ஸ்ஸ்ஸ்.. முடியலைப்பா.. “அமாவாசை நாளில் பிச்சை எடுக்கும் பயிற்சி”- வைரலாகும் ‘தினுசு’ போஸ்ட்!

By Mathi

|

Published on 17 Nov 2026, 1:50 PM

Begging Training

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதேபோல பணத்தைப் பறிக்க ஆயிரம் மோசடிகளும் நடக்கின்றன. வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், முதலீட்டை இரட்டிப்பாக்கலாம், சில நாட்களில் கோடீஸ்வரராகலாம் என விதவிதமான விளம்பரங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமானது. அதுதான் ‘ஒருநாள் பிச்சை எடுக்கும் பயிற்சி!’

பிச்சை எடுப்பதற்குக்கூட பயிற்சியா என்று ஆச்சரியப்பட வேண்டாம். இந்தப் பயிற்சியில் சேருவதற்குச் சில தகுதிகளும் இருக்கின்றன. அதைப் படித்தால்தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கும்!

ADVERTISEMENT

கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே அனுமதி!

மதுரையைச் சேர்ந்த ‘தம்மரிஷி சாயல்குடி ஆதீனம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு விளம்பர போஸ்டர் பரவி வருகிறது.

அதில் ‘பிச்சை எடுக்கும் பயிற்சி’ என்ற தலைப்புடன், பயிற்சியில் சேருவதற்கான தகுதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முதலாவது தகுதி, சொத்து மதிப்பு குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கு மேல் இருக்க வேண்டும்.

இரண்டாவது தகுதி, மாத வருமானம் ரூ.80 ஆயிரத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மூன்றாவது தகுதி, வயது 40-க்கு மேல் இருக்க வேண்டும்.

அதாவது, சொந்தமாகச் சொத்தும் நல்ல வருமானமும் இருப்பவர்களுக்குத்தான் பிச்சை எடுக்கப் பயிற்சி!

இந்தத் தகுதிகளுடன் வருபவர்களை மாதந்தோறும் அமாவாசை அன்று ஏதாவது ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைப்பார்களாம்.

இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது.

பயிற்சிக்குக் கட்டணம் கிடையாது

உணவும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகப் பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இங்கே பிச்சை எடுப்பதற்குக் கட்டணம் கிடையாது என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம்.

இந்த விளம்பரத்துடன் இன்னொரு போஸ்டரும் பரவி வருகிறது. அதில் சந்நியாச தர்மத்தில் பிச்சை பெறுவதற்கான ஆன்மீக விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

மனுஸ்மிருதி, சந்நியாச உபநிடதம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, பிச்சை பெறுவது அகந்தையைக் குறைக்கும், பற்றின்மையை வளர்க்கும், எளிமையை உணர்த்தும் என்று விளக்கப்பட்டுள்ளது.

சொத்தும் பணமும் இருந்தாலும் அவற்றின் மீது பற்றில்லாமல் வாழ வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று போஸ்டர் கூறுகிறது.

இது என்ன பிரமாதம்! என நாமும் களத்தில் இறங்கினோம் விவரங்களை கேட்க..

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை நமது மின்னம்பலம் சார்பில் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், தொலைபேசி அழைப்புக்குப் பதிலாக வாட்ஸ்அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு ஒரு மெசேஜ் வந்தது.

இதையடுத்து வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு, பயிற்சி குறித்த விவரங்களைக் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த அந்த எண்ணின் நிர்வாகி, “உங்களுடைய பெயர், ஊர், தொழில், வயதைக் குறிப்பிடுங்கள். 18 நபர்கள் சேர்ந்த பின்பு அழைத்து வருவோம்” என்று தெரிவித்தார்.

பயிற்சி குறித்து கூடுதலாக அறிய விரும்புவதாகவும், பெயர், வயது உள்ளிட்ட விவரங்களையும் தெரிவித்தோம்.

அப்போது பயிற்சி குறித்து நேரடியாக விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, யூடியூப் வீடியோ ஒன்றின் லிங்கை அனுப்பினர்.

மேலும், “இந்த யூடியூப் சானலைச் சென்று தொடர்ந்து கவனித்து வாருங்கள். எல்லா விவரங்களும் இதைத் தொடர்ந்து பதிவிடப்படும்” என்று கூறினார்.

இந்த யூடியூப்பில் இருப்பவர் நீங்கள்தானா? என கேட்டால் “இந்த வீடியோவில் உள்ளவர் தான் குருநாதர். சம்மட்டி சித்தர் என்ற தம்மரிஷி” என்கிற பதில் வருகிறது.

ஆசிரமம் எங்கே இருக்கிறது என கேட்டதற்கு, ”சாயல்குடி ஆதீனம் ஆசிரமம் மதுரை ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ளது. ஆசிரமத்தின் அலுவலகம் மதுரை நகரில் உள்ளது” என்பது நமக்கு கிடைத்த பதில்.

அடுத்ததாக ஒரு கேள்வி கேட்டோம்.. ”இதுவரை எத்தனை பேட்ஜ் பிச்சை எடுத்துள்ளனர் அய்யா?” என்பதுதான் அந்த கேள்வி.

இதற்கு வந்த பதில் என்ன தெரியுமா?

“2014 ஆம் ஆண்டு முதல். அதை கணக்கில் கொள்ளவில்லை. இப்போதுதான் சோசியல் மீடியா மூலம் செய்கிறோம். இதற்கு முன்பு மொத்தம் 200 பேர் எடுத்துள்ளார்கள்” என்பது.

இதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் இந்த உரையாடலை நாமும் முடித்துவிட்டோம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel