப் படம் முடியும்.

கைதிக்குப் பிறகு, கார்த்திக்கு படங்கள் குவிந்ததா தெரியவில்லை. ஆனால், அர்ஜூன் தாஸுக்கு குவிந்தது. அவர் இளைஞர்களின் ஆதர்ச நாயகன் ஆனார். அவரைப் பெண்களும் கூட கொண்டாடத் தொடங்கினர். குழந்தைகளும் கூட அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினர். அவரது “தலையை கொண்டுவர்றவனுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட்ரா” வசனம் வளைத்து வளைத்து ரீல்ஸ் ஆக்கப்பட்டது. இன்னொரு முக்கிய விஷயமாக, இந்திய சினிமாக்களில் கட்டாயம் ‘ஹெவி மெஷின் கன்’ இருக்க வேண்டும் என்ற அம்சத்தையும் இந்தப் படமே உருவாக்கியது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எப்படி மிலிட்டரி கிரேட் ஹெவி மெஷின் கன் வரும் என்பதற்கு எந்த சமாதானமும் இல்லை.

பின்பு, இதே லோகேஷ் விக்ரம் எடுத்தார். முதல்பாதி முழுக்க போதைப்பொருள் உலகத்தை அவ்வளவு அழகியலோடும், தீவிரத்தோடும் காட்சிப்படுத்தினார். டாக்டரே போதைப்பொருள் விற்பான் அல்லது போதைப்பொருள் விற்பவன் டாக்டர் தொழில் பார்ப்பான். அவனுக்கு இரண்டு, மூன்று பொண்டாட்டிகள் இருப்பார்கள். இந்த பொண்டாட்டிகளில் ஒருத்தி கூட அவனது போதைப்பொருள் வியாபாரத்தை தட்டிக்கேட்க மாட்டார்கள். இதைவிட மோசமாக, இந்தப் பொண்டாட்டிகள் யாரும் சாகமாட்டார்கள். ஆனால், நல்லவனான ஃபகத் ஃபாசிலின் அப்பாவி பொண்டாட்டி, தேவையே இல்லாமல், மிகுந்த அழகியலோடு கழுத்தறுத்து, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுவாள்.

இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு ஒரு வரலாற்று இடம் உண்டு. ‘ரோலக்ஸ்’ ஒரு கல்ட். அவனை ஒரு கதாபாத்திரமாக மட்டுமல்லாமல், ஒரு பிராண்டாக லோகேஷ் உருவாக்கினார். அவனது காஸ்ட்யூம், அவன் வரும் கார், எடுத்து வரும் ஸ்பீக்கர் என அவனை எல்லோரும் ரசித்தே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். இப்படி வரும் ரோலக்ஸ், வந்த உடனே ஒருவனின் தலையை வெட்டி கீழே சரித்து, அதைப் பார்த்து கேவலமாக சிரிப்பான். அதில் தெறித்த ரத்தத்தை உண்டு துப்புவான். இறுதியில் அவனை ‘சார்’ என்று அழைக்க வேண்டும் என்றும் ஒரு காட்சி. இவனை எதற்கு ‘சார்’ என்று அழைக்க வேண்டும்? அல்லது இவன் போன்ற ரத்தவெறியர்கள் தான் இனி நாட்டில் ‘சார்’களா?

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆந்திராவில் வந்தது புஷ்பா. இந்த புஷ்பா பான்பராக் போடுபவன், பீடி வளிப்பவன், ஹீரோயினை காசுகொடுத்து கரெக்ட் செய்பவன், நாட்டின் இயற்கை வளத்தை அழித்து செம்மரக்கட்டை கடத்துபவன். இவனுக்கு படம் முழுக்க சமூகசேவை செய்பவன் போல ஓயாமல் பில்டப். இவனை சட்டத்தின் படி பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரிகள், பலவீனமானவர்களாக, முட்டாள்களாக காட்டப்படுவார்கள். கடைசியில் வகைதொகையில்லாமல் பலரைப் போட்டுத்தள்ளி, போலீஸ் ஸ்டேஷனிலேயே பான்பராக் எச்சில் துப்பி, கடத்தல் சாம்ராஜ்யம் அமைப்பான். இவன் தான் ஃபயரு படத்தின் இயக்குனருக்கு.
இந்தப் படத்தில் நேரடியான வன்முறையைக் காட்டிலும், சில காட்சிகள் சைக்காலஜிக்கலாக கடும் தாக்கத்தை உண்டுபண்ணுவதாக அமைந்தன. மங்கலம் சீனு அறிமுகக் காட்சியில், ஒருவனை இரண்டடி குழிவெட்டி உயிரோடு புதைப்பார்கள். ஆறடி என்றால் அவன் உடனே சாவான், இரண்டடி என்பதால் அவன் உயிருக்கு துடிப்பான். அவன் மண்ணை முட்டுவது பகீரென்று இருக்கும். இது போதாதென்று, அவனை துப்பாக்கியால் சுட்டு மண்ணுக்குள்ளேயே ரத்தம் தெறிக்க விடுவார்கள். இடைவேளையில், ஒருவனை பிளேடு வைத்து கழுத்தை அறுத்து, அவனை டை கலர் பார்க்கும் சோதனைப் பிண்டமாக்குவார்கள். என்ன தான் படமென்றாலும் இது எல்லாம் என்ன சிந்தனை?

அடுத்து பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப்-ன் இரண்டாம் பாகத்தோடு இறங்கினார். இந்தப் படத்தில் முந்தைய வெர்ஷனை விட பலமடங்கு உக்கிரம் காட்டினார். ஏனென்றால், அவர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு, அவர் எழுந்துச் சென்ற காலத்தில் பல அடி முன்னே நகர்ந்து விட்டது. இதை உணர்ந்தவராக, கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் வன்முறையில்லாமல் விட்டிருந்த இடங்களில் கூட வன்முறையைத் தூவினார். ‘வயலன்ஸ் லவ்ஸ் மீ. ஐ கான்ட் அவாய்ட்’ என்று ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக்கும் வைத்தார். ஒரு போலீஸ் ஸ்டேஷனையே ‘பெரியம்மா’ மெஷின் கன்னால் ஒற்றை ஆளாகச் சுட்டு தரைமட்டமாக்கி, அதன் சிவந்த கணுவில் சிகரெட் பற்ற வைத்து மாஸ் காட்டுவான் அவன்.
இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் துப்பாக்கி சகிதம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே நுழைந்து, அரசியல்வாதியைக் கொல்வான் ஹீரோ. அது என்ன உள்ளூர் சீட்டாட்ட கிளப் என்று நினைத்தார்களாத் தெரியவில்லை. அது நாடாளுமன்றம். ஆனால், எப்படி அனைத்தையும் கடந்து ஆரா காட்டுவது என்று யோசித்து யோசித்து, எல்லாம் சிறியதாக தெரிந்து, நாடாளுமன்றம் தான் சரியாக இருக்கும் என்று தீர்மானித்தார்கள். அந்தக் காட்சிக்கு முன்னால், “நான் தான் CEO of India” என்று அவன் பெருமையாக டையலாக் வேறு பேசுவான். இவன் CEO of India என்றால், பிரதமர் யார், குடியரசுத்தலைவர் யார், முதலமைச்சர்கள் யார்? இந்த ‘CEO of India’ பல இடங்களில் பேனர் வாசகமானது.

இதற்கு அடுத்து வந்தது அந்த முக்கியமான படமான அனிமல். இது எப்படியிருந்தது?விளம்பரங்களில் தந்தைக்கும் மகனுக்குமான பாசப்போராட்ட கதை என்றார்கள். இதற்கு அந்த தந்தை கேங்ஸ்டரும் அல்ல, அவர் நடத்துவது மாஃபியா கும்பலும் அல்ல. ஆனால், படம் முழுக்க அத்தனை வன்முறை. நாஜி ஸ்டைலில் கொலைப்பிரகடனம் செய்வான் ஹீரோ, அமைதியான கான்ஃபிரன்ஸ் கூட்டத்தில் புகுந்து கொடூரமாக கொல்வான், வண்டியில் பூட்டிய ஹெவி மெஷின் கன்னை வைத்து ரத்தச் சகதியாக்குவான், இறுதியாக வில்லனை கழுத்தை நறநறவென்று அறுத்து, ரத்தம் காலுக்கு இடையில் ஊற்ற, ‘ஆர்கஸமிக்’ கொலை செய்வான்.
இந்தப் படத்தில் தான் முதல்முறையாக, பள்ளிச் சிறுவனாக இருப்பவன், கல்லூரி வகுப்பறைக்குள் துப்பாக்கி எடுத்துச்சென்று, இஷ்டத்துக்கு சுட்டு, கெத்து காட்டுவது காட்சிப்படுத்தப்பட்டது. அதுவும் இந்தக் காட்சியில் மொத்த அட்டூழியத்தையும் ஆசிரியர் கண்முன்னாலேயே அவரைப் பொருட்படுத்தாமல் அவன் செய்வான். என்ன சொல்ல வருகிறது இந்தக் காட்சி? ‘நீ கத்தியோ, துப்பாக்கியோ எடுத்து வன்முறைச் செய்ய எந்த இடமும் தடையல்ல. நீ வன்முறை செய் கண்ணா’ என்பது தானே? இதே காட்சியின் நீட்சியில், மைனரான அவன், நடுச்சாலையில் கார் சண்டை செய்தும் சாகசம் செய்வான். அறிவு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?
இதற்குப் பிறகு, எல்லா இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் புளூபிரிண்ட் கிளியராகி விட்டது. சூப்பர்ஸ்டார் ஹீரோக்கள் முதல் இரண்டு, மூன்று படங்கள் நடித்த ஆரம்பநிலை ஹீரோக்கள் வரை வன்முறையில்லாமல், ஆரா ஃபார்மிங் ஃபேக்டர் இல்லாமல் படங்கள் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். இந்த வன்முறைக்கு கேங்ஸ்டர் மற்றும் வேறு ஆக்ஷன் பின்னணி படங்களாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. குடும்பங்கள் பார்க்கும் படங்களாக இருந்தாலும், வன்முறை பிரதான கேரக்டரானது. இன்றைய காலகட்டத்தில், ரத்தம் இல்லாத சினிமா போஸ்டர்களைப் பார்ப்பதே மிக அரிது மக்களுக்கு.

தமிழ்நாட்டில் விஜய், ரஜினி ஆகியோர் அதிக மக்கள் விரும்பும் சூப்பர்ஸ்டார்கள். இவர்களுக்கு குழந்தைகளும் ரசிகர்கள். ஆனால், விஜய் ஜனநாயகன் படத்தில் இரும்பு ராடில் ஒட்டிய ரத்தத்தை நக்கிச் சுவைத்தார். இதற்கு முன்னால், பீஸ்ட்டில், தலையை வெட்டி பறக்கவிட்டார், கோட் படத்தில் ஹீரோயினின் கழுத்தை அறுத்தார். ஜெயிலரில் ரஜினியையே தலையை வெட்டி சாய்க்க வைத்தார் நெல்சன். இதில் வில்லனின் அறிமுகம் தமிழ்சினிமா கண்டதிலேயே மிகக்கோரமான அறிமுகம். அவன் கும்பலே அந்த கோரத்தைப் பார்த்து அஞ்சும். மோகன்லால் பேஸ்பால் மட்டையால் இரண்டு பேரின் நடுமண்டையை பிளந்து அறிமுகமாவார். அவரது ‘Butcher apron’-ல் காய்ந்த ரத்தம் ஜொலிக்கும்.

அடுத்து லோகேஷின் கூலி வந்தது. இப்போதும் அவர் திருந்தியபாடில்லை. ஹார்பருக்குள், வெள்ளைக்கலர் கோட் சூட் போட்டு இன்னொரு ரோலக்ஸைப் போலவே வரும் வில்லன், சுத்தியலை வைத்து அடியாளின் மண்டையைப் பிளந்து ரத்தம் ரசிப்பான். இந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்னால் “இத்தனை வன்முறை அவசியம் தேவை தானா” என்று நாகார்ஜூனா கேட்டிருக்கிறார். ஆனால், அவர் சமாதானப்படுத்தப்பட்டு நடிக்க வைக்கப்பட்டார். இந்தப் படத்திலும், பெண்ணை கழுத்தை அறுத்து வீசும் காட்சியை வைத்தார் லோகேஷ். கேமியோவாக வரும் அமீர்கான் எதற்கென்றே தெரியாமல், சும்மா நிற்கும் பத்துபேரைச் சுடுவார். இது எதற்கு என்றால், வயலன்ட் என்ட்ரி வெறி!


ஜெயிலர் 2 சில வாரங்களுக்கு முன்னால் வெளியானது. கே.ஜி.எஃப்-2-வில் பிரசாந்த் நீல் செய்ததை, இந்த முறை நெல்சன் செய்தார். இப்போது தலையை டைனிங் டேபிளுக்கே கொண்டுவந்தார். கொலையெல்லாம் டிபன் சாப்பிடுவது போல, ஹேங்கரில் இருந்து துணி எடுத்து மாட்டுவது போல சாதாரணம் என்று அதன் மூலம் காண்பித்தார். ரஜினியும் தன் பங்குக்கு மீண்டும் தலைகளை வெட்டி சாய்த்தார். ரித்திக் ரோஷன் ஹெவி மெஷின் கன்னை போலீஸின் மூஞ்சியில் வைத்தார். மிக மலினமான புத்தியோடு, வில்லன்கள் ஸ்லோமோஷனில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை டார்ச்சர் செய்வதையும் ரசித்து ரசித்துக் காட்டினார், நெல்சன்.
இறுதியாக அந்தப் படத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அது படமா அல்லது மனிதர்களைக் கொன்று கூறுகட்டி விற்கும் சந்தைக்கடையா எனத் தெரியாத அளவிற்கு இருந்தது அந்தப் படம். அதுவே தான், துரந்தர். ‘Gore’ என்பதற்கு மீறி ஒரு வார்த்தையிருந்தால், அதை இந்தப்படத்திற்குச் சொல்லலாம். ‘இல்லை, இந்தப்படம் பாகிஸ்தான் பற்றியது. அங்கே அப்படி இருக்கலாம்’ என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. படம் இந்தியாவில் இருக்கும் போதே, அதீத வன்முறைக் காட்சிகள் ஆரம்பித்து விடுகின்றன. ரன்வீர் சிங் எம்.எல்.ஏ வீட்டுக்குள் புகுந்து 30, 40 பேரை கொல்லும் காட்சியில், தியேட்டரிலேயே ஆடியன்ஸ் அவர்களின் காலுக்குக் கீழ் ரத்தத்தை உணர்ந்திருப்பார்கள்.
உலக சினிமாக்களிலேயே, துரந்தர் இரண்டு பாகங்களிலும் வரும் கடைவீதி கொலைக் காட்சிகளைப் போல, உச்சக்கட்ட வன்முறைக் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. இப்போது நினைத்தாலும் உடல் கூசுகிறது. முதல் பாகத்தில், ஒருவனின் தலையை எடைக்கல்லால் அடித்து, அதை நைந்து போக நசுக்கி, அந்த தலையை வழித்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆக்கியிருப்பார்கள். இரண்டாம் பாகத்தில், ஒருவனது கழுத்தை வெட்டி தலையை தனியாக எடுத்து, அதை கால்பந்து போல உருட்டி விளையாடுவார்கள். எத்தனைப் பெரிய வில்லன்கள் என்றாலும், இது எல்லாம் சரியா? ஆதித்யா தாருக்கு இதயம் இருக்கும் இடத்தில் என்ன தான் இருக்கிறது?
இத்தனையையும் பார்ப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் என்ன மனநிலைக்குச் செல்வார்கள்? ‘அது தான் ஏ சர்டிஃபிகேட் இருக்கிறதே’ என்று சொல்லமுடியாது. இன்று படங்கள் வெறும் திரையரங்குகளிலோ அல்லது பண்டிகைக் காலத்தில் டிவி சேனல்களில் மட்டுமோ பார்க்கும் நிலை இல்லை. ஓடிடி-யில் குடும்பமாக அமர்ந்து பார்க்கிறார்கள். சிம் கம்பெனிகள் ரீசார்ஜோடு ஓடிடி சப்ஸ்கிரைப்ஷன் கொடுக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே, இந்தப் படக்காட்சிகள் எல்லாம், Movie edit, Mashup edit என யூடியூப், இன்ஸ்டாவில் உலவுகின்றன. இவை அனைத்திலும், இதைப்பார்ப்பவருக்கு துப்பாக்கியும், கத்தியும் சாதாரணமான பொருளாகத் தெரியாமல் என்ன செய்யும்? ரத்தம் எப்படி அவெர்ஷன் கொடுக்கும்?
இது படைப்புச் சிந்தனை என்று சொல்லியும் தப்பிக்க முடியாது. அப்படியென்றால், ஏன் இந்த படைப்புச் சிந்தனை 10 ஆண்டுகளுக்கு முன்பு எவருக்கும் வரவில்லை. லோகேஷ் ஏன் மாநகரத்தில் ஆரம்பித்தார். பிரசாந்த் நீல் ஏன் உக்ரத்தை காதல், டூயட், காமெடி என எடுத்தார். நெல்சன் கோலமாவு கோகிலாவில் எத்தனை தலையை வெட்டினார். சுகுமார் ஏன் ‘நானாக்கு பிரேமத்தோ’ எடுத்துக் கொண்டிருந்தார். சந்தீப் ரெட்டி வங்கா ஏன் அர்ஜூன் ரெட்டியோடு வந்தார். எனவே, இது வியாபாரம். வன்முறை விற்கிறது என்பதைத் தெரிந்து, அதை வைத்து காசுபார்க்கும் குரூர வியாபாரம். நாளை வேறு ஒரு ஜானர் விற்றால், எல்லோரும் அதற்குப் போய்விடுவார்கள். ஆனால், இன்று சீர்கெட்டு நிற்கும் சமூகத்தின் நிலை?!
பொறுப்பு அரசிடமும், பெற்றோரிடமும் இருக்கிறது என்று சொல்லியும் நழுவ முடியாது. அவர்களுக்கு பொறுப்பு இருப்பது உண்மை. ஆனால், இவர்களுக்கு இதில் பங்கு இருக்கிறது. இவர்கள் இந்தச் சூழ்நிலையின் காரணகர்த்தாக்கள். இந்தியச் சமூகத்தின் அளவுக்கதிகமான சினிமாப் பற்றை, எல்லோரையும் விட மிக அணுக்கமாக அறிந்தும், இப்படிப்பட்ட சினிமாக்களை உருவாக்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது? ஒரு குறைந்தபட்ச அறத்தோடு, இந்த வன்முறைச் சினிமாக்களால் இன்ஃபுளூயன்ஸ் ஆகவேண்டாம் என்று கூட இவர்கள் பொதுவெளியில் பேசுவதில்லை. எல்லாம் நியாயப்படுத்தல்களும், மடைத்திருப்பல்களும். தொழில் நடக்க வேண்டுமே!
ஹரியானாவும், ஆந்திராவும் இந்திய சினிமாக்களின் அதீத வன்முறையின் விளைவுகள் என்று எடுப்பதற்கு அத்தனை முகாந்திரமும் உள்ளன. இந்திய மக்களின் கவலை நூறு சதவிகிதம் நியாயமானது. இனிமேலேனும், இந்த வகை சினிமாக்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு, உரிய தீர்வு காணப்பட வேண்டும்!
கட்டுரையாளர் குறிப்பு

சக்திவேல் வீராசாமி
சுயாதீனப் பத்திரிகையாளர் (Independent Journalist).










