பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு 2026–2027 ஆம் ஆண்டிற்கான சம்பா மற்றும் சிறப்பு பருவப் பயிர்களுக்கு (நெல், மக்காசோளம் போன்றவை) காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 1, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 13) வெளியிட்ட அறிவிப்பில், ”நடப்பாண்டில் (2026-2027) சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி டிசம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் 2026-2027 ஆண்டு சம்பா பருவம் முதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நில உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள விவசாயி அடையாள எண்ணும் (FID), குத்தகை விவசாயிகள் பதிவு செய்து கொள்ள நில உரிமைதாரர்களிடமிருந்து ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

பேரூராட்சி, நகராட்சி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களும், தனியார் மற்றும் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளாலும், இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தன.
இதைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு, மத்திய அரசை நேரில் சந்தித்து, தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப இடர்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தது. மேலும், குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் மற்றும் ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க, தகுதியுள்ள குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், ஒன்றிய அரசால் 2026-2027 ஆம் ஆண்டிற்கு விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயனடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









