தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படைப் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் திலீபன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிட மாறுதல் பெற்றுச் சேரன்மகாதேவிக்குச் செல்லவிருந்தார்.
இந்நிலையில், அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலர் ஒருவரிடம், அவர் ஆபாசமாகவும் பாலியல் ரீதியாகவும் பேசிய வாட்ஸ்அப் சாட் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், தன் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்று விளக்கம் அளித்து திலீபன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று அந்தப் பெண் காவலர் திலீபன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து முறைப்படி புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி தேஷ்முக் சேகர் சஞ்சய், காவல் ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.









