ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் சர்வர்கள் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Hindustan petroleum server hacked
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) என்பது இந்திய அரசிற்கு சொந்தமான ஒரு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தல், ஹைட்ரோகார்பன்களின் உற்பத்தி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 17,000 ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது.
இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக டீலர்கள் வங்கியில் பணம் செலுத்த முடியாத சூழல் நிலவுவதாக சொல்கிறார்கள். மேலும், பெட்ரோலிய பொருட்களை சப்ளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் அந்த நிறுவனத்தின் சர்வர் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தியா முழுவதும் டீலர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால் இன்று மதியம் 12 மணி முதல் அனைத்து செயல்பாடுகளும் மேனுவலாக செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வதில் சுணக்கம் நிலவுவதாக சொல்கிறார்கள் டீலர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பாரத் பெட்ரோலிய பங்க்கின் சங்கத்தின் மாநில செயலாளர் தர்மபிரகாஷை தொடர்பு கொண்டபோது, “அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து கருத்துக்கூற விரும்பவில்லை” என தெரிவித்தார். Hindustan petroleum server hacked
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தின் சர்வர்கள் முடக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்குமா என்று என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
