விஜய் ஆட்சி கவிழும் என பேசினாரா ஸ்டாலின்? ஏன் திரித்து பேசுறீங்க? சிபிஐ, சிபிஎம், விசிக மீது திமுக பாய்ச்சல்!

Published On:

| By Mathi

Did Stalin say Vijay’s Govt will fall

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி 3 மாதங்களில் கவிழுந்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக திரித்து செய்தி பரப்பப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி விளக்கம் தந்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் விசிக-விலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 7-ந் தேதி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ”6 மாதம் வரை இந்த ஆட்சி பற்றிப் பேசப் போவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைப் பார்க்கும்போது, இந்த ஆட்சி 6 மாதம் அல்ல, 3 மாதம் கூடத் தாங்காது என்ற நிலைமையில்தான் போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.

ADVERTISEMENT

சிபிஎம் சண்முகம் விமர்சனம்

புதுக்கோட்டையில் ஜூன் 7-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், ஸ்டாலினின் இந்த பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பெ.சண்முகம், “யார் சொன்னாலும் ஆட்சி கவிழும் என்று பேசுவது தவறு; தமிழ்நாட்டில் இப்போது திமுக கூட்டணி என்ற ஒன்றே இல்லை” என்றார்.

ஸ்டாலின் இப்படி பேசலாமா? சிபிஐ வீரபாண்டியன்

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜூன் 8-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனிடமும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர், அதற்கு, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தவெக அரசு 3 மாதங்களுக்கு மேல் தாங்காது எனப் பேசியுள்ளார். அவர் ஒரு மிக மூத்த அரசியல் தலைவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த தலைவர் இத்தகைய முதிர்ச்சியற்றக் கருத்துக்களை பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது, அது முற்றிலும் தவறானது” என்றார் வீரபாண்டியன்.

ADVERTISEMENT

தவெக ஆட்சியை பாதுகாப்போம்- திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன், PTI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இன்னும் ஓரிரு மாதங்களில் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே உள்ள நாங்கள் அனைவரும் – காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் ஆகிய அனைத்துக் கட்சிகளும் – தவெக ஆட்சி அமைப்பதற்கும், அந்த ஆட்சியை நிலைப்படுத்துவதற்கும் எங்களது ஆதரவை வழங்கியுள்ளோம். எனவே, இந்த ஆட்சி முடியும் காலம் வரை எங்களது ஆதரவை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். அதனால், இந்த ஆட்சி கவிழாது என்று நான் நம்புகிறேன்” என கூறியிருந்தார்.

திமுக தங்கம் தென்னரசுவின் விளக்கம்

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாலின் பேசியது திரிக்கப்பட்டுள்ளது; தவெக ஆட்சி கவிழும் என்பது எங்களது நிலைப்பாடு அல்ல விளக்கம் தந்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.

ஆளும் கட்சி பெண்ணுக்கு கொடுமை

ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.

ஸ்டாலின் பேசியது இதுதான்..

“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் அவர்கள் பேசினார்கள். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.

தவெக ஆட்சி கவிழும் என்பது நிலைப்பாடு அல்ல

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!

ஸ்டாலின் பேச்சுக்கு இதுதான் விளக்கம்

“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.

ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு

ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள். இதைத்தான் ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்! இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share