காற்றில் கலந்த இசை: ஜெயச்சந்திரன் மறைவால் கலங்கும் பிரபலங்கள்!

Published On:

| By christopher

பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 80.

திருச்சூர் மாவட்டம் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஜனவரி 9) மாலை 7 மணியளவில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற பின்னணி பாடகராக வலம் வந்தவர் ஜெயச்சந்திரன்.

1944 மார்ச் 3ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ரவிபுரத்தில் பிறந்தார். அவரின் பாடும் திறமையை சிறுவயதிலேயே அறிந்துகொண்ட அவரது அண்ணன் சுதாகரன் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.

தலைமுறை கண்ட பாடகர்

1965ஆம் ஆண்டு வெளியான ‘குஞ்சாலி மரக்கார்’ படத்தில் பி. பாஸ்கரன் எழுதி சிதம்பரநாத் இசையமைத்த ‘ஒரு முல்லைப்பூ மாலமாய்’ என்ற பாடல் மூலம் ஜெயச்சந்திரன் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.

தமிழ் திரையுலகில் 1973ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள்’ படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ‘பொன்னென்ன பூவென்ன’ என்ற பாடலைப் பாடி அறிமுகமானார்.

அதன்பின்னர் இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி.பிரகாஷ் என பல தலைமுறைகளாக பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக, தமிழில் பாரதி ராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் `கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி’ பாடலைப் பாடியதற்காக, 1994-ல் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான திரைப்பட விருது பெற்றார்.

ஏழைகளின் ஜேசுதாஸ்

இளையராஜா இசையில் தாலாட்டுதே வானம், மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், காத்திருந்து காத்திருந்து, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, கொடியிலே மல்லியப்பூ போன்ற பல நெஞ்சம் வருடும் பாடல்களை பாடியுள்ளார்.

அதே போன்று விஜய்க்காக பூவே உனக்காக படத்தில் ’சொல்லாமலே யார் பார்த்தது’ முதல் அஜித்குமாருக்காக கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே’ வரை என இன்றைய தலைமுறையின் மனதையும் தனது குரலால் வருடியுள்ளார்.

ஏழைகளின் ஜேசுதாஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயச்சந்திரன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்திருக்கிறது. மேலும் தனது குரலுக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

பிரபலங்கள் இரங்கல்!

ஜெயச்சந்திரன் மறைவை அடுத்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமர் எம்.பி விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், “என்றும் மனதில் நிற்கும் மிக சிறந்த பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன்மறைவு சோகம் தரும் செய்தி. அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அமைச்சர் மா.சு. மீதான வழக்கில் இன்று தீர்ப்பு: ஹெச்.ராஜாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி

டாப் 10 நியூஸ் : ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் முதல் கேம் சேஞ்சர், வணங்கான் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ரெட் வெல்வெட் பொங்கல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share