கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின்போது ரூ. 3,45,83,072 அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று சிறப்பு புலனாய்க் குழு மதிப்பிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
இது தொடர்பாக கடந்த மாதம் 17ம் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.
இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், இதுதொடர்பாக, ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்பதை கணக்கிடும் பணியை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மேற்கொண்டு வந்தனர்.
அவர்கள் மூலம் சேத மதிப்பு முழுமையாக கணக்கிடப்பட்டு அது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கலவரக்காரர்களால் பள்ளி, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்டவற்றில் மொத்தமாக ஏற்பட்டுள்ள சேதம் 3,45,83,072 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி அடித்து நொறுக்கப்பட்ட, தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்களில் பள்ளிப் பேருந்துகள், டிராக்டர், ஜேசிபி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 51 வாகனங்களும், நான்கு காவல்துறை வாகனங்களும் சேதமாகி இருக்கின்றன.
இதன் மொத்த சேத மதிப்பு 90,98,500 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல் கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள பிற பொருட்களின் விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேதப்படுத்தப்பட்ட 186 கணினிகளின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 50 லட்சம்
- சேதப்படுத்தப்பட்ட குடிநீர் அமைப்புக்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 96 ஆயிரம்
- சேதப்படுத்தப்பட்ட சோலார் சிஸ்டங்களின் மதிப்பு ரூ.35 லட்சம்
- சேதப்படுத்தப்பட்ட யூபிஎஸ் மற்றும் பேட்டரிகளின் மதிப்பு ரூ.2.53 லட்சம்.
- சேதப்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர்களின் மதிப்பு ரூ.2,17,710
- சேதப்படுத்தப்பட்ட கதவுகள் ஜன்னல்களின் மதிப்பு ரூ.35,19,226.
- சேதப்படுத்தப்பட்ட மின்மீட்டர் இணைப்புகளின் மதிப்பு ரூ.65,885
- சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் மதிப்பு ரூ.17 லட்சம்.
- சேதப்படுத்தப்பட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு வாகனங்களின் மதிப்பு ரூ.3.74,010.
- சேதப்படுத்தப்படுத்தப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.1,27,666.
- சேதப்படுத்தப்படுத்தப்பட்ட அறிவிப்புப் பலகைகளின்மதிப்பு ரூ.56,775.
- சேதப்படுத்தப்படுத்தப்பட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு வாகனங்களின் மதிப்பு ரூ.74.300.
இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 3,45,83,072 என்று சிறப்பு விசாரணைக் குழுவினர் மதிப்பிட்டு அறிக்கை அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கனியாமூர் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று (ஆகஸ்ட் 30) நேரில் சென்று கலவரத்தால் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதங்கள், தீ வைத்து கொளுத்தியதில் சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜெ.பிரகாஷ்
விலைவாசி உயர்வு- போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!









