சட்டவிரோத கல்குவாரி.. தவெக பிரமுகர், மகள் மீது போலீஸ் வழக்கு!

By Mathi

|

Published on 14 Nov 2026, 4:39 AM

Illegal Quarry Case TVK

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தப்பட்டதாக எழுந்த புகாரில், தவெகவில் பிரமுகர் பாரி, அவரது மகள் அபிநயா தென்றல், மருமகன் முருகேசன் ஆகிய 3 பேர் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பகுதியில் கல்குவாரி நடத்துவதற்காக 2015-ஆம் ஆண்டு மே 19-ந் தேதி முருகேசனுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இதன்படி 5 ஆண்டுகள் கல்குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட அளவைத் தாண்டி அரசு புறம்போக்கு நிலங்களிலும் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

ADVERTISEMENT

குவாரியில் வெடிவைத்து பாறைகள் உடைக்கப்பட்டதால் அருகிலுள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குவாரியுடன் தொடர்புடைய கிரஷர் மற்றும் எம்-சாண்ட் உற்பத்தி நடவடிக்கைகளால் சுற்றுப்புறப் பகுதிகளில் தூசி பரவி, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

2020-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில், கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகுருவன் மகன் ராமன், கல்குவாரி முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி அரசு நிலத்தில் கனிமவளங்கள் வெட்டியெடுக்கப்படுவதாகவும், குவாரி நடவடிக்கைகளால் சுற்றுப்புறப் பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, குவாரி செயல்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கல்குவாரி அனுமதி நிபந்தனைகள் மீறப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, 2020-ஆம் ஆண்டு மே 12-ந் தேதி குவாரி பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 22-ந் தேதி குவாரி பகுதியில் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 20 முதல் 30 மீட்டர் ஆழம் வரை கற்கள் வெட்டியெடுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2020-ஆம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி, அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் எவ்வளவு கனிமவளங்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன என்பதை அளவீடு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

2021-ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு மே 6-ந் தேதி நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.அனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் கண்டறிந்திருந்த நிலையில், சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

ட்ரோன் ஆய்வு.. ரூ.7.48 கோடி அபராதம்

இதன் பின்னரும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி கல்குவாரி பகுதியில் ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகக் கற்கள் மற்றும் கிராவல் மண் வெட்டியெடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையில் குவாரி உரிமையாளர் முருகேசனுக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ரூ.7,48,80,927 அபராதம் விதித்தார்.

இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி நிலையூர் பிட்-2 கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சர்வே எண்கள் 15/2A1, 15/2A2 மற்றும் 20/6A ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,801.04 கனமீட்டர் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் எனக் கணக்கிடப்பட்டது.

பாரி, மகள், மருமகன் மீது வழக்கு

இதனைத் தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி கிரஷர் நிறுவனங்கள் செயல்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறிக் கனிமவளங்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் கிருபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குவாரி உரிமையாளர் கே.முருகேசன், கோபால்சாமி புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ஜி.பாரி, அபிநயா தென்றல் புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் அபிநயா தென்றல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 303(2), 316(5), 326, 323 உள்ளிட்ட பிரிவுகளும், கனிமவளச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரி, முன்னதாக அதிமுக நிர்வாகியாக இருந்தவர். அதிமுகவிலிருந்து விலகிய பாரி, அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel