3 வருடமாகவா முதல்வர் கவனத்துக்கு? அரசு ஊழியர் பேச்சுவார்த்தையில் நடந்தது இதுதான்!

Published On:

| By vanangamudi

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும், கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களைந்து அனைவருக்கும் ஒரே ஊதியத்தை வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, அரசு அமைத்த மூவர் குழுவை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை அறிவித்திருந்தனர். government employees union protest

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு குழுவும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமும், புதிய பென்ஷன் ஒழிப்பு இயக்கம் கூட்டமைப்பினரும் நாளை (பிப்ரவரி 25) ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும், போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

mkstalin super schemes cuddalore

முதல்வர் அமைத்த அமைச்சர்கள் குழு!

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 24) அமைத்தார். ஏற்கனவே மூன்று அமைச்சர்கள் மட்டும் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக அமைச்சர் கயல்விழி செல்வராஜும் குழுவில் சேர்க்கப்பட்டார்.

இந்த குழு இன்று (பிப்ரவரி 24) தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

அரசுக்கு ஆதரவான சங்கமாக கருத்தப்படும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமாரிடம் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்று கேட்டோம்.

“வழக்கம்போல் எங்களது கோரிக்கையை கேட்டார்கள். நாங்களும் சொன்னோம். எப்போதும் போல முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். நாளைய போராட்டத்தை நாங்கள் அறிவிக்கவும் இல்லை, வாபஸ் வாங்கவும் இல்லை” என்றார். government employees union talks

ஜாக்டோ ஜியோவில் உள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் மணிமேகலையை தொடர்புகொண்டு கேட்டோம்.

“இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மற்ற சங்கங்களைச் சேர்ந்த 31 பேர் கலந்துகொண்டோம். காலை 11.20 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டுக்கொண்டனர்.

அமைச்சர் குறித்த நேரம்

இறுதியாக அமைச்சர் எ,வ.வேலு, ‘உங்களது கோரிக்கைகளை குறிப்பு எடுத்துக்கொண்டோம். முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மாலை 7 மணிக்கு பதில் சொல்கிறோம். நாம் மீண்டும் 7 மணிக்கு சந்திப்போம். நாளைய போராட்டத்தை நீங்கள் ரத்து செய்ய வேண்டும்’ என்றார். அவரிடம் நாங்கள், ‘இதேபோலத்தான் கடந்த ஆண்டும் எங்களது கோரிக்கையை கேட்டு முதல்வரிடம் எடுத்து செல்கிறோம் என்று சொன்னீர்கள். இப்போதும் அதே பதில்தான் சொல்கிறீர்கள்’ என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டோம்” என கூறினார் மணிமேகலை.

அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என்று கேட்டோம்.

“எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கப்போவதில்லை. திட்டமிட்டபடி எங்களது போராட்டம் நடக்கும்” என தெரிவித்தார் மணிமேகலை.

போராட்டம் உறுதி!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வியை தொடர்புகொண்டு கேட்டோம். government employees union talks

“இந்த அரசு தொடர்ந்து அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது. அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் எதையும் அமல்படுத்தவில்லை. போராட்டம் அறிவித்த எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுக்கவில்லை. அதனால் திட்டமிட்டப்படி தற்செயல் விடுப்புப் போராட்டத்தை நடத்துவோம்” என கூறினார்.

பிரடெரிக் ஏங்கல்ஸ்

புதிய பென்ஷன் திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் நம்மிடம் கூறுகையில், “நாங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்திருந்தோம். எங்களுக்கு மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உள்ளது. இருந்தாலும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் காணப்படப் போவதில்லை. இதுவொரு கண் துடைப்பு வேலைதான். நாளை நாங்கள் அறிவித்திருந்த போராட்டத்தை நீர்த்து போக பல சதி வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் எங்கள் போராட்டம் திட்டமிட்டப்படி நடக்கும்” என கூறினார்.

முன்னதாக 2023ல் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தீர்வு எட்டவில்லை. மீண்டும் 2024 பிப்ரவரி 14ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட இக்குழு, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது. அதிலும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சூழல்நிலையில் தான் போராட்டம் நடத்துவதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தீவிரமாக உள்ளனர்.

அடுத்த கட்டம் என்ன?

இன்றைய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். government employees union talks

அப்போது அமிர்தகுமார் கூறுகையில், “ஏற்கனவே அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் முடிவை தெரிவிக்க தாமதம் ஏற்பட்ட காரணத்தினால், நாங்கள் போராட்டத்தை அறிவித்தோம். 15.2.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தோம். 3.3.2024 அன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

அதன்பிறகு முதலமைச்சர் அழைத்து பேசியதை தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைத்தோம். முதல்வர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கொண்டிருந்தோம். அடுத்த வாரம் எங்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில்தான் இன்றைய பேச்சுவார்த்தையில் நடந்தது பற்றியும், இனியும் அரசை நம்பலாமா அல்லது அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு செல்லலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறினார். government employees union protest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share