ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலர் (6,800 கோடி ரூபாய்) கடன் வழங்கும் திட்டத்துக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அந்த பணத்தை தங்களுடைய நாட்டின் வளர்ச்சி பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு பதிலாக ராணுவ செலவுகளுக்கு பயன்படுத்துவதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இது கடன் வழங்கும் வங்கிக்கும் எதிர்காலத்தில் பெரிய நிதி ஆபத்துகளை ஏற்படுத்தும் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது. ADB sanctioned 800 million dollars to india

இந்தக் கடன் திட்டத்தில், $300 மில்லியன் கொள்கை அடிப்படையிலான கடனாகவும், $500 மில்லியன் திட்ட அடிப்படையிலான உத்தரவாதமாகவும் உள்ளது.
கொள்கை அடிப்படையிலான கடன் (Policy-Based Loan – PBL):
ஒரு நாட்டின் மொத்த அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் (பட்ஜெட், வரி, நிதி நிர்வாகம், வெளிநாட்டு முதலீடு கொள்கை போன்றவை) மேம்பட வேண்டும் என்ற நோக்கில் வழங்கப்படும் கடன்.
எப்போது வழங்கப்படுகிறதா?
நாடுகள் தங்கள் சீர்திருத்தங்கள் செய்ய முன்வந்தால், அதற்கு ஊக்கமாக இந்த கடனை வழங்குவர்.
எப்படி பயன்படுத்தப்பட வேண்டும்?
இந்த கடனைப் பயன்படுத்துவதற்கான தனித் திட்டம் இருக்க வேண்டியதில்லை. பொதுவாக அரசு செலவுகளுக்காக (பட்ஜெட்டில்) செலவழிக்கலாம்.
உதாரணம்:
வரி வசூல் அமைப்பை மேம்படுத்துவதற்கான சட்ட மாற்றம், நிதி மேலாண்மை முறைகளை மையப்படுத்துதல் போன்ற பெரிய அளவிலான கொள்கை மாற்றங்களுக்கு உதவியாகக் கொடுக்கப்படும்.
திட்ட அடிப்படையிலான உத்தரவாதம் (Program-Based Guarantee – PBG):
அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்காக (project/program) சிறு அல்லது நடுத்தர நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் போது, அந்தக் கடனை உத்தரவாதம் அளித்து பாதுகாப்பது தான் இது.

எதற்கு இது?
பணத்தை நேரடி உதவியாக கொடுக்காமல், திட்டத்துக்கான தனியார் அல்லது வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் ஒரு நம்பகத்தன்மை உண்டாக்கும் உத்தி.
எப்படி இது வேலை செய்கிறது?
ஒரு திட்டம் தோல்வியடைந்தால், அந்த திட்டத்திற்கு கடன் வழங்கிய நிதி நிறுவனத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கியை போல் ஒரு வங்கி பணம் திருப்பி செலுத்தும் (guarantee) வாக்குறுதியை வழங்கும்.
உதாரணம்:
பாகிஸ்தான் அரசு பொதுத் திட்டங்களில் தனியார் பங்கீடுகளைப் பெற சில வங்கிகளிடம் கடன் வாங்கினால், அந்த வங்கிகள் பணம் கொடுக்க தயங்கலாம். அப்போது ஆசிய வளர்ச்சி வங்கி உத்தரவாதம் அளித்து, “தோல்வியடைந்தால் நாங்கள் பணத்தை திருப்பிக் கொடுப்போம்” என உறுதி அளிக்கும். இதன் மூலம் திட்டம் துவங்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆசிய வளர்ச்சி வங்கி இதை பாகிஸ்தானின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நிதி நிலை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலை:
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் வரி வசூல் விகிதம் (Tax to GDP ratio) மிகக் குறைந்துள்ளது. 2018ல் 13% இருந்தது, 2023ல் 9.2% ஆக குறைந்துள்ளது.
அதே நேரத்தில், ராணுவ செலவுகள் அதிகரித்துள்ளன. இது வெளிநாட்டு உதவித் தொகைகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தானின் சீர்திருத்தங்கள் மிகக் குறைவாகவே பயனளிக்கின்றன என்றும், அதற்கான காரணம் ராணுவம் அதிகமாக பொருளாதாரத்தில் தலையிடுவதுதான் என்றும் இந்தியா கூறியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து, இந்தியா பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் 13 ராணுவ இலக்குகளை தாக்கியது. இந்த நடவடிக்கைகள் நடந்த சில நாட்களுக்குப் பிறகே, ஆசிய வளர்ச்சி வங்கி பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் முடிவை எடுத்துள்ளது.