தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல நல்ல படங்களில் நடித்து வருபவர் நடிகை டாப்ஸி பன்னு. இவரது நடிப்பில் அறிமுக இயக்குநர் தருண் இயக்கத்தில் நேற்று (அக்டோபர் 13) வெளியான படம் “தக் தக்”.
சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு நேர்காணலில் டாப்ஸி பேசிய போது, “ஒரு நடிகையாகவும் ஒரு தயாரிப்பாளராகவும் நல்ல கதைகளின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. தக் தக் அப்படிப்பட்ட ஒரு படம் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த சினிமா சிஸ்டம் மொத்தமும் ஹீரோக்களை சுற்றியே உள்ளது. ஓடிடி தளங்களும் அதைத்தான் பின்பற்றுகிறது.
இந்த படம் பெண்கள் சார்ந்த கதை. இதற்கு இவ்வளவு ஷோ கிடையாது. ஓடிடியில் வெளியாகும், அப்போது பார்த்துக் கொள்வோம் என சிலர் பேசியதை அறிந்தேன். எங்களுடைய படம் “ஜவான்” இல்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முறையான வாய்ப்பு வழங்கப்பட்ட வேண்டும். அந்த படங்களை ஏற்கவோ நிராகரிக்கவோ மக்களுக்கு சுதந்திரம் உள்ளது.
ஆனால் முதலில் மக்கள் அதை பார்க்க நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் ஓடினால், படம் கவனிக்கப்படாமல் போகும். அதன்பிறகு எல்லோரும் அதை ‘ஃப்ளாப்’ படம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஃப்ளாப் லேபிளைப் பெற்ற பிறகு, மக்கள் அதை எப்படி ஓடிடியில் பார்ப்பார்கள்..? இது எரிச்சலை உண்டாக்குகிறது” என்று நடிகை டாப்ஸி தெரிவித்திருக்கிறார்.
நடிகை டாப்ஸியின் இந்த பேச்சு தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!