சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது எதிர்க்கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. chattisgarh former cm bhupesh baghel son chaitanya arrested
கடந்த 2019 முதல் 2022 வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்வராக பூபேஷ் பாகல் செயல்பட்டார். இந்த காலக்கட்டத்தில் மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஊழலால் மாநில அரசுக்கு ரூ.2100 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் கடந்த 2024ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கவாசி லக்மா, ராய்ப்பூர் மேயர் ஐஜாஸ் தேபரின், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா, இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது சுமார் 205 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 10ஆம் தேதி முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகலின் நெருங்கிய நண்பரான லட்சுமி பன்சால் என்கிற பப்பு பன்சால் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்தநிலையில் தான் நேற்று துர்க் பகுதியில் வசித்து வரும் சைதன்யா பாகலின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர். நேற்று (ஜூலை 19) சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இதற்கு சைதன்யா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறி கைது செய்துள்ளனர்.
பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 19 படி கைது செய்யப்பட்டுள்ள சைதன்யாவை ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 5 நாள் கஷ்டடியில் எடுத்துள்ளனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.
இந்த கைது குறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் சௌராத்குமார் பாண்டே கூறுகையில், “மதுபான கொள்கை முறைகேட்டில் ஆதாரங்களை சேகரித்தபோது, சைதன்யா நிறைய பணத்தையும் குற்ற செயல்களையும் மறைத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. சுமார் 1000 கோடி ரூபாய் பணம் மாற்றுவதற்கு சைதன்யா உதவி இருக்கிறார். அதற்கு அவர் 13 கோடி ரூபாய் பணம் பெற்று இருக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சைதன்யாவின் வழக்கறிஞர் பைசல் ரிஸ்வி கூறுகையில், ” இந்த விவகாரம் 2022 முதல் நடந்து கொண்டிருக்கிறது. முதல் குற்றப்பத்திரிக்கை அமலாக்கத்துறையால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மூன்று கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அதில் எங்கும் சைதன்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
மேலும் அமலாக்கத்துறை சைதன்யாவுக்கு சம்மன் கூட அனுப்பவில்லை. பப்பு பன்சால் என்பவருக்கு கடந்த மே 16ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாதன் பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பப்பு பன்சால் ஒரு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் சைதன்யாவை கைது செய்துள்ளனர்.
அவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
தனது மகன் கைது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறுகையில், “மோடியும் அமித்சாவும் எனது மகனுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசை உலகின் எந்த ஜனநாயகத்திலும் வேறு யாராலும் கொடுக்க முடியாது. இந்த பரிசுகளுக்கு நன்றி. வாழ்நாள் முழுவதும் இவை நினைவில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஒருபுறம் பிகாரில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள், ஜனநாயகம் பறிக்கப்படுகிறது.
மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்குவதற்கு அவர்கள் ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ மற்றும் டி.ஆர்.ஐ ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார். chattisgarh former cm bhupesh baghel son chaitanya arrested
