தமிழகத்தில் புதிய அரசு ஆட்சி அமைத்த போது 6 மாதத்திற்கு பேசப் போவது இல்லை என்றேன். ஆனால் இப்போது மூணு மாசமாவது தாங்குமா என்ற ஒரு கேள்விக்குறியோடு தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பனையூர் பாபு அவர்களும், அவரோடு சேர்ந்து வருகை தந்திருக்கக்கூடிய நீங்களும், தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு, வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அவர்களே,
கழகத்தினுடைய பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி கருணாநிதி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞரணியின் செயலாளர் உதயநிதி, திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர், அன்பிற்குரிய எ.வ.வேலு, சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் மா.சுப்பிரமணியன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மற்றும் வருகை தந்திருக்கக்கூடிய தோழர்களே, அருமைச் சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
செய்யூர் சட்டமன்றத்தினுடைய முன்னாள் உறுப்பினர், நம்முடைய பனையூர் பாபுவையும், அதேபோல அவரோடு கைகோர்த்து வந்திருக்கக்கூடிய உங்களையும் நான் வருக, வருக, வருக என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே, தலைமைக் கழகத்தின் சார்பிலே, மாவட்டக் கழகத்தின் சார்பிலே நம்முடைய சுந்தர் அவர்கள் ஏற்கனவே வரவேற்றுத் தந்திருந்தாலும், தலைவர் என்ற முறையிலே நான் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்கள் அத்தனை பேரையும் நான் வருக, வருக என்று நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக உங்களை இணைச்சுக்க வந்திருக்கக்கூடிய உங்க எல்லோரையும், இந்த இயக்கத்தினுடைய முதன்மைத் தொண்டனாக மிகுந்த மகிழ்ச்சியோடு, வாஞ்சையோடு வருக, வருக என்று நான் வரவேற்கிறேன்.
பனையூர் பாபு அவர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கடந்த அஞ்சு வருஷமா நான் சட்டமன்றத்தில் அவரைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்ததுண்டு. சட்டமன்றத்திற்கு வரும்போது அமைதியாக வருவார், அமைதியாக போவார். அதே சமயம் சட்டமன்றத்திலே எழுந்து பேசுகிற போது ஆக்கபூர்வமான கருத்துக்களை, தன்னுடைய தொகுதிக்கு சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய பிரச்சனைகளை அங்கே வலியுறுத்திப் பேசக்கூடியவர். ஒரு கொள்கைவாதியாக, ஒரு லட்சியவாதியாக, ஒரு போராளியாக தன்னுடைய கருத்துக்களை முன்வச்சுப் பேசக்கூடியவர்.
பொதுவா, சிலர் ஒரு இயக்கத்திலிருந்து வெளியேறுகிற போது, மற்றொரு இயக்கத்தில் போய் சேருகிற போது கொஞ்சம் விமர்சனம் பண்ணி, ஏன் தரம் தாழ்ந்து கூட பேசுகிற அந்த பாணியைப் பார்த்திருக்கிறோம். ஆனா நம்முடைய பனையூர் பாபு அவர்கள் அப்படியல்ல. அரசியல் மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் அடக்கத்தோடு சுட்டிக்காட்டி ஏற்கனவே ஒரு அறிக்கையாக வெளியிட்ட அந்தச் செய்தியை நீங்க படிச்சிருப்பீங்க, நானும் படிச்சேன். அப்படி வெளியிட்ட அந்தச் செய்தியில் யாரையும் புண்படக்கூடிய வகையில எந்த வார்த்தையும் இல்லை. அமைதியா, அழகா, அடக்கமா அவர் கையாளக்கூடிய அந்த விதம். இப்ப கூட நீங்க பேசும்போது பார்த்திருக்கலாம். யாரையாவது விமர்சனம் பண்ணிப் பேசினாரா? இல்லை. எதற்காக இந்த இயக்கத்துல வந்து சேர்ந்திருக்கிறோம், அதைத்தான் அவர் இங்கே வலியுறுத்தி, வற்புறுத்தி, அழகாக எடுத்துச் சொல்லி அவர் பேசியிருக்கிறார்.
கொண்ட கொள்கைக்காக உறுதியோடு உழைக்கக்கூடிய ஒரு செயல்வீரர் தான் நம்முடைய பனையூர் பாபு அவர்கள். அதுக்கு அவருடைய அரசியல் பயணமே சாட்சியா அமைஞ்சிருக்கு. 2007-ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில சேர்ந்து, 2009-ல இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையினுடைய மாநிலத் துணைச்செயலாளர் பொறுப்பை ஏற்று, அந்த அமைப்புக்கு ஒரு ஊடக வலிமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சி ஒன்றையும் அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த ஊடகப் பிரிவினுடைய செயலாளராக, முதன்மைச் செயலாளராக இருந்து பணியாற்றியிருக்கிறார்.
அப்படிப்பட்ட இந்த உழைப்பாளர் தான் 2021-ஆம் ஆண்டு செய்யூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக அவர் உயர்ந்தார். அவரே சொன்னார், சட்டமன்றத்துல நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் செஞ்சிருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொன்னார். சட்டமன்றத்தில் அதற்கான கேள்விக்கணைகளை எல்லாம் தொடுத்தார், கோரிக்கைகளை எல்லாம் எடுத்து வைத்தார். தனக்காக அல்ல, தன்னுடைய தொகுதிக்காக, தன்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்காக அவர் அந்தப் பணியை ஆற்றியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவரே குறிப்பிட்டார், ஒட்டுமொத்தமாக ஆதிதிராவிட மக்களுடைய நலனுக்காக கோரிக்கைகளை எல்லாம் அங்க வச்சோம், என்னுடைய சார்பில் மட்டுமல்ல, என்னுடைய இயக்கத்தின் சார்பில் கூட நாங்கள் கோரிக்கைகளை வச்சோம். அதையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்பதைப் பட்டியலிட்டு அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.
பரமக்குடியில சாதி எதிர்ப்பு சுயமரியாதை போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைச்சது திராவிட மாடல் அரசு தான். அதேபோல ஆதிதிராவிடப் பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது, அந்த அடையாளங்களை நீக்க வேண்டும் என்று சொல்லி அதையும் சட்டமாக்கித் தந்தோம். அதேபோல் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அதுவும் அமைச்சுத் தந்தோம். அதேபோல அருமைப் பெரியவர், பெருந்தலைவர் எல்.இளையபெருமாள் அவர்களுக்கு சிதம்பரத்திலே நூற்றாண்டு நினைவு அரங்கத்தை அமைச்சுக்கொடுத்தோம்.
இங்கே நந்தனத்துல நீங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க எம்.சி.ராஜா மாணவர் விடுதி. அது எப்படி இருந்தது ஒரு காலத்துல? அது இப்போ அண்ணா சாலையில் வருகிற போது எம்.சி.ராஜா மாணவர் விடுதி என்ற அந்தப் பச்சைக் கட்டிடத்தைப் பார்க்கிற போது நமக்கே பிரமிப்பாக இருக்கிறது. அதையும் புதுப்பித்து உருவாக்கித் தந்திருக்கிறோம்.
குறிப்பா, நம்ம பனையூர் பாபு அவர்களுடைய செய்யூர் தொகுதிக்குச் செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றி அவரே சொன்னார், இருந்தாலும் நானும் அதை வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன். செய்யூர்ல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதிய சிப்காட் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மீனவ மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலைப்பின்னல் கூடங்கள், கடல் சீற்றத்தால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பைத் தடுத்து குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கடலோரங்களில் கருங்கல் கொட்டக்கூடிய தடுப்புச் சுவர்கள், 10,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்… இப்படி பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால், நாங்க செஞ்சோம்னா அதுக்குக் காரணமாக இருந்தது உங்களுடைய பனையூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாபு அவர்கள் தான் காரணமாக இருந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஆற்றலுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்காரும் நமக்கு வகுத்துத் தந்திருக்கக்கூடிய கொள்கைகளை என்றென்றைக்கும் தன்னுடைய வாழும் நிலையான ஆயுதங்கள்னு அறிக்கை வெளியிட்ட ஒரு கொள்கைவாதி தான் இங்கே வந்திருக்கக்கூடிய, இந்த இயக்கத்தில் இன்றைக்குத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய பனையூர் பாபு அவர்கள். அவர் இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருப்பது உங்களுக்கு எப்படி எல்லாம் நீங்கள் மகிழ்ச்சியோடு அறிந்து கொண்டிருக்கீங்களோ, அவர் எப்படி மகிழ்ச்சியோடு வந்திருக்காரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நாங்கள் அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியிலே ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலனுக்காக என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்குமினு நம்முடைய பனையூர் பாபு அவர்கள் குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார்கள் தன்னுடைய அறிக்கையில. அந்தப் பயணத்தைத் தொடர ஒரு சரியான இயக்கமாக இருப்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்து இங்கே வந்து அவர் இணைந்திருக்கிறார். அவரையும், அவரோடு வந்திருக்கக்கூடிய உங்க எல்லாரையும் இந்த இயக்கத்தினுடைய தலைவனாக மட்டுமல்ல, இந்த இயக்கத்தினுடைய தலைமைத் தொண்டனாக அவரை வருக, வருக, வருக என்று வரவேற்கிறேன்.
திமுக-வைப் பொறுத்தவரைக்கும் எதிர்க்கட்சியா இருக்கும் போது தான் வேலை அதிகமா இருக்கும். அப்படிப்பட்ட நேரத்துல உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், நாங்கள் உங்களுக்குத் துணைநிற்கிறோம் என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கக்கூடிய பாபு அவர்களையும், உங்களையும் நான் மீண்டும் வருக, வருக என்று வரவேற்கிறேன்.
நீங்க ஏற்கனவே இருந்த இயக்கம், அந்த இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்யணும்னு அவசியமே இல்லை. செய்யவும் கூடாது, விமர்சித்து பேசவும் கூடாது, தேவையில்லை. ஏனென்றால் அண்ணா அவர்கள் ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று தான் சொல்லியிருக்கிறார் தவிர, யாரையும் குறைத்து மதிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியமில்லை. அதைத்தான் இங்கே நம்முடைய பாபு அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஏதாவது ஒரு வார்த்தை விமர்சித்து பேசினாரா? இல்லை. குறைத்து பேசினாரா? இல்லை. அதுதான் பாபு, அதுதான் பனையூர் பாபு!
ஆகவே, அப்படிப்பட்ட பாபு அவர்கள் இன்றைக்குத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். நான் அவரை மீண்டும் மீண்டும் வருக, வருக, வருக என்று வரவேற்கிறேன். நிச்சயமாக இன்றைக்கு நாட்டிலே நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதைப் பற்றி எல்லாம் நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் சொன்னேன், ஆறு மாசத்துக்கு இதைப் பற்றி நான் பேசப் போவது இல்ல. ஆனால் ஆறு மாசத்துக்கு முன்னாடியே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் தான் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது, வந்துவிட்டது. அதைப் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. ஆறு மாசம் இல்ல, அஞ்சு மாசம் இல்ல, நாலு மாசம் இல்ல, மூணு மாசமாவது தாங்குமா என்ற ஒரு கேள்விக்குறியோடு தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்திலே தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே, கழகம் ஈடுபடக்கூடிய எந்தப் பணிகளாக இருந்தாலும் அந்தப் பணிகளுக்கு நீங்களும் ஒத்துழைப்பு தருவதற்காக வந்திருக்கிறீர்கள். உங்களை மீண்டும் மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கீங்க, அண்ணா அறிவாலயம் மட்டுமல்ல கலைஞர் அரங்கத்திற்கே வந்திருக்கீங்க. ஆக, அப்படிப்பட்ட சூழ்நிலையிலே உங்களையெல்லாம் மீண்டும் மீண்டும் வருக, வருக, வருக, வருக என்று வரவேற்கிறேன்” என்றார்.
