ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா,
“ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஒடிசா கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்திய துணை கண்டத்தை உலுக்கியிருக்கிற விபத்தில் தமிழகத்தின் முதல்வர் விரைவாக பணியாற்றி தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்லாமல் விபத்தில் சிக்கிய அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
திமுக இந்த விபத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் முந்தைய ஆட்சி காலங்களில் ரயில் விபத்துகள் நடந்தபோது நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி போன்றோர் தார்மீக ரீதியாக பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
அந்த காலத்தை விட இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அருகில் வைத்துக்கொண்டே ” நான் மத்திய அமைச்சராக இருந்தபோது ரயில் விபத்துக்களை தடுப்பதற்காக டிகாஸ் என்ற சிஸ்டத்தை கொண்டு வந்தோம்.
அந்த சிஸ்டத்தை எங்களுக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக கவாச் என்று பாஜக அரசு பெயர் மாற்றியது.
இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 70 ஆயிரம் கி.மீ அளவிற்கு ரயில்வே பாதைகள் உள்ளது. அதில் 1500 கி.மீ தொலைவிற்கு மட்டும் தான் கவாச் கருவியை பொருத்தியுள்ளீர்கள்.
மொத்த இருப்பு பாதையில் இரண்டு சதவிகிதம் கூட கவாச் அமைக்கப்படவில்லை” என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடமிருந்து ரயில் விபத்து குறித்து போதுமான பதில் வரவில்லை.
தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் இந்த கோர விபத்திற்கு யார் காரணம் சிஸ்டமா, தனி மனிதரா? சிஸ்டம் என்றால் பொறுப்பேற்பது யார்?
ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது சிறிய பிரச்சனை என்றால் முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறும் பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் ரயில் விபத்தில் இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை.
பாஜக விளம்பரம் தேடிக்கொள்வதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. ரயில்வே துறையில் போதிய கவனம் செலுத்தாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கு பிறகு மத்திய அரசு ஸ்தம்பித்து போயுள்ளது.
சிவிசி மற்றும் சிஏஜி ரிப்போர்ட்டில் தவறு செய்கிற அமைச்சரவையில் ரயில்வே அமைச்சகமும் உள்ளது.
மத்திய அரசு அதனை கண்டுக்கொள்ளவில்லை. ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
செல்வம்
மோதல் தடுப்பு கருவி எங்கே?: நேரடியாகவே ரயில்வே அமைச்சரிடம் கேட்ட மம்தா
“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி

