“ஸ்கூல்ல சமத்து… வீட்டுக்கு வந்தா ரௌத்திரம்!” – உங்கள் குழந்தை ஏன் பள்ளி முடிந்து வந்ததும் அடம் பிடிக்கிறது? ஒரு உளவியல் விளக்கம்.

Published On:

| By Santhosh Raj Saravanan

after school restraint collapse child meltdown parenting psychology tips tamil

மாலை 4 மணி. பள்ளிக்கூடம் முடிந்து குழந்தையை அழைத்து வரச் செல்கிறீர்கள். டீச்சரிடம் விசாரித்தால், “உங்கள் பையன் ரொம்ப சமத்து (Angel), அமைதியா பாடம் கவனிச்சான்,” என்று சான்றிதழ் கொடுக்கிறார். பெருமையோடு குழந்தையை காரில் அல்லது பைக்கில் ஏற்றுகிறீர்கள்.

ஆனால், வண்டி ஏறிய அடுத்த நொடியே… அதுவரை அமைதியாக இருந்த குழந்தை, திடீரெனக் கத்தத் தொடங்குகிறது, அழுகிறது, அல்லது காரணமே இல்லாமல் உங்களிடம் சண்டை போடுகிறது. உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. “இப்போதானே டீச்சர் புகழ்ந்துட்டு போனாங்க… அதுக்குள்ள என்னாச்சு?” என்று குழம்புகிறீர்களா?

ADVERTISEMENT

கவலை வேண்டாம். உங்கள் குழந்தை செய்வது நாடகம் அல்ல. இதற்குப் பெயர்தான் ‘ஆஃப்டர் ஸ்கூல் ரெஸ்ட்ரெய்ன்ட் கொலாப்ஸ்’ (After-School Restraint Collapse).

அது என்ன ‘ரெஸ்ட்ரெய்ன்ட் கொலாப்ஸ்’? இதை எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் ஒரு இருக்கமான காலணியை (Tight Shoes) நாள் முழுவதும் அணிந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் அதைக் கழற்றினால் எப்படி இருக்கும்? ஒருவித ஆசுவாசம் கிடைக்கும் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

ADVERTISEMENT
  • பள்ளியில் குழந்தைகள் நாள் முழுவதும் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் (Self-Control). டீச்சருக்குப் பயந்து அமைதியாக உட்காருவது, பிடிக்காத பாடத்தைக் கவனிப்பது, நண்பர்களுடன் சண்டையைப் பொறுத்துக்கொள்வது என நாள் முழுவதும் ஒரு ‘முகமூடி’ அணிந்து இருப்பார்கள்.
  • அவர்கள் உங்களைப் பார்த்ததும், அந்த முகமூடியைக் கழற்றி எறிகிறார்கள். நாள் முழுவதும் தேக்கி வைத்திருந்த கோபம், களைப்பு, பசி அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுகிறது.

இது ஒரு நல்ல விஷயம்! நம்புங்கள், இது உங்களுக்குக் கிடைத்த பாராட்டு. குழந்தைகள் ஏன் உங்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள் தெரியுமா? ஏனென்றால், நீங்கள்தான் அவர்களின் ‘பாதுகாப்பு மண்டலம்’ (Safe Space). “அம்மா/அப்பா கிட்ட எப்படி வேணாலும் இருக்கலாம்; அவங்க என்னைத் தப்பா நினைக்க மாட்டாங்க,” என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. வெளியுலகில் காட்ட முடியாத கோபத்தை, அவர்கள் பாதுகாப்பான இடத்தில் இறக்கி வைக்கிறார்கள்.

இதை எப்படிச் சமாளிப்பது?

ADVERTISEMENT
  1. கேள்விகளை நிறுத்துங்கள்: குழந்தை வந்தவுடனே, “இன்னைக்கு என்ன ஹோம் ஒர்க்?”, “மார்க் எவ்வளவு?” என்று நச்சரிக்காதீர்கள். அவர்களுக்குச் சிறிது நேரம் அமைதி (Quiet Time) தேவை.
  2. உடனடி எனர்ஜி (Snacks First): பல நேரங்களில் இந்த கோபத்திற்குக் காரணம் ‘பசி’ (Hanger). வந்ததும் பிஸ்கட் அல்லது பழச்சாறு கொடுங்கள். வயிறு நிறைந்தால் பாதிப் பிரச்சனை தீரும்.
  3. கட்டிப்பிடியுங்கள்: அவர்கள் கத்தும்போது பதிலுக்கு நீங்களும் கத்தாதீர்கள். எதுவும் பேசாமல் இறுக்கமாக ஒரு அணைப்பு (Hug) கொடுங்கள். அது அவர்களின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.

எனவே, நாளை உங்கள் குழந்தை பள்ளி முடிந்து வந்து அடம் பிடித்தால், கோபப்படாதீர்கள். “நாள் பூரா கஷ்டப்பட்டுட்டான்… ரிலாக்ஸ் ஆகறான்,” என்று நினைத்துக் கொள்ளுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share