இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் 51.2% பகுதிகள் இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் இருப்பதாக குஜராத்தில் உள்ள ‘ஐஐடி காந்திநகர்’ நிறுவனம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலை என்ன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள ஐஐடி காந்திநகரின் Water and Climate Lab சார்பில், செப்டம்பர் 23-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கான National Drought Summary வெளியிடப்பட்டுள்ளது.
வறட்சி நிலை எப்படி கணக்கிடப்படுகிறது?
ஐஐடி காந்திநகர் தனது ஆய்வில் வறட்சி நிலையை D0 முதல் D4 வரை 5 வகைகளாக பிரிக்கிறது.
இதில்,
D0- இயல்பைவிட வறண்ட நிலை
D1- மிதமான வறட்சி
D2- கடுமையான வறட்சி
D3- மிகக் கடுமையான வறட்சி
D4- மிகவும் தீவிரமான வறட்சி நிலையைக் குறிக்கிறது.
அதாவது, அறிக்கையில் குறிப்பிடப்படும் வறட்சி பாதிப்பு என்பது அனைத்துப் பகுதிகளும் கடும் வறட்சியில் இருப்பதாக அர்த்தமல்ல. இயல்பைவிட வறண்ட பகுதிகள் முதல் தீவிர வறட்சியை எதிர்கொள்ளும் பகுதிகள் வரை இதில் கணக்கிடப்படுகின்றன.
இந்தியாவில் 51.2%
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் 48.8% பரப்பளவு இயல்பான நிலையில் உள்ளது. மீதமுள்ள 51.2% பரப்பளவு இயல்பைவிட வறண்ட அல்லது பல்வேறு வறட்சி நிலைகளில் உள்ளது.
முந்தைய வாரத்தில் இது 52.5% ஆக இருந்தது. தற்போது 51.2% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, ஒரே வாரத்தில் இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் உள்ள பரப்பளவு 1.4 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.
இந்தியாவின் எந்தப் பகுதியில் வறட்சி அதிகம்?
இந்த அறிக்கையில் இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் உள்ள பரப்பளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
- வட இந்தியா – சுமார் 46%
- வடமேற்கு இந்தியா – சுமார் 42%
- வடகிழக்கு இந்தியா – சுமார் 64%
- கிழக்கு இந்தியா – சுமார் 40%
- மத்திய இந்தியா – சுமார் 40%
- மேற்கு இந்தியா – சுமார் 82%
- தென்னிந்தியா – சுமார் 56%
இதில் மேற்கு இந்தியாவில்தான் அதிகபட்சமாக 82% பரப்பளவு இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் உள்ளது. அதற்கு அடுத்ததாக வடகிழக்கு இந்தியாவில் 64%, தென்னிந்தியாவில் 56% பரப்பளவு இந்த நிலையில் உள்ளன.
கோவா 100%… மகாராஷ்டிரா 84.1%
நாட்டின் மாநிலங்களைப் பொறுத்தவரை, கோவாவின் 100% பரப்பளவும் இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
அடுத்ததாக டெல்லியில் 95.7%, மகாராஷ்டிராவில் 84.1%, சிக்கிமில் 81.8% பரப்பளவு இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் இருப்பதாக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் என்ன நிலை?
இதற்கு மாறாக, வறட்சி பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. நாகாலாந்தில் 5.6%, ஒடிசாவில் 10%, திரிபுராவில் 14.9% பரப்பளவு இயல்பைவிட வறண்ட அல்லது வறட்சி நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வறட்சி பாதிப்பு அளவு 23.8% ஆக இருப்பதாக ஐஐடி காந்திநகர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
