போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? அடுத்தது யார்?

Published On:

| By vanangamudi

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். How did actor Srikanth get caught

சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘லார்டு ஆஃப் தி டிரிங்க்ஸ்” என்ற பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கடந்த மே 22ஆம் தேதி நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகியான ஐடி விங்கைச் சேர்ந்த அஜய் வாண்டையார், பிரசாந்த், சுனாமி சேதுபதி, தூண்டில் ராஜா ஆகியோர் நுங்கம்பாக்கம் f3 போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிரசாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்து, சென்னை மாநகர ஆணையர் அருண் ஆலோசனைப்படி தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் ஜெயசந்திரன் ஆகியோர் விசாரணையில் இறங்கினர்.

இதில் பிரசாந்த் கொடுத்த வாக்குமூலத்தின்படி, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிராடோ, போதைப்பொருளை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், பிரதீப் குமாரை கடந்த ஜூன் 17ஆம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் கைது செய்தனர்.

அவரிடமிருந்த ஒன் பிளஸ் 11 5g வகை மொபைல் போனையும், 40 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இந்த பணம் எதற்கு என்று போலீசார் கேட்ட போது, ‘நைஜீரியாவை சேர்ந்த ஜீரிக் மற்றும் பெங்களூருவில் இருக்கும் கானா நாட்டை சேர்ந்த ஜான்தான் எங்களுக்கு கொக்கைன் போதைப்பொருளை சப்ளை செய்தனர். நாளை (ஜூன் 18) காலை 8 மணிக்கு பெங்களூருவில் இருந்து ஒசூர் பேருந்து நிலையத்துக்கு வர சொல்லியிருக்கிறார் ஜான். அவரிடம் கொக்கைன் வாங்குவதற்காக இந்த பணத்தை வைத்திருக்கிறேன்” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் பிரதீப் குமார்.

ADVERTISEMENT

இதைதொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி காலை 7.45 மணிக்கெல்லாம் ஓசூர் பேருந்து நிலையத்துக்கு சென்று தனிப்படை போலீசார் காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஜானை கைது செய்து, அவரிடமிருந்து 11 கிராம் கொக்கைனையும், போகோ சி61 போனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் யார் யாருக்கெல்லாம் கொக்கைன் சப்ளை செய்திருக்கிறாய் என்று தனிப்படை கேட்டபோது, சில பேரை சொல்லியிருக்கிறார். இந்தநிலையில் அவரை கஷ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் பிரதீப் குமாரிடமும், ஜான் யார் யாருக்கெல்லாம் சப்ளை செய்திருக்கிறார் என்று போலீசார் கேட்டிருக்கின்றனர்.

இதற்கு பிரதீப் குமார், நான் ஜானிடம் கொக்கைன் வாங்கும் போது நடிகர் ஸ்ரீகாந்தையும் பார்த்திருக்கிறேன். அவர் கொக்கைன் வாங்கி சினி துறையில் சிலருக்கு கொடுத்திருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்த சிலரும் ஜானிடம் கொக்கைன் வாங்கியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை வைத்துதான் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான டீம் சம்மன் அனுப்பி இன்று (ஜூன் 23) விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்தது.

ஒருவர் கொக்கைன் பயன்படுத்தியிருந்தால், அது மருத்துவ பரிசோதனையில் 45 நாட்களுக்குள் தெரிந்துவிடும்.

இந்தநிலையில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று பகல் 12.15 மணிக்கு ஸ்ரீகாந்த்தை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ அறிக்கையின்படி, ஸ்ரீகாந்த் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது கொக்கைன் சப்ளை செய்திருக்கிறாரா? என விசாரித்து வருகின்றனர். எவ்வளவு தொகைக்கு இதுவரை கொக்கைகன் வாங்கியிருக்கிறார்… ஜிபே கணக்கு என பலவற்றையும் போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் சினி பிரபலங்கள் சிலர் சிக்கலாம் எனவும் போலீசார் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜீரிக் மற்றும் இதனுடன் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படம் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீகாந்த்.

அதன்பிறகு ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கணா கண்டேன்’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘உயிர்’, ‘ஒரு நாள் ஒரு கனவு’, ‘பூ’, ‘‘சதுரங்கம்’, நண்பன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. How did actor Srikanth get caught

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share