டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு எதிராக, காத்திருந்து கணக்கு தீர்க்கும் நிர்மலா சீதாராமன்

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் எக்ஸ் தளத்தில் ஒன் அண்ட் ஒன்லி அண்ணாமலை என்ற ட்ரெண்டிங் வாசக லிங்க்குகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Annamalai Vs Nirmala sitharaman

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“கடந்த மார்ச் 25ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அதன் மூலம் அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்… மார்ச் 28ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து சந்தித்தார் அமித்ஷா. டெல்லியில் அமித்ஷா, ஜேபி நட்டா, பி எல் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய அண்ணாமலை… ‘அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்ற எண்ணத்தில் டெல்லி மேலிடம் இருக்கிறது. அது நமக்கு சரிப்பட்டு வராது. என்னுடைய முடிவை நான் தெரிவித்து விட்டேன்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் 30 கோவை விமான நிலையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், ‘கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வதையே இறுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் கூட்டணி பற்றி பேச விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டை , கட்சியை நான் வளர்த்த விதம் பற்றி தலைமையிடம் தெரிவித்துவிட்டேன்’ என்று கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று சொன்னீர்களே? இப்போது அந்த நிலைமை வந்திருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அண்ணாமலை வார்த்தை மாறமாட்டான். நீங்க பாக்க தான் போறீங்க’ என்று சஸ்பென்ஸ்சாகவே பதில் சொன்னார்.

டெல்லியில் என்ன நடக்கிறது என்று விசாரித்தபோது… உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னை சந்தித்த அண்ணாமலையிடம், ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் திமுக, அதிமுக அல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தீர்கள். நமக்கு ஐந்து இடங்கள் வரை கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூறினீர்கள். ஆனால் தேர்தல் முடிவில் வாக்கு சதவீதம் ஓரளவுக்கு இருந்தாலும், நமக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதைவிட திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி விட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம் என்று நம் கட்சியிலேயே சிலர் வலியுறுத்தினார்கள். ஆனால் மாநிலத் தலைவரான நீங்கள் உறுதியாக நின்றதால் அந்த முடிவை எடுத்தோம்.

இந்த நிலையில் நமக்கு 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து கணிசமான எம்பிக்கள் வேண்டும். அப்படி வேண்டுமென்றால் 2026 இல் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். இப்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக அல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியால் 2026 இல் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. அதே நேரம் திமுகவை நாம் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

எனவே அதிமுகவோடு கூட்டணி வைப்பது என்பது தான் தமிழ்நாட்டில் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நமக்கு சாதகமான ரிசல்ட்டை கொண்டு வர உதவும்’ என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

அப்போது அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் 2031 சட்டமன்றத் தேர்தல்தான் பாரதிய ஜனதா கட்சிக்கான தேர்தலாக இருக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக- அதிமுக அல்லாத மாற்று அணியை பாஜக வலிமையாக கட்டமைத்தது. இதே அணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால் அது பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் தொடர்ந்து முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும். அதே நேரம் நீங்கள் சொல்வது போல் 2029 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி சிந்தித்து… அதிமுக கூட்டணி வேண்டும் என முடிவெடுத்தால் அதை நான் எதிர்க்கவில்லை.

அதே நேரம் அப்படி ஒரு சூழலில் என்னால் மாநிலத் தலைவராக பணியாற்ற இயலாது. என்னுடைய இயல்புக்கு சரியாக இருக்காது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு நாம் கூட்டணி வைக்கிறோம் என்று முடிவு எடுத்து விட்டால்… தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற மிகக் குறைவான இடங்களைப் போல நாம் பெற்றுவிடக்கூடாது. கிட்டத்தட்ட அதிமுகவுக்கு இணையான இடங்களில் நாமும் போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் பாஜகவின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்த முடியும். இதை என்னுடைய ஆலோசனையாக நான் உங்களிடம் முன்வைக்கிறேன். மற்றபடி உங்கள் முடிவு’ என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

இதற்குப் பிறகுதான் தமிழகம் வந்து தனக்கு நெருக்கமானவர்களிடம், ’அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் மனநிலைக்கு அமித்ஷா வந்திருக்கிறார். டைம்ஸ் நவ் நிகழ்ச்சியில் கூட அதிமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று தெரிவித்துவிட்டார். இனிமேல் எனக்கு வேலை இல்லை’ என்று மனம் திறந்து இருக்கிறார்.

இந்த அடிப்படையில் தான் அவரது ஆதரவாளர்களும் அவரது ஆதரவு பத்திரிகையாளர்களும் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றினால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தான் இழப்பு என்றும், அண்ணாமலை போல தமிழ்நாடு முழுதும் செல்வாக்கு பெற்ற இன்னொரு இளைய தலைவர் இப்போதைக்கு பாஜகவில் இல்லை என்றும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

அதேநேரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றியே தீருவது என்ற முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே அண்ணாமலைக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இணக்கமில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வரும்போது அண்ணாமலை சென்னையிலேயே இருந்தாலும் அவரை சந்திக்க மாட்டார். இதே போல தொடர்ந்து சில முறை தவிர்த்த நிலையில் இதுவே பாஜகவில் பேசுபொருளானது.

மேலும் கடந்த செப்டம்பர் 2024 இல் கோவையில் நடந்த தொழில் மற்றும் வணிக பிரமுகர்களுடனான சந்திப்பில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், பன் மற்றும் கிரீம்க்கு உள்ள ஜிஎஸ்டி வித்தியாசம் பற்றி நிதியமைச்சரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

அந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது. அதற்கு அடுத்த நாளே அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். அப்போது வானதி சீனிவாசனும், சில பாஜக நிர்வாகிகளும் இருந்தார்கள்.

இந்த நிலையில் அன்னபூர்ணா சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக தளங்களில் கசிய விடப்பட்டது. இது முதலில் வெளியான வீடியோவை விட மிக அதிக அளவில் வைரலானது. Annamalai Vs Nirmala sitharaman

தன்னிடம் நியாயமான கோரிக்கை வைத்த ஹோட்டல் அதிபரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார் நிர்மலா சீதாராமன் என்று இந்தியா முழுவதும் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா சீதாராமன் வீடியோ எவ்வாறு வெளியானது என்று விசாரித்த போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தான் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள், வானதி சீனிவாசன் மற்றும் தன்னுடன் இருக்கும் உட்கட்சி பூசலை வெளிப்படுத்துவதற்காக அண்ணாமலை தரப்பினர் இதுபோல செய்திருக்கிறார்கள் என்று அறிந்தார். அதை டெல்லியிடமே புகார் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

அப்போது லண்டனில் இருந்த அண்ணாமலை அந்த வீடியோவை வெளியிட்டதற்காக தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனைக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் தனிப்பட்ட முறையிலும் இதை பெரிய காயமாக உணர்ந்தார் நிர்மலா சீதாராமன்.

இந்த நிலையில் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சந்தித்தபோது எப்படி அண்ணாமலை மீது புகார்களை வைத்தாரோ.. அதற்கு சற்றும் குறையாமல் கோவை அன்னபூர்ணா வீடியோ உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அண்ணாமலை மீது நிர்மலா சீதாராமனும் கடுமையான புகார்களை முன் வைத்திருக்கிறார்.

அண்ணாமலை பாஜகவை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தனிப்பட்ட வன்மத்தோடு பாஜகவுக்காக உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் மூத்த தலைவர்களை சிறுமைப்படுத்தி அரசியலில் இருந்தே ஒதுங்க வைக்கிறார் என்பதும் நிர்மலா சீதாராமனின் புகார்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் தான் அண்ணாமலையை மாற்றுவது தொடர்பான தீவிர ஆலோசனையில் இருக்கிறது கட்சி மேலிடம். மேலும் தனக்கு தேசிய அளவில் பதவிகள் வேண்டாம் என்றும் மாநில அரசியலிலேயே தான் தொடர்ந்து ஈடுபட விரும்புவதாகவும் டெல்லியிடம் தெரிவித்து வந்திருக்கிறார் அண்ணாமலை.

வருகிற ஏப்ரல் முதல் வாரம் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் நிலையில் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share