மதுரை ரயில் நிலையத்தில் தீபம்…தடுக்க முடியுமா? விஜய்க்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சவால்!

By Mathi

|

Published on 27 Nov 2026, 12:03 AM

Ashwini Vaishnaw Challenges Vijay

புதுப்பிக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்திலேயே ஒரு தீபம் இருக்க வேண்டும் என தாம் நினைப்பதாகத் தெரிவித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எங்களது இறை நம்பிக்கையை வெளிப்படுத்துவதை முதல்வர் விஜய்யாலும் காங்கிரஸாலும் தடுக்க முடியுமா? என சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற பாஜகவின் அரசியலமைப்புச் சட்ட நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 100 வாக்குகளைப் பெற வேண்டும். உங்கள் தொகுதியில் மட்டுமல்ல; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 100 வாக்குகளைப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் 75,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100 கூடுதல் வாக்குகள் என்பதுதான் இப்போது நமது இலக்கு. இதனை நாம் செய்து முடிப்போம்.

ADVERTISEMENT

காங்கிரஸுக்கு குடும்பமே முக்கியம்

நமது ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். டாக்டர் அம்பேத்கரையும் அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதித்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய 5 இடங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் மேம்படுத்தியது. 70 முதல் 75 ஆண்டுகளில் செய்யப்படாததை நமது அரசு செய்துள்ளது. வேறு சிலர் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை தங்களது சட்டைப் பையில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை விட குடும்பம்தான் முக்கியமானது. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

ADVERTISEMENT

எஸ்ஐஆர் மீது பழிபோடும் காங்கிரஸ்

தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்றன. நாடு முழுவதும் இப்போது குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்ததா? கேரளாவிலும் எஸ்ஐஆர் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால்தான் பாஜகவால் நாட்டுக்குச் சேவை செய்ய முடிகிறது. மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமாகவே மக்களின் ஆதரவைப் பெறுகிறோம். காங்கிரஸ் தனது தோல்விகளுக்கு எஸ்ஐஆர் மீது பழிபோட விரும்புகிறது. அடிமட்டத்தில் இறங்கிப் பணியாற்ற விரும்பாததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைகிறது. குடும்பத்தின் பெயரை வைத்தே அனைத்தையும் சாதித்துவிட முடியும் என இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது

ஒரு தீபம் ஏற்றுவதை நீங்கள் தடுக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும், தமிழ்நாட்டின் பெருமையை ஒட்டுமொத்த உலகிற்கும் எடுத்துக்காட்டுவதையும் உங்களால் தடுக்க முடியாது. ஒரு தீபத்தை ஏற்றவிடாமல் தடுத்ததன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளீர்கள். இன்று ஒரு தீபம் ஏற்றுவதைத் தடுத்துள்ளீர்கள். நாளை யாரும் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்வீர்களா? அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? நமது அரசியலமைப்புச் சட்டம் இதைத்தான் வழங்கியிருக்கிறதா?

மாணிக்கம் தாகூரால் சொல்ல முடியுமா?

நமது மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது. டாக்டர் அம்பேத்கர் இதனை அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதியுள்ளார். காங்கிரஸ் இதனை நம்புகிறதா? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரால் நாளை ஒரு மேடையில் ஏறி நின்று, அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறேன்; மத சுதந்திரத்துக்கான உரிமையை நம்புகிறேன் என்று சொல்ல முடியுமா? அவரால் முடியாது. தமது தலைவரைப் போலவே அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை சட்டைப் பையில் வைத்துக்கொள்ளவே அவர் விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அந்தப் புத்தகத்தைத் திறந்தாவது பார்த்திருக்கிறீர்களா? என என்றாவது ஒரு நாள் அவர்களிடம் கேட்க வேண்டும்.

மதுரை ரயில் நிலையத்தில் இறை நம்பிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை முழுமையாக மறுகட்டமைப்பு செய்து வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வளவு அழகாக மாறப் போகிறது என்பதைப் பாருங்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சென்னை எக்மோர் எனக் குறிப்பிட்டனர். தமிழ் மொழியின் மீது பெருமை கொண்டு சென்னை எழும்பூர் என்று அழையுங்கள் என அவர்களிடம் தெரிவித்தேன். எக்மோர் என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. வாக்குறுதிகள் செயல்வடிவம் பெற்று வருகின்றன.

மதுரை ரயில் நிலையத்தின் புதுப்பிக்கும் படம் இது.. எங்களது இறை நம்பிக்கையை இந்த ரயில் நிலையத்தின் ஓர் அங்கமாக இடம்பெறச் செய்வதை முதலமைச்சராலும் காங்கிரஸாலும் தடுக்க முடியுமா?

இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பைப் பாருங்கள். இந்த ரயில் நிலையத்திலேயே ஒரு தீபம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வந்து அங்கே தீயணைப்பு வண்டியை நிறுத்துவார்கள்.

அவர்கள் அப்படித்தான். நமது நாடு, நமது கலாச்சாரம், நமது நாகரிகம் ஆகியவற்றின் மீது நமக்கு எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அனைத்தையும் நாம் மறந்துவிட வேண்டும் என விரும்புகிறார்கள். இன்று தீபம் ஏற்றுவதைத் தடுக்கிறார்கள். நாளை கோயிலுக்குச் செல்லாதீர்கள் என்பார்கள். கோயில்களை மூடுவார்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தவெக அரசுக்கு சவால்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சிக்கு ரூ.870 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்த நிதி ஒதுக்கீடு சுமார் 9 மடங்கு அதிகரித்து ரூ.7,600 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.48,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவோம். ஆனால் மாநில அரசும் தனது கடமையைச் செய்ய வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்துவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக சுமார் 4,800 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் 1,253 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசு நிலம் கொடுக்கத் தயாராக இல்லாதபோது ரயில்வே எப்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும்? மத்திய அரசு 2 அடி எடுத்து வைத்தால் மாநில அரசும் ஓர் அடி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் மாநிலமும் மக்களும் முன்னேற முடியும்.

இந்த மேடையில் இருந்து தவெக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள். நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுங்கள். எந்தத் தடையும் இல்லாமல் அனைத்து ரயில்வே திட்டங்களையும் நிறைவேற்றுவோம். எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் வழங்குவோம். உங்களது பொறுப்புகளில் இருந்து நழுவாதீர்கள்.

77 ரயில் நிலையங்கள் மறுகட்டமைப்பு

மதுரை, காட்பாடி ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. சின்னசேலம், மொரப்பூர், மணப்பாறை, பொள்ளாச்சி, திருவாரூர், குன்னூர், உதகமண்டலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் படங்கள்.. இவை அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன.

அந்தந்தப் பகுதிகளின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்களின் கட்டிடக்கலை அமைந்துள்ளன. பல ரயில் நிலையங்களின் பணிகள் அடுத்த சில மாதங்களில் நிறைவடையும்.

73 நிமிடங்களில் சென்னை- பெங்களூரு

தமிழ்நாட்டில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளன. மத்தியில் பாஜக அரசு இருப்பதால் தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத் ரயில்கள் கிடைக்காது என எந்த அடிப்படையும் இல்லாமல் குற்றம் சாட்டினார்கள். நமது அடுத்த கனவு புல்லட் ரயில். புல்லட் ரயில் சேவை வந்த பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிடும். தற்போது சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு காரில் செல்ல 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. புல்லட் ரயில் வந்தால் வெறும் 73 நிமிடங்களில் பெங்களூரு செல்ல முடியும். காலையில் சென்னையில் இட்லி, சாம்பார், வடை சாப்பிட்டுவிட்டு பெங்களூருவுக்குச் சென்று மைசூர்பாகு சாப்பிட்டுவிட்டு இரவு மீண்டும் சென்னைக்கு வந்து ஆப்பம் சாப்பிடலாம்.

ஹைதராபாத்- அமராவதி- சென்னை இடையேயான புல்லட் ரயில் பயணம் 3 மணி நேரமாக இருக்கும். இதில் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால் நமது புல்லட் ரயில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் என்று இன்று நம்மால் பெருமையுடன் சொல்ல முடிகிறது. அதன் உற்பத்தியில் பெரும்பகுதி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி மையங்களை உருவாக்கியுள்ளோம். மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் பல்வேறு மின்னணு உதிரிபாகங்கள் தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டியில் ரயில்வே சக்கரங்கள் உற்பத்தி

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் அதிக வலிமை கொண்ட ரயில்வே சக்கரங்களை உற்பத்தி செய்ய உள்ளோம். இதற்கான தொழிற்சாலை தற்போது தயாராக உள்ளது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ரயில்வே சக்கரங்களை ஏற்றுமதி செய்வோம்.

ரயில்களின் உந்துவிசைத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தோம். முதலில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு ஏற்றுமதி செய்தோம். பின்னர் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம். இந்த ஆண்டு ஜப்பானில் இருந்தும் ஆர்டர் கிடைத்துள்ளது.

முருகப்பெருமான் நமது நாகரிகத்தின் ஓர் அங்கம்

நமது பணியில் பெருமை கொள்ள வேண்டும். நமது மக்களைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். நமது கலாச்சாரம், நமது இளைஞர்களின் திறமை, நமது நாகரிகம் ஆகியவற்றில் பெருமை கொள்ள வேண்டும். இதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஒரு தீபம் உங்களுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தப் போவதில்லை. தீபம் என்பது நமது நாகரிகத்தின் ஒரு பகுதி. முருகப்பெருமான் நமது நாகரிகத்தின் ஒரு பகுதி. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். நமது உரிமைகளுக்காகப் போராடுவோம். நமது அரசியலமைப்புச் சட்டத்துக்காகப் போராடுவோம். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவையும் வளர்ந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம். இவ்வாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel