பெண்களுக்கு விழிப்புணர்வாக மகளிர் உரிமை மாநாடு அமையும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (அக்டோபர் 14) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கிய பெண் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் மாநாடு குறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த மாநாட்டில் பெண் தலைவர்களின் கருத்துக்கள் எடுத்துரைக்கப்படும். பெண்களை மையப்படுத்தக்கூடிய அரசியல் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
பெண்களுக்கான விழிப்புணர்வாக இந்த மாநாடு அமையும். இன்று ஆட்சியிலிருக்கக்கூடிய பாஜக மகளிர் மசோதாவை நிறைவேற்றியிருப்பதாக பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து கூட மசோதா நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகத்துடன் தான் பார்க்க வேண்டியதுள்ளது.
பெண்கள் ஆட்சியதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கில் 2010-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்காக ஆட்சி மாற்றம் தேவை என்பதை இந்த மாநாடு வலியுறுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
