பெரம்பூர்: தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜய் மனு மீது நாளை தீர்ப்பு!

By Mathi

|

Published on 26 Nov 2026, 9:58 PM

Perambur-Vijay-High Court

பெரம்பூர் சட்டசபை தொகுதியில் தாம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை (நவம்பர் 27-ந் தேதி) உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஜய்யின் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் எஸ்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் விஜய் தமது சொத்துகள் தொடர்பான பல்வேறு விவரங்களை மறைத்துள்ளதாக தினேஷ் குற்றம்சாட்டியிருந்தார்.

தேர்தல் வழக்கை நிராகரிக்க விஜய் மனு

இதனிடையே தினேஷ் தொடர்ந்த தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார். அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது விஜய் மற்றும் தினேஷ் தரப்பில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ரூ.30 கோடி நிலம் வாங்கிய விவகாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பண்ருட்டி கிராமத்தில் ஜனவரி 6-ந் தேதி ரூ.30 கோடிக்கு 3 ஏக்கர் நிலத்தை விஜய் வாங்கியதாகவும், இந்த விவரத்தை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கவில்லை என்றும் தினேஷ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் சொத்துகள் வாங்கியது தொடர்பான பத்திரங்கள், சொத்துகளின் மதிப்பு உள்ளிட்ட விவரங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

கொடைக்கானலில் 50 சென்ட் புறம்போக்கு நிலம்?

கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தைத் தமது சொத்தாக விஜய் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அந்த நிலம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும் தினேஷ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த நிலத்தை நீண்டகாலத்துக்கு முன்பே வாங்கியதற்கான கிரயப் பத்திரத்தை விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

விஜய் தரப்பு வாதம் என்ன?

விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும், தினேஷ் தரப்பில் வழக்கறிஞர் என்.சி. அசோக்குமாரும் ஆஜராகி வாதிட்டனர். விஜய் மிகப்பெரிய செல்வந்தர் என்பது வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். சில கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின் விவரங்கள் விடுபட்டிருந்தால் அது வாக்காளர்களின் முடிவை எப்படிப் பாதிக்கும்? என விஜய் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை மறைப்பதையும், சொத்து விவரங்கள் விடுபட்டிருப்பதையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதி எழுப்பிய கேள்விகள்

ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள விஜய், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரத்தைத் தெரிவிக்காதது வாக்காளர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அது தேர்தல் முறைகேடாகக் கருதப்படுமா? என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடந்த அக்டோபர் 7-ந் தேதி விசாரணையின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்திருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாதா? நிலத்தின் உரிமை தொடர்பாகத் தேர்தல் வழக்கில் விசாரிக்க முடியுமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

நாளை தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விஜய்யின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில்தான் தினேஷ் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி வி.லட்சுமிநாராயணன் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel