VIDEO: துபாயில் புறப்பட்ட விமானம்… நடுவானில் கத்தி குத்து… மரண ஓலம்.. 14,000 அடி திடீர் சரிவு: நிமிடத்துக்கு நிமிடம் என்ன நடந்தது? முழு விவரம்!

Published On:

| By Mathi

Flydubai Flight

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் புறப்பட்டது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 174 பேர் இருந்தனர்.

சர்வதேச நேரப்படி அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட விமானம், 34 ஆயிரம் அடி உயரத்தை எட்டியது. அடுத்த 2 மணி நேரம் பயணம் வழக்கம்போல சென்றது.

ADVERTISEMENT

ஆனால் டெல் அவிவ் சென்றடைவதற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், அந்த விமானத்துக்குள் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் 174 பேரின் உயிரையும் கேள்விக்குறியாக்கின.

காலை 5.21… திடீரென கீழே பாய்ந்த விமானம்

காலை 5.21 மணி. அதுவரை சீராக பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென வேகமாக கீழே இறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மீண்டும் மேலே ஏறியது. அதன்பிறகு மறுபடியும் கீழே இறங்கியது.

ADVERTISEMENT

விமானத்துக்குள் இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. விமானம் வேகமாக கீழே இறங்குவதையும் கடுமையாக குலுங்குவதையும் மட்டுமே அவர்களால் உணர முடிந்தது.

விமானிகள் அறையில் மோதல்

ஆனால் விமானிகள் அறைக்குள் பெரும் மோதல் நடந்துகொண்டிருந்தது. இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாரை உடன் இருந்த மற்றொரு விமானி தாக்கியிருந்தார். ஸ்மித் மச்சார் பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்தார். தாக்குதல் நடத்திய விமானி, விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி அதை கீழே கொண்டு செல்ல முயன்றதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தியால் தாக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், விமானிகள் அறையில் அவசர தேவைக்காக வைக்கப்பட்டிருக்கும் கோடரியும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பின்னர் கூறப்பட்டது. எந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

29 வினாடிகள்… 14 ஆயிரம் அடி சரிவு

விமானிகள் அறைக்குள் இந்த மோதல் நடந்துகொண்டிருந்தபோதே விமானமும் அதிவேகமாக கீழே பாய்ந்தது. ஒரு கட்டத்தில் வெறும் 29 வினாடிகளில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை விமானம் இழந்தது. அதன்பிறகும் விமானம் அடுத்தடுத்து ஏறி இறங்கியது.

கீழே என்ன இருக்கிறது, விமானம் எங்கு செல்கிறது, விமானிகளுக்கு என்ன ஆனது என எதுவுமே தெரியாமல் பயணிகள் பதற்றத்தில் இருந்தனர்.

ரத்தம் வழிந்த நிலையிலும் கதவை திறந்த ஸ்மித்

விமானிகள் அறைக்குள் ஸ்மித் மச்சார் கடுமையாக காயமடைந்திருந்தார். அந்த நிலையிலும் அவர் செய்த ஒரு காரியம்தான் அடுத்த சில நொடிகளில் விமானத்துக்குள் இருந்தவர்களுக்கு மிக முக்கியமானதாக மாறியது.

விமானிகள் அறையின் கதவை வெளியே இருந்து எளிதாக திறக்க முடியாது. உள்ளே இருந்த ஸ்மித் மச்சார் கதவை திறந்ததால் மட்டுமே வெளியே இருந்தவர்களால் உடனடியாக விமானிகள் அறைக்குள் நுழைய முடிந்தது. கதவு திறந்ததும் பயணிகளும் விமான ஊழியர்களும் உள்ளே பாய்ந்தனர். தாக்குதல் நடத்திய விமானியை மடக்கிப் பிடித்தனர்.

ஹெட்போன் வயர்களால் கட்டிப் போட்ட பயணிகள்

அவர்களில் பிளம்பரான யானிவ் ஹயூன், மருத்துவர் ஷோட்டா முசாயேவ், அசாஃப் ராஜுவான், ஸ்விகா மேனஸ் உள்ளிட்டோரும் இருந்தனர்.

தாக்குதல் நடத்தியவரை கட்டிப் போட விமானத்தில் வழங்கப்பட்ட ஹெட்போன் வயர்களையும் பயணிகள் பயன்படுத்தினர். இந்த மோதலில் பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அசாஃப் ராஜுவானின் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது.

ஒருபக்கம் தாக்குதல்… மறுபக்கம் ஸ்மித்துக்கு சிகிச்சை

தாக்குதல் நடத்திய விமானியை ஒரு குழுவினர் கட்டுப்படுத்திக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஸ்மித் மச்சாரை காப்பாற்றும் முயற்சி தொடங்கியது. விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஷோட்டா முசாயேவ் அவருக்கு முதலுதவி செய்தார். ஸ்மித் மச்சார் அதிகளவு ரத்தத்தை இழந்திருந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்திருந்ததாக பின்னர் முசாயேவ் தெரிவித்தார்.

இன்னும் சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தால் ஸ்மித் மச்சாரை காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போது இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை இருந்தது.

விமானத்தை யார் கட்டுப்படுத்துவது?

விமானம் தொடர்ந்து கீழே சென்றுகொண்டிருந்ததை கவனித்த யானிவ் ஹயூன், விமானத்தின் கட்டுப்பாட்டை பின்னோக்கி இழுத்தார். இதனால் விமானம் ஓரளவு சமநிலைக்கு வந்தது.

யானிவ் ஹயூன் விமானி அல்ல. விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் அவருக்கு கிடையாது. விமான விபத்துகள் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த அனுபவத்தை வைத்தே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ததாக அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அதே விமானத்தில் ஃப்ளைதுபாய் நிறுவனத்தை சேர்ந்த பணியில் இல்லாத இரண்டு விமானிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் விமானிகள் அறைக்குள் சென்று விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்றனர். இரண்டு விமானிகளும் பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

7700… அடுத்த சில நிமிடங்களில் 7500

இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்து அவசர எச்சரிக்கையும் அனுப்பப்பட்டிருந்தது. காலை 5.28.48 மணிக்கு FZ1073 விமானத்தில் இருந்து 7700 என்ற குறியீடு அனுப்பப்பட்டது. விமானத்தில் பொதுவான அவசரநிலை ஏற்பட்டிருப்பதை தரையில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களுக்கு தெரிவிக்கும் குறியீடு இது.

அப்போது விமானம் சவுதி அரேபியா – ஜோர்டான் எல்லையை ஒட்டிய பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் நிலைமை மேலும் தீவிரமானது.

காலை 5.35 மணிக்கு 7700 குறியீடு 7500 ஆக மாற்றப்பட்டது. விமானத்தில் சட்டவிரோத தலையீடு நடந்திருக்கிறது என்பதை தெரிவிக்கும் குறியீடு இது. விமான கடத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களின்போதும் இந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

180 டிகிரி திரும்பிய FZ1073

ஆனால் அதற்குள் FZ1073 விமானத்தின் பாதை மாறியிருந்தது. சிறிது தூரம் ஜோர்டான் வான்பகுதிக்குள் சென்ற விமானம், அங்கிருந்து 180 டிகிரி திரும்பியது. டெல் அவிவ் நோக்கிய பயணத்தை கைவிட்டு சவுதி அரேபியாவின் தபூக் நகரை நோக்கி பறக்கத் தொடங்கியது.

தபூக்கை நெருங்கியபோது அவசர குறியீடு மீண்டும் 7700 ஆக மாற்றப்பட்டது. விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் அதை பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய சவால் இரண்டு விமானிகளுக்கும் இருந்தது. அந்த நிலையிலேயே விமானத்தை தபூக் நோக்கி கொண்டு சென்றனர்.

தபூக்கில் பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்

காலை 6.58 மணியளவில் FZ1073 விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஃப்ளைதுபாய் பின்னர் தெரிவித்தது.

காயமடைந்த ஸ்மித் மச்சாரும் தாக்குதல் நடத்திய மற்றொரு விமானியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஸ்மித் மச்சாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

தபூக்கில் சிக்கியிருந்த பயணிகளை அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

பயணிகள் சொல்வது என்ன?

இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஷோட்டா முசாயேவ், “அற்புதங்களை நம்புங்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை செய்தார்கள். அனைவருமே ஹீரோக்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.

அசாஃப் ராஜுவான், தாக்குதல் நடத்தியவரை சுமார் 50 நிமிடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

யானிவ் ஹயூன், விமான விபத்துகள் தொடர்பான ‘Mayday’ நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த அனுபவம் அந்த நேரத்தில் தனக்கு உதவியதாக கூறியுள்ளார்.

நெதன்யாகு, மோடி, டிரம்ப் பாராட்டு

இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார். காயமடைந்த நிலையிலும் கதவை திறந்து மற்றவர்கள் உள்ளே வருவதற்கு ஸ்மித் வழி ஏற்படுத்தியதை அவர் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்மித் மச்சாரை பாராட்டியுள்ளார். கடுமையாக காயமடைந்த நிலையிலும் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற அவர் காட்டிய துணிச்சலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், மிகப்பெரிய துயரம் தவிர்க்கப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார். ஸ்மித் மச்சாரை நினைத்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் ஸ்மித் மச்சாரின் செயலை பாராட்டியுள்ளார். விமானிகள் அறையின் கதவை அவர் திறந்ததை குறிப்பிட்டு, ஸ்மித் மச்சாரை ஹீரோ என டிரம்ப் வர்ணித்தார்.

தீவிரவாத தொடர்பா? விசாரணை தீவிரம்

இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை. தாக்குதல் நடத்திய விமானி ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டாலும், அவரது நாட்டை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, தீவிரவாத தொடர்பு உள்ளதா, தாக்குதல் நடத்தியவருக்கு வேறு யாருடைய உதவியாவது கிடைத்ததா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை தாக்குதலுக்கான நோக்கமோ, தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்போ உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலுக்கு வரும் விமானங்களின் விமானிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அடையாள சோதனைகளை மேலும் கடுமையாக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமானத்துக்குள் நடந்தது என்ன?

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share