மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது பெண் நிர்வாகி அளித்த பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மூன்று பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வகிப்பவர் கருப்பசாமி. அதேபகுதி தவெக ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்த பெண் நிர்வாகி, சில மாதங்களுக்கு முன்பு கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தவெக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த தன்னை பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தவெக ஒன்றிய செயலாளர் கருப்புசாமி துன்புறுத்தினார் என்றும் அவருக்கு சிலர் ஆதரவாக இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 12) புகார் மனு அளித்தார்.
இதையடுத்து, பெண் நிர்வாகியின் புகார் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று இன்று விசாரணை மேற்கொண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், காரமடை தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடத்தல், பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கருப்பசாமி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.









