காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (அக்டோபர் 14) ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி, பிரியங்கா இருவரும் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். இரவு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கினர்.
மாநாடானது இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி, பிரின்ஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்றனர்.
சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மகளிர் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வழங்குவது தொடர்பாக தமிழக காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சோனியா காந்தி விளக்கம் தர உள்ளார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
துருவ நட்சத்திரம்: தனி யுனிவர்ஸை உருவாக்கும் கௌதம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!