கொரோனாவின்போது நாம் வீட்டிலேயே இருந்து பழகிவிட்டதால் நம் உணவுமுறை முற்றிலும் மாறிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் செய்து பீட்சா, பர்கர், அவசர சமையலுக்காக நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டா, சூப் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதையும், இன்னும் சிலரோ சிக்கன், மட்டன் போன்ற ஹெவி உணவுகளைச் சாப்பிடுவதையும் வழக்கமாக்கி விட்டார்கள்.
இதுபோன்ற முறையற்ற உணவு முறையால் அஜீரணப் பிரச்சினையில் தொடங்கி உடல் எடை அதிகரித்தல், அல்சர் உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம்?
வேலைகளைச் செய்ய ஆற்றல் பெற வேண்டும் என்பதே நாம் உணவு உட்கொள்வதற்கான முக்கியக் காரணம். ஒருவர் வியர்வை வெளியே வர வேலை செய்யும்போதுதான் அவர் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் ஆற்றலாக மாற்றப்படும். அவ்வாறில்லாமல் உடலியக்கம் குறைவாக இருக்கும் நேரத்தில் நாம் எடுத்துக்கொண்ட கலோரிகள் ஆற்றலாக மாறாமல் நம் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதுவே உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம்.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தன்மையைப் பொறுத்து நமக்கு அஜீரணம் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மற்ற நாள்களில் 1,800 கலோரிகள் கொண்ட உணவை ஒருவர் எடுத்துக்கொண்டால் என்றால், உடலுழைப்பு குறைவாக உள்ள காலத்தில் அதை 1,500 கலோரிகளாகக் குறைத்துக்கொள்ளலாம். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை நம் சாப்பாட்டில் குறைத்தாலே பெரும்பாலான கலோரிகள் குறைந்துவிடும்.
நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் உப்பு, காரம், எண்ணெய் சேர்ப்பதைக் குறைக்கலாம். பலர் நூடுல்ஸ், பாஸ்தா போன்ற இன்ஸ்டன்ட் உணவுகளுக்கு அடிமையாகியிருப்பார்கள். அவற்றில் ருசிக்காக எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்தச் சூழலில் லேசான உணவுகள் எடுத்துக்கொண்டாலும் நமக்கு அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த தீர்வு… ரசம்.
வாரத்தில் மூன்று நாள்களாவது நம் உணவில் ரசம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மஞ்சள், சீரகம், மிளகு, கொத்தமல்லித்தழை உள்ளிட்ட மருத்துவக் குணமிக்க சமையல் பொருட்கள் நாம் செய்யும் ரசத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். பொதுவாகவே இஞ்சி, மஞ்சள், சீரகம், மிளகு போன்ற பொருட்களை நம் உணவில் சேர்த்துவந்தால் அஜீரணக் கோளாறுகள் எதுவும் ஏற்படாது.
பலர் வேலை டென்ஷனில் சாப்பிடுவதையே தவிர்க்கிறார்கள். உணவு எடுத்துக்கொள்வதில் நேர ஒழுங்குமுறையை விட முக்கியம் பசிக்கும் வேளைகளில் தவறாமல் உணவு உட்கொள்வது.
நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தால் சரியான நேரத்தில் பசியெடுக்கும். சரியான உணவு முறையோடு சேர்த்து சிறிது நேர தியானம், ஒரு மணிநேர உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உங்கள் உடல்நலத்துடன் மனநலத்தையும் காக்கும்” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.
கிச்சன் கீர்த்தனா: அஜீரணமா… எந்த உணவை எடுத்துக்கொள்வது, எதைத் தவிர்ப்பது?
Published On:
| By Minnambalam
Minnambalam
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
