பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் இன்று (ஜனவரி 19) அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாடு பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதனையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாலும் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அண்ணாமலை அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.
இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார். gayathiri raguram joins admk
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம்,
“அதிமுகவில் இணைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது முன்பே நடந்திருக்க வேண்டும். நான் இன்றைக்கு ஒரு நல்ல நாளில் எடப்பாடியின் ஆசீர்வாதத்துடன் அதிமுகவில் இணைந்துள்ளேன்.
காலம் காலமாக என்னுடைய அப்பா நடன இயக்குநர் ரகுராம், என்னுடைய கொள்ளு தாத்தா கே.சுப்பிரமணியன், அவருடைய மகள் பத்மா சுப்பிரமணியன் என எல்லோருமே அதிமுகவிற்கு மிகவும் நெருங்கியவர்கள். ஏனென்றால் எம்.ஜி.ஆர் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி. அதே போல் ஜெயலலிதாவும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி. இருவருடனுமே என் அப்பாவும் நிறைய வேலை செய்துள்ளார்கள்.
சினிமாவிலும் சரி, அதிமுக கட்சியிலும் சரி நிறைய தேர்தல் பணிகளில் என் அப்பா ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அதிமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. இனிமேல் எங்களது பயணம் நன்றாக இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி மிகவும் அருமையாக செயல்பட்டு வருகிறார். இன்றைக்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தமிழ்நாடு மக்களே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் செயல்படுவார் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தனிப்பட்ட தகவல்களை அதிகம் சேகரிக்கும் ஆப்ஸ்கள் இதுதான்… வெளியான அதிர்ச்சி தகவல்!
சூர்யா படத்தில் நடிக்கும் ஶ்ரீதேவியின் மகள்!
gayathiri raguram joins admk
