இந்திய குற்றவியல் சட்டங்கள் பெயர் மாற்றம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இன்று (ஆகஸ்ட் 19) கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்று இந்திய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 11-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவானது இந்திய பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்ட துணிச்சலான முயற்சி என்றும் மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம் என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் இந்திய குற்றவியல் சட்டங்கள் பெயர் மாற்றம் தொடர்பாக நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட,
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சக்ஷ்ய மசோதா ஆகியவை வருகிற ஆகஸ்ட் 24-26 தேதிகளில் உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதற்கு அளிக்கப்பட்டுள்ள கால வரம்பு வெறும் 3 மாதங்கள் ஆகும்.
மாநில அரசுகள், நீதிபதிகள், காவல்துறையினர், இந்திய பார் கவுன்சில், அனைத்து மாநில பார் கவுன்சில்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள்,
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பிறரும் தயவுகூர்ந்து இந்த 3 மசோதாக்களின் பெயர்களை மாற்றுவதற்கான கோரிக்கை (தலைப்பு) உள்ளிட்ட, 3 மசோதாக்கள் குறித்து பதிலளிக்கவும், சீராய்வு செய்ய உதவும் வகையில் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தனிப்பட்ட முறையிலோ அல்லது மாநில வாரியாகவோ நேரடி விசாரணை கோர அல்லது உங்கள் ஆட்சேபனைகளை அனுப்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
