மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 1) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. kerala bjp file plea for mohanlal empuraan ban
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், இதுவரை உலகளவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இது தொடரும் பட்சத்தில், அதிக வசூல் சாதனை படைத்துள்ள மலையாள படமான ‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’ வெற்றியைத் தாண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது நிகழுமா என்ற கேள்வி தற்போது பூதாகரமாகியிருக்கிறது.
எம்புரான் படத்தில் இடம்பெற்ற கோத்ரா கலவரத்தைக் குறிக்கும் காட்சிகள் தொடர்பாக கேரளா பாஜக, இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.
2002 கோத்ரா சம்பவத்திற்குப் பிறகான நிகழ்வுகளைப் பிரதியெடுத்தாற் போல, இதில் சில காட்சிகள் இருப்பதாகத் தகவல் பரவின. அது மட்டுமல்லாமல், வில்லனாக வந்த அபிமன்யூவின் பாத்திரப் பெயர் ‘பஜ்ரங்கி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்தையும் தாண்டி, கேரள அரசியலில் வலதுசாரிகளின் ஆதிக்கம் சட்டென்று பெருகுவதாகக் காட்டியிருந்தது இப்படம்.
இதனையடுத்து மன்னிப்பு கோரிய நடிகர் மோகன்லால், படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதன்படி இன்று முதல் படத்தில் இருந்து 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எம்புரான் திரைப்படத்தை உடனடியாகத் தடை செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வகுப்புவாத கலவரத்திற்கு வித்திடும்! kerala bjp file plea for mohanlal empuraan ban
கேரள பாஜக தலைவரான திருச்சூரை சேர்ந்த வி.வி. விஜீஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், “எம்புரான் படத்தில் 2002 கோத்ரா கலவரத்தைக் குறிக்கும் காட்சிகள் மற்றும் படத்தின் முக்கிய வில்லனுக்கும் பஜ்ரங் தளத் தலைவருக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து சர்ச்சையாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இது சாத்தியமான வகுப்புவாத கலவரத்திற்கு வித்திடும்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல், இயக்குனர் பிருத்விராஜ் தொடர்ந்து தனது திரைப்படங்கள் வழியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். இந்தப் படத்தில் அன்னிய முதலீடு இருப்பதை அறியும் வகையில் மத்திய அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்புரான் திரைப்படத்திற்கு எதிராக நிகழ்பவற்றை உற்று நோக்கினால், இன்னும் சில நாட்களுக்குச் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.