கூட்டாட்சியும் கூட்டணி ஆட்சியும்

Published On:

| By Mathi

Federalism Coalition

ரவிக்குமார்

‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கத்தைத் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது. 1970ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் உருவெடுத்த இந்த முழக்கம் தமிழக எல்லையைத் தாண்டி இந்திய அளவில் எதிரொலிகளை எழுப்பியது. இந்தித் திணிப்பையும், வடவர் ஆதிக்கத்தையும் எதிர்ப்பதாக வெளிப்பட்ட இந்தக் குரல், தமிழுக்கான அங்கீகாரத்தைக் கோருவதாகவும், மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கேட்பதாகவும் அமைந்திருந்தது. அன்று, அதற்குத் தெளிவான கருத்தியல் வடிவத்தை வழங்கியவர் முரசொலி மாறன் ஆவார்.அவர் மாநில சுயாட்சி குறித்து எழுதிய நூல் இன்றும் பொருந்தக்கூடியதாகும்.

ADVERTISEMENT

ஆட்சி அதிகாரத்தை திமுக பிடித்தது முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலம் வரை தமிழ்நாட்டில் இந்த மாநில சுயாட்சி முழக்கம் ஓங்கி ஒலித்ததை நாம் அறிவோம். ராஜமன்னார் குழு பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974ஆம் ஆண்டில்தான், சுதந்திர தினத்தன்று கோட்டையிலே தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்திய அளவில் ஒரு முன்னுதாரணத்தைக் கலைஞர் உருவாக்கினார்.

 இப்படி மாநில மக்களின் உணர்வுகள் சனநாயக ரீதியாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரங்களைக் குவித்துக்கொள்ள வேண்டும் என்ற நாட்டம் அன்றைய பிரதமர் இந்திராவின் கண்களை மறைத்தது. மாநில உணர்வுகள் சனநாயக ரீதியாக வெளிப்படுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டபோது பிரிவினை முழக்கங்கள் எழுந்தன. பஞ்சாப்பிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ரத்த ஆறு பெருக்கெடுக்க அதுவே காரணமாய் அமைந்தது.

ADVERTISEMENT

              இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனையை ஆராய்கிறவர்கள் அதன் வேர் 1947ஐத் தாண்டியும் ஆழ்ந்து செல்வதை அறிவார்கள். மொழியால், இனத்தால் வேறுபட்டுக் கிடக்கும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்தியாவை நிர்வகிப்பதற்கு பிரிட்டிஷ்காரர்களும், படாதபாடுபட்டதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்ட அவையின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தத்தமது மாநிலங்களின் பிரதிநிதிகளாக அதில் பங்கேற்கவில்லை. எனவே மத்திய மாநில உறவுகள் குறித்த ஆழமான விவாதம் அந்த அவையில் நடைபெறவில்லை. நாட்டுப் பிரிவினையின் ரணம் ஆறாமல் இருந்த சூழலில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் பிரிவினைக்கு இட்டுச் சென்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் அன்றைய அரசியல் தலைவர்களிடம் மேலோங்கி இருந்தது. அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய அம்பேத்கரும் அதற்கு விதிவிலக்காக இல்லை. அதனால்தான் மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கினாலும் தேவைப்படும்போது அந்த அதிகாரங்களை மத்தியில் மாற்றிக் கொள்வதற்குத் தோதாக நமது அரசியலமைப்புச் சட்டத்தை அவர் உருவாக்கினார்.

ADVERTISEMENT

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் சிக்கலாக மொழிவாரி மாநில உருவாக்கப் பிரச்சனையைக் குறிப்பிடலாம். இது மாநில நலன்களுக்கான கோரிக்கையின் ஒரு வடிவம் தான். மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற யோசனை 1928 ஆம் ஆண்டு நேரு தலைமையிலான கமிட்டியால் முன்வைக்கப்பட்டபோதிலும் சுதந்திரத்துக்குப் பிறகு அதை காங்கிரஸ் கைவிட்டு விட்டது. 1948 ஜூன் 17ஆம் தேதி நியமிக்கப்பட்ட தார் கமிஷன், மாநிலங்களை மொழியின் அடிப்படையில் அமைப்பது நல்லதல்ல என்று கூறிவிட்டது. பூகோள அமைப்பு, பொருளாதாரத் தற்சார்பு, நிர்வாக வசதி, எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாநிலங்களைப் பிரிக்க வேண்டுமென அது தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதே ஆண்டு காங்கிரஸால் அமைக்கப்பட்ட நேரு, பட்டேல், பட்டாபி ஆகியோர் அடங்கிய குழுவும் மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை கோரிக்கையை வலுப்படுத்திவிடும் என்று எச்சரித்தது. இதனால் இந்தப் பிரச்சனையை மத்திய அரசு ஒத்திப்போட்டது.

தெலுங்கு பேசும் மக்களுக்கென தனி மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு 1952 அக்டோபர் 19ஆம் நாள் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கினார். ஐம்பத்தாறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர் டிசம்பர் பத்தாம் நாள் இறந்தார். அதைத் தொடர்ந்து எழுந்த பதற்றமான சூழலின் காரணமாக மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. எனவே 1954ஆம் ஆண்டில் மத்திய அரசால் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு அதற்குத் தலைவராக நீதிபதி ஃபஸுல் அலியும் உறுப்பினர்களாக இருதயநாத் குன்ஸ்ரு மற்றும் கே.எம்.பணிக்கர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். அந்த ஆணையம் பதினாறு மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களை அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 1956ஆம் ஆண்டு பதினான்கு மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. அத்துடன் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடவில்லை. 1971க்கும் 1987க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தில் பல புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

2000த்தில் மூன்று மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. பீகாரின் தென் பகுதியிலிருந்த மாவட்டங்களைச் சேர்த்து ஜார்கண்டும், மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்களை ஒருங்கிணைத்து சட்டீஸ்கரும், உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்களை இணைத்து உத்தராஞ்சலும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டன. இவையெல்லாவற்றையும் சேர்த்து தற்போது இருபத்தெட்டு மாநிலங்களும் ஏழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவில் அமைந்துள்ளன. இப்போது மேலும் பல மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வருகிறது. விதர்பா மட்டுமல்லாது ஹரித் பிரதேஷ், பூர்வாஞ்சல், கோண்டுவானா, கொடகு முதலான மாநிலங்களை உருவாக்கவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தைப் பிரித்து ஹரித் பிரதேஷ் பூர்வாஞ்சல் என்று இரண்டு புதிய மாநிலங்களை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதில் ஹரித் பிரதேஷை உருவாக்கும் திட்டத்துக்கு மாயாவதியும் முன்னர் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியின் தலைவர் அஜீத்சிங் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீரட், ஆக்ரா, ஷஹ்ரன்பூர், பரேலி மற்றும் மொராதாபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருபத்திரண்டு மாவட்டங்களைப் பிரித்து ஹரித் பிரதேஷ் மாநிலத்தை உருவாக்கவேண்டுமென்ற அஜீத் சிங்கின் கோரிக்கையை அந்தப் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆதரிக்கின்றன. அப்படியொரு மாநிலம் உருவாக்கப்பட்டால் அதில் சுமார் முப்பது சதவீதம் முஸ்லீம்கள் இருப்பார்களென்பதே அவர்களது ஆதரவுக்குக் காரணம். உத்தரப்பிரதேரசம் முழுமைக்கும் பதினேழு சதவீதம் உள்ள முஸ்லீம் மக்கள் தொகை அம்மாநிலத்தின் மேற்குப்பகுதியில்தான் அடர்த்தியாக உள்ளது. எனவே அந்த மாநிலத்தின் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க முடியும் என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர்.பூர்வாஞ்சல் என்பது வாரனாசி, மிர்சாபூர், கோரக்பூர் உள்ளிட்ட பதினேழு மாவட்டங்களைக் கொண்ட பகுதியாகும்.  

புதிய மாநிலங்களை உருவாக்குவது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பிரிவுகள் இதை உறுதி செய்துள்ளன.      கடந்த காலங்களில் மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதற்குப் பின்னணியில் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களே வலுவாக செயல்பட்டுள்ளன. மைய நீரோட்டத்திலிருந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் உணரும்போது இந்தத் தனி மாநில கோரிக்கை மேலும் தீவிரம் பெறுகிறது. சிறிய மாநிலங்கள் ஒப்பீட்டளவில் ஜனநாயகத்துக்கு உகந்ததாகவே இருக்கின்றன என்பதைப் புதிதாக உருவான மாநிலங்கள் நிரூபிக்கின்றன. மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை எண்ணத்தை வலுப்படுத்திவிடும் என்று நேரு முதலான தலைவர்கள் தெரிவித்த அச்சம் இப்போது தவறென்று ஆகிவிட்டது. அம்பேத்கரும் கூட துவக்கத்தில் இந்த எண்ணத்தைத்தான் வெளிப்படுத்தினார். ஆனால் 1955ல் தனது கருத்தை அவர் மாற்றிக்கொண்டார்.

உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை எதிர்காலத்தில் மேலும் பல மாநிலங்களாகப் பிரியும் என அம்பேத்கர் கூறினார். உத்தரப்பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். பீகாரை இரண்டாகப் பிரிக்க வேண்டும். மத்திய பிரதேசத்தையும் இரண்டு மாநிலங்களாக்க வேண்டும் என்றார். ஏறத்தாழ அவர் பிரித்துக் காட்டிய விதத்தில் தான் இன்றைய உத்தராஞ்சல், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருப்பெற்றுள்ளன.

சிறிய மாநிலங்களை உருவாக்கும்போது அங்கே உள்ள சிறுபான்மை மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். மொழி மத அடிப்படையிலான சிறுபான்மையினர் மட்டுமின்றி சாதி அடிப்படையிலான சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர் கூடுதல் அழுத்தம் தந்தார். சிறிய மாநிலங்கள் பெரும்பான்மை சாதியினரின் கொடுங்கோன்மையாக மாறிவிடக்கூடாது என்று அவர் எச்சரித்தார். அது இப்போதும் பொருத்தமான ஒரு எச்சரிக்கை ஆகும்.

தேசிய முன்னணி அரசு உருவானபோது அதில் மாநிலக் கட்சிகள் பல பங்குபெற்றன. அதிலிருந்து கூட்டணி ஆட்சி என்பது மத்தியில் தொடர்கதையாகிவிட்டது. அதை சனநாயகமாக்கலின் ஒரு வெளிப்பாடு எனப் பலரும் பாராட்டினர். ஆனால்,  ‘‘கூட்டணி ஆட்சி’’யை ‘‘கூட்டாட்சி’’ எனத் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் அதுவே வழிவகுத்துவிட்டது. இந்திய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டையொட்டி இந்து ஆங்கில நாளேட்டில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதில் இந்தப் பிரச்சனையை மிகவும் நுட்பமாக அவர் தொட்டுக் காட்டியிருந்தார். 1990 களுக்குப் பின் மத்தியில் அமையும் ஆட்சிகளில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பது தொடர் நிகழ்வாகிவிட்டது என்பதை சுட்டிக் காட்டியிருந்த கலைஞர், மத்தியில் அதிகாரத்துவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு செய்யப்பட்ட முயற்சிகளையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசில் பிராந்திய கட்சிகள் பங்கேற்றாலும் கூட மாநில உரிமைகள் புறக்கணிக்கப்படும் அவலத்தைக் கலைஞர் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். மத்திய மாநில உறவுகளை மாற்றியமைப்பது பற்றிய சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததால் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் தொடர்ந்து மைய அரசிடம் குவிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய கலைஞர் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சியை ஏற்படுத்திட இதுவே சரியான தருணம் என்று அரசியல் கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்திருந்தார். ஆதிக்க உணர்வும், தாமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் கூட்டாட்சிக்கு உதவாது கூட்டுறவே அதற்கு வழிவகுக்கும் எனக்கூறியிருந்த அவர் மாநில அரசுகளைக் கலைப்பதற்கு வகை செய்யும் அரசியல் சட்டப்பிரிவு 356ஐக் கண்டித்திருந்தார்.

              கலைஞரின் கட்டுரையை இன்றைய சூழலில் பொருத்திப்  பார்க்கும்போது நமக்கு சில கேள்விகள் எழுகின்றன: தற்போது தமிழ்நாடு எதிர்கொள்கிற பிரச்சனையை மத்திய – மாநில உறவுகள் தொடர்பான பிரச்சனையாக மட்டுமே பார்க்க முடியுமா? மாநிலக் கட்சிகள் பங்கேற்பதாலேயே மத்தியில் இருப்பது கூட்டாட்சி ஆகிவிடுமா?

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற குரல் காங்கிரஸ் , பாஜக ஆகிய தேசிய கட்சிகளிடமிருந்து எழும் இந்தச் சூழலில்

மத்தியில் நடக்கும் கூட்டணி ஆட்சியைக் கூட்டாட்சியாக எப்படி விரிவுபடுத்துவது ? அதற்கான முழக்கம் எது ? செயல்திட்டம் எது? என்பதை மாநிலக் கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கான விவாதத்தை முன்னெடுப்பது அரசியல் செயல்பாட்டாளர்களின் கடமையாகும்.

கட்டுரையாளர் குறிப்பு:

முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share