முதல்வர் ஸ்டாலினும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் இன்று (ஜூலை 31)சந்தித்துக் கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆறு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஜூலை 27ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வழக்கம்போல் வாக்கிங் சென்றார்.
அவர் வழக்கமாக செல்லும் அடையார் பார்க்கிற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று வாக்கிங் சென்றார்.
அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். முதல்வரின் உடல்நிலை குறித்து ஓபிஎஸ் நலம் விசாரித்துள்ளார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினும் ஓபிஎஸிடம் நலம் விசாரித்தார்.
இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
2026 தேர்தலை ஒட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கும் நிலையிலும், இன்று முக்கிய முடிவை அறிவிக்க போகிறேன் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையிலும் இருவரும் சந்தித்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன்,வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக்கு செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வத்திடம், என்டிஏ கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறிவிட்டு ஓபிஎஸ் காரில் புறப்பட்டார்.
