தம்மை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரில் இருவருக்கு தமது தரப்பு வாதத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு பில்கிஸ் பானு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மத வன்முறைகளின் போது 21 வயதான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது 3 வயது மகள் சலேஹா உட்பட குடும்பத்தினர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி, குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதைத் தொடர்ந்து பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி உச்சநீதிமன்றம் குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. 11 பேரும் மீண்டும் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
2 பேருக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற பிபின்சந்த் கனையாலால் ஜோஷி, பிரதீப் ராமன்லால் மோதியா ஆகிய இருவரின் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.பி.வராலே அமர்வு கடந்த அக்டோபர் 28-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துள்ளதையும், மேல்முறையீட்டு வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதையும் கருத்தில் கொண்டு, அவர்களது ஆயுள் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருவரையும் ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
19 நாட்களுக்குப் பிறகு வெளியான உத்தரவு
அக்டோபர் 28-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, 19 நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனக்குத் தகவல் தெரிவிக்காமலும் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமலும் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாக பில்கிஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார்.

என் குரலைக் கேட்காமல் எப்படி உத்தரவிடலாம்?
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா மூலம் வெளியிட்ட அறிக்கையில் பில்கிஸ் பானு கூறியிருப்பதாவது: வேதனை, அதிர்ச்சி, நம்ப முடியாத நிலை ஆகியவற்றால் மீண்டும் கண்ணீர் பெருகும் இந்த நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
என்னை அழைக்காமலும், என் தரப்பு வாதத்தைக் கேட்காமலும் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த உத்தரவு குறித்து ஊடகச் செய்திகள் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன்.
எனக்கு 19 வயதாக இருந்தபோது என்னுடைய உலகம், என்னுடைய பச்சிளம் மகள், என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு, மனிதநேயத்தின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை என அனைத்தும் கொடூரமாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டன. அந்த நாளிலிருந்து கடந்த 24 ஆண்டுகளாக எனக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் நீதிகேட்டுப் போராடி வருகிறேன்.
ஒவ்வொரு நீதிமன்றமாக சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு நீதி கிடைத்தபோது நன்றியுணர்வுடன் இருந்திருக்கிறேன். நீதியின் மீதான எனது நம்பிக்கையும் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஆனால், இன்று நான் இவ்வளவு கடுமையாகப் போராடிப் பெற்ற நீதியையே இழந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன்.
பழைய அச்சங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன. எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் குழந்தைகளுக்காகவும் பயப்படுகிறேன். எனக்கு இத்தகைய கொடுமைகளைச் செய்தவர்களின் தண்டனையை, எனக்குத் தகவல்கூடத் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றம் எப்படி நிறுத்திவைக்க முடியும்? நீதிமன்றத்தில் எனது குரலும் கேட்கப்படுவதை எப்படி உறுதிசெய்யாமல் இருக்க முடியும்?
இந்த உத்தரவை எதிர்த்துப் போராடுவேன். நான் போராடியே ஆக வேண்டும்.
என்னுடைய குழந்தைகளுக்காக இதைச் செய்கிறேன். இந்த அச்சங்களும் ஆறாத வடுக்களும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களைத் துரத்திக்கொண்டிருக்கக் கூடாது.
உயிருடன் வாழ்ந்திருக்க வேண்டிய என்னுடைய 3 வயது மகள் சலேஹாவுக்காக இதைச் செய்கிறேன். அவளுடைய நினைவுகள் நீதி கேட்கின்றன. இவ்வாறு பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.









